For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்ப்புக்கு பணிந்தது அரசு.. டி.கே.ரவி மர்ம சாவு வழக்கை சிபிஐ விசாரிக்கும்: சித்தராமையா அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி மர்மமாக மரணமடைந்துள்ள சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும் என்று சட்டசபையில் முதல்வர் சித்தராமையா இன்று அறிவித்தார். எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் நெருக்கடி மட்டுமின்றி, சோனியாகாந்தியின் அறிவுறுத்தலின்பேரிலும் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டதாக தெரிகிறது.

கர்நாடக வணிக வரித்துறை கூடுதல் கமிஷனர் டி.கே.ரவி கடந்த 16ம்தேதி தனது அப்பார்ட்மென்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சாவின் பின்னணியில் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் இருக்க கூடும் என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, சிபிஐ விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் மாநில அரசோ இந்த வழக்கை சிஐடி விசாரிக்கும் என்று அறிவித்தது. சட்டசபையில் முதல்வர் சித்தராமையா இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

Karnataka CM Siddaramaiah today will make an announcement in D.K.Ravi case

இதையடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் உக்கிரம் அடைந்தது. ரவி ஒக்கலிக ஜாதியை சேர்ந்தவர் என்பதால், மாநிலத்தில் பெருவாரியாக உள்ள ஒக்கலிக ஜாதியினரும் போராட்டத்தில் குதித்தனர். எனவே, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்குமாறு, சித்தராமையாவிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியதாக ஒரு தகவல் வெளியாகியது.

இதனிடையே பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, இந்த வழக்கு குறித்த மேலதிக தகவல்களை திங்கள்கிழமை, சட்டப்பேரவையில் தெரிவிக்க உள்ளேன் என்று கூறினார். அதேபோல இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடியதும், முதல்வர் எழுந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.

சித்தராமையா கூறியதாவது: டி.கே ரவி சாவு குறித்த வழக்கை, சிஐடி விசாரிக்கும் என்று நான் சட்டசபையில் கூறியிருந்தேன். அதையடுத்து, சிஐடி போலீசின் மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை தொடங்கிவிட்டது. சிஐடி விசாரணைக்கு நான் பரிந்துரைக்க காரணம், கர்நாடக போலீசாரும் சிபிஐ போலவே திறமையானவர்கள் என்பதால்தான்.

எடுத்த எடுப்பிலேயே, வேறு அமைப்பு மூலம் விசாரிப்போம் என்றால், நமது காவல்துறையின் திறமையை நாமே, குறைத்து மதிப்பிடுவதாகிவிடும் என்பதால் அவ்வாறு கூறியிருந்தேன். ஏனெனில், கர்நாடக சிஐடி இதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயலாற்றிய உதாரணம் உள்ளது.

எங்களது நோக்கம், இப்பிரச்சினையை மூடி மறைக்க வேண்டும் என்பது இல்லை. யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமும் இல்லை. கோலாரில் ரவி சிறப்பாக வேலை பார்த்தார். எனவேதான், அவரது மாமாவின் கோரிக்கையை ஏற்று பெங்களூருக்கு பணியிடமாற்றம் செய்து கொடுத்தேன். நல்ல அதிகாரிகள் சிறப்பாக வேலை பார்க்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பும்கூடவாகும்.

இந்த அரசுக்கு, சிஐடி மீது நம்பிக்கை உள்ளது. அதே நேரம், சிபிஐ விசாரணையை நான் என்றுமே குறை கூறியது கிடையாது. பாஜகவினர்தான் மத்தியில் எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில்,, "சிபிஐ என்பது காங்கிரஸ் விசாரணை அமைப்பு" என்று குற்றம்சாட்டியிருந்தனர். நாங்கள் என்றுமே தப்பாக கூறியதில்லை. ஏனெனில் சிபிஐ ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

எனவே சிபிஐ விசாரணை வேண்டவே, வேண்டாம் என்பது கர்நாடக அரசின் நிலைப்பாடாக எப்போதுமே இருந்தது இல்லை. ஆனால், எந்த ஒரு மாநிலத்திலுமே, ஒரு சம்பவம் நடந்ததும் உடனடியாக அதுகுறித்த விசாரணையை சிபிஐக்கு அளிப்பதில்லை. கர்நாடக காவல்துறை மீது கொண்ட நம்பிக்கையால்தான் சிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.

காங்கிரசை பொறுத்தளவில், இந்த நாட்டின் சட்டத்தின்மீதும், நீதி பரிபாலனத்தின் மீதும் எப்போதுமே நம்பிக்கை வைத்துக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இதில் வேதனை என்னவென்றால், ரவி இறந்த அடுத்த நாளே, தந்தை, தாயை கூட்டி வந்து போராட செய்வது, பேட்டியளிக்க செய்வது போன்ற செயல்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டனர். எப்போதுமே, ஒரு மரணத்தின் மீது அரசியல் செய்ய கூடாது. அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. (இவ்வாறு முதல்வர் கூறியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்)

மத்தியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோது, இதே சிபிஐ மீது குற்றம்சொல்லிய பாஜக, மஜத போன்ற கட்சிகள், இப்போது அதே விசாரணையை கேட்பதற்கு வெட்கப்பட வேண்டும். இருப்பினும், டி.கே.ரவி சாவு வழக்கு விசாரணையை, கர்நாடக அரசு, சிபிஐயிடம் அளிக்க ஒப்புக்கொள்கிறது.

எதிர்க்கட்சிகளின் நெருக்கடியாலோ, பயத்தாலோ இந்த முடிவுக்கு அரசு வரவில்லை. டி.கே.ரவியின் தந்தை, தாய் மனோபாவத்துக்கு மதிப்பளித்தும், மாநில மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்தும், அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு சித்தராமையா அறிவித்தார். மாநில அரசு பரிந்துரைத்தால், சிபிஐ விசாரணைக்கு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister of Karnataka Siddaramaiah has ordered a CBI probe into the death of IAS officer, D K Ravi. The Chief Minister made the announcement on the floor of the house today. The case which was being probed by the state's Criminal Investigation Department will now be officially handed over to the CBI. A CBI team from Delhi would be formed and they would take over the probe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X