மொத்த காவிரியும் கர்நாடக குடிநீர்த் தேவைக்கு மட்டுமே.. சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது!

பெங்களூர்: காவிரி நதிநீரை தமிழகத்திற்கு விட முடியாது, கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு மட்டுமே அந்த தண்ணீர் பயன்படுத்தப்படும் என்று கர்நாடக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலவையிலும் இதே தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது.

Karnataka submit Cauvery resolution in the Assembly

இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், தீர்மானத்தை தாக்கல் செய்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து, ஒருமனதாக ஒப்புதல் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஜெகதீஷ் ஷெட்டர் ஆங்கிலத்திலும், ம.ஜ.த உறுப்பினர் தத்தா, கன்னடத்திலும், ஒரே தீர்மானத்தை இருமுறை தாக்கல் செய்தனர்.

அந்த தீர்மானத்தில் உள்ள விவரம் இதுதான்: 2016-17ம் ஆண்டில் மழை பொய்த்ததால் கர்நாடகாவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை பேரவை அறிந்துள்ளது. அதே நேரம் தண்ணீர் தட்டுப்பாட்டின் அளவு, 2017 ஜனவரி 31ம் தேதிக்கு பிறகே அதிகாரப்பூர்வமாக தெரியவரும். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கே.ஆர்.எஸ், ஹேமாவதி, ஹாரங்கி மற்றும் கபினி ஆகிய நான்கு அணைகளிலும், நீர் மட்டும் மிகவும் கீழே போய்விட்டது.

இந்த அணைகளில் மொத்தமே, 27.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது என்பதை ஆதங்கத்தோடு பரிசீலிக்க வேண்டியுள்ளது. இந்த உண்மை நிலையை கருத்தில் கொண்டு, பெங்களூர் நகரம் உள்பட காவிரி பாசன பகுதியிலுள்ள கிராமம் மற்றும் நகரங்களுக்கு குடிநீர் தேவைக்காக மட்டுமே 4 அணைகளிலிருந்தும் தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று இந்த சட்டசபை வலியுறுத்துகிறது.

கர்நாடகாவில் வாழ்வோர் நலனை கருத்தில் கொண்டு, 4 அணைகளின் தண்ணீரை பெங்களூர் உள்ளிட்ட காவிரியை நம்பியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த காரணத்திற்கும் இந்த அணைகளின் தண்ணீரை பயன்படுத்த கூடாது என்பதற்கு பேரவை அங்கீகாரம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

காவிரி பாசன பகுதியில் பெங்களூர் வரவில்லை. நடுவர்மன்றம் தனது இறுதி தீர்ப்பிலும் பெங்களூரை காவிரி பாசன பகுதி என கூற மறுத்துவிட்டது. ஆனால் பெருகிவரும் மக்கள் தொகையால், பெங்களூர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரியை நம்பியுள்ளது கர்நாடகா. எனவே பேரவை தீர்மானத்தில், பெங்களூரையும் உள்ளடக்கி என்ற வார்த்தையை குறிப்பிட்டு சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தின்மீது பாஜக சார்பில் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, ம.ஜ.த சார்பில் எச்.டி.குமாரசாமி, நரேந்திரசாமி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் பேசினர். இறுதியாக மாலையில், முதல்வர் சித்தராமையா பேசினார். தங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்க வேண்டும் என்பது நோக்கமில்லை என்றும், குடி தண்ணீருக்கே பிரச்சினை இல்லை என்பதால்தான், சட்டசபையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம் என்று அனைத்து உறுப்பினர்களும் குறிப்பிட்டனர்.

இதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம், தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. முன்னதாக, மதியமே மேலவையிலும் இதே தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. வரும் 27ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி பங்கீடு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இந்த தீர்மான பிரதியை சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக தரப்பு தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.

English summary
I urge the the house to take a decision on Cauvery says Jagadish Shettar. This house knows there is situation of distress. Reservoirs have alarming low levels of water Shettar says.
Please Wait while comments are loading...

Videos