காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற உத்தரவை மோடி ஏற்கக் கூடாது- தேவகவுடா

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிராகரிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரம் தமிழகம் கர்நாடகா இடையே மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 27ம் தேதி வரை தமிழகத்திற்கு 6000 கனஅடிநீர் திறந்து விடவும் கர்நாடகா அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

Modi reject the direction of Supreme Court says Deva Gowda

காவிரி விவகாரம் கர்நாடகாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று மாலை முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, காவிரி நதி நீர் பங்கீடு, காவிரி மேலாண்மை வாரியம், கர்நாடக அரசுக்கு எதிரான பாஜகவின் போர்க்கொடி, ராஜினாமா செய்வது ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து தேவகவுடா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், காவிரி விவகாரத்தில் பாஜக அரசியல் செய்ய கூடாது. கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கன்னட மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும். தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்கக் கோரும் உச்ச நீதிமன்ற உத்தரவு பாரபட்சமானது என்றார்.

கர்நாடகாவில் குடிக்கவே நீர் இல்லாத போது, தமிழகத்தில் சம்பா பயிர் பாசனத்துக்கு எப்படி நீரைத் திறக்க முடியும். மனிதர்களின் உயிரைவிட பயிர்கள் முக்கியமா? எதன் அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது? என்று கேட்டார்.

எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட முடியாது. அதே நேரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது. அடுத்தகட்டமாக சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எடுக்க வேண்டிய முடிவை உறுதியாக அறிவிக்க‌ வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிராகரிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காவிரி விவகாரத்தில் நான் இதுவரை மூன்றுமுறை எனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறேன். இப்போது நினைத்தால் கூட, எனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்வேன். ஆனால் கர்நாடகாவின் உரிமைக்காக யார் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்? அதேநேரம் கர்நாடகாவின் நலனுக்காக மஜதவை சேர்ந்த அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் தேவகவுடா தெரிவித்தார்.

காவிரி பிரச்சினை மீண்டும் கர்நாடகாவில் தலைதூக்கியுள்ள நிலையில் அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கியிருந்த தேவகவுடா மீண்டும் லைம்லைட்டுக்கு வரத் தொடங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா அரசியலில் எதிதும் புதிருமாக இருக்கும் சித்தராமைய்யாவும், தேவகவுடாவும் காவிரி விவகாரத்தில் நண்பர்களாக மாறி கைகோர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கர்நாடகாவில் பாஜக தலைவர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடாஆகியோரும் அம்மாநிலத்தில் ஆளும் அரசுக்கு ஆதரவாக நிற்கிறது.

English summary
Deva Gowda demanded intervention of Prime Minister Narendra Modi in the matter. Mr. Modi has to reject the direction of Supreme Court,” he said.
Please Wait while comments are loading...

Videos