For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மேல்முறையீட்டு விசாரணையில் பவானிசிங் ஆஜரானது சரியா, தவறா? 7ம் தேதி கிளைமாக்ஸ்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுகவின் அன்பழகன் தொடர்ந்த வழக்கில், 7ம்தேதி உச்சநீதிமன்றத்தில் இறுதிகட்ட வாதங்கள் நடைபெற உள்ளன.

கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜராகி வாதாட அனுமதிக்கக்கூடாது என்றும், ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனு மீதான இறுதி வாதங்கள் கடந்த 26ம் தேதியன்று தொடங்கியது. மனுதாரர் அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் அந்தியார்ஜூனா, விகாஸ் சிங் மற்றும் கர்நாடக அரசு சார்பில் என்.வி.ராவ் ஆகியோர் வாதங்கள் முடிவடைந்தன. நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விவாதம் நடைபெற்றது.

Jayalalithaa defends Bhavani Singh’s continuance as SPP

நாரிமன் சொன்னது என்ன?

ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் ஆஜரானார். அவர் கூறுகையில், "கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணைக்கு அரசு தரப்பில் வாதாட கர்நாடக அரசு, அரசு வக்கீலை நியமித்து இருக்கவேண்டும். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பவானிசிங்கை நியமித்த போது அன்பழகன் தரப்பிலும் அதற்கு எதிரான வாதங்கள் எதுவும் வைக்கப்படவில்லை.

அரசு வழக்கறிஞர் நியமனம் என்பது சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பானது. ஒரு கிரிமினல் வழக்கு, தண்டனை அறிவித்ததோடு முடிவு பெறுவது இல்லை. எந்த கிரிமினல் வழக்குக்கும் பல நிலைகளிலும் விசாரணைகள் உள்ளன. பவானிசிங் நியமனத்தில் விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு உள்ளன.

இந்த சொத்து குவிப்பு வழக்கில், வழக்கு தொடுத்த மாநிலம் தமிழகம் ஆகும். சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பின் முதல் பக்கத்தில் மனுதாரராக தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் சூப்பிரண்டு பெயர்தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அரசாங்கங்கள் வரும் போகும். ஆனால் ஒரு வழக்கில் புலன்விசாரணை நடத்தும் நிறுவனம் அப்படியே தொடரும்.

மேலும், பெங்களூருவில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மற்ற உரிமைகள் அனைத்தும் விசாரணைக்கு பொறுப்பான தமிழக அரசுக்கு உள்ளது.

அந்த நேரத்தில் அன்பழகன் தரப்பினர் இதுகுறித்து தடை ஏதும் கோரவில்லை. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பவானிசிங்கை நீக்கிய உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதுவே அவருக்கு கிடைத்த நற்சான்றிதழ். அப்போது அன்பழகன் இதை எதிர்க்கவில்லை. கர்நாடக அரசும் அமைதி காத்தது. கர்நாடக அரசு அமைதி காத்ததால் மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு தலையிட்டு அரசு வக்கீலை நியமித்தது" என்றார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, மேல்முறையீட்டு வழக்கில் அரசு வக்கீலை நியமிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அந்த சமயத்தில் கடிதம் எழுதியதா? என்று கேட்டனர். அதற்கு பாலி நாரிமன் பதில் அளிக்கையில், கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியாது என்றார். அப்போது குறுக்கிட்ட கர்நாடக தரப்பு வழக்கறிஞர் என்.வி.ராவ், "தமிழ்நாட்டில் அரசு மாறியது. எனவே இந்த நடைமுறையை நாங்கள் கடைப்பிடிக்கவில்லை" என்றார்.

ஜெ.தரப்பு வாதம் முடிந்தது!

ஜெயலலிதா தரப்பில் நாரிமன் முன்வைத்த இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.டி.துளசி தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:

நான் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதங்களுடன் ஒத்துப்போகிறேன். பல வழக்குகளில் அரசு வக்கீலாக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. தனிக்கோர்ட்டில் அரசு வக்கீல்கள் குறிப்பிட்ட வழக்குகளுக்காக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வழக்கின் பல நிலைகளிலும் அவர்கள் தொடருகிறார்கள். 2ஜி வழக்கிலும் அரசு வக்கீல் நியமிக்கப்பட்டபோது இந்த வழக்குக்கான தனி வழக்கறிஞர் என்றுதான் அந்த வழக்கு தொடர்பான உத்தரவிலும் குறிப்பிடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த வாதம் தொடர்ந்த போது நீதிமன்றத்தின் நேரம் முடிவடைந்ததால், வாதங்களை வருகிற 7ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடரும் என்று நீதிபதிகள் கூறினர். அன்று வழக்கு தொடர்பான அனைவரும் அங்கு இருக்க வேண்டும் என்றும் கூறினர்.

தீர்ப்பு தேதி?

கர்நாடக ஹைகோர்ட்டில், ஜெயலலிதா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான இரு தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும், பவானிசிங் தொடர்பான வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்தே, ஹைகோர்ட்டிலும் தீர்ப்பு தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்பழகனுக்காக இரு வழக்​கறிஞர்​கள்

பவானிசிங் விவகாரத்தை தி.மு.க மிகவும் முக்கியமாக எடுத்துக்கொண்டுள்ளது. எனவேதான், உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர்களான அந்தி அர்ஜுனாவும் விகாஷ் சிங்கும் ஆஜராகியுள்ளனர். அதாவது, ஒரே கோரிக்கைக்கு இரு வழக்கறிஞர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

English summary
The former Tamil Nadu Chief Minister Jayalalithaa on Wednesday argued that DMK leader K. Anbazhagan’s petition to remove Bhavani Singh as Special Public Prosecutor in the appeal on the Rs.66.65 crore disproportionate case is not a “genuine plea.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X