அதிமுக நாங்கதான் ... இரட்டை இலை எங்களுக்கே - தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் முறையீடு

உண்மையான அதிமுகவான தங்களுக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து இன்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முறையிட்டனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிளவுபட்டது. இந்நிலையில் தாங்களே உண்மையான அதிமுக என்று இருவரும் மல்லுக்கட்டுகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியானது அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் தேர்தல் நடத்தி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அதிமுகவில் உள்ள விதியாகும்.

தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்தனர்.

சசிகலா பதில் மனு

பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். அதேபோல் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்தனர்.

டெல்லி பயணம்

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்ய ஓ.பன்னீர் செல்வம் அணியினர் டெல்லி சென்றுள்ளனர்.

யார்? யார்?

ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, கே.பி. முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தனர்.

என்ன பேசினர்?

இந்த சந்திப்பின்போது தாங்களே உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தங்களுக்கே உரிமை உள்ளது என்றும் தெரிவித்தனர். எனவே இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் உள்ளதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
OPS team members met Chief Election Commissioner Nazim Jaithi and demanded that two leaves symbol of ADMK should be theirs.
Please Wait while comments are loading...