இரட்டை இலை எங்களுக்கே... தேர்தல் ஆணையத்தின் கதவை விடாமல் தட்டும் ஓபிஎஸ் அணி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தங்கள் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் ஒபிஎஸ் அணியினர் மனு அளித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களின் கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன் மனு அளித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுக்கவில்லை. சசிகலா அணியும், ஒபிஎஸ் அணியும் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டி வருகின்றனர்.

சசிகலா நியமனம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது சசிகலாவும், மனுதாரரான ஓபிஎஸ் அணி சார்பில் மைத்ரேயனும் விளக்கம் அளித்தனர்.

ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்

இந்தநிலையில், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.பிக்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், சசிகலா பொதுச் செயலாளராக செயல்படும் முறை தவறானது. பொதுச் செயலாளர் பதவி தற்போது காலியாக உள்ளது. இதனால், கட்சியில் அடுத்த நிலையில் அவைத் தலைவர் இருக்கிறார் என்றார்.

அவைத்தலைவருக்கே அதிகாரம்

பொதுச் செயலாளருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அவைத் தலைவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. அவர்தான் யாருக்கு சின்னம் வழங்குவது என்பதை முடிவு செய்வார். இரட்டை இலை சின்னம் உறுதியாக எங்களுக்கு கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறோம். கட்சியில் 100 சதவீதம் தொண்டர்கள், மக்கள் எங்களுடன் உள்ளனர் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சசிகலா அணி

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா அணியினர் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். எதிர் அணியின் கோரிக்கை களை ஏற்க வேண்டாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். இடைத்தேர்தலுக்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளதாக தம்பித்துரை கூறினார்.

ஓபிஎஸ் அணி மனு

இதனிடையே இன்று தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன் மனு அளித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் அளித்துள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களின் அணியே உண்மையான அதிமுக என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
O Panneerselvam Team which is contesting in RK Nagar by election has sought the EC to allocate ADMK's poll symbol to them.
Please Wait while comments are loading...