For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்.டி.டி.வி சேனலுக்கு தடை.. ராஜிவ்காந்தி ஆட்சி காலத்து 'சாட்டையை' கையிலெடுக்குமா ஊடகங்கள்?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இந்தியாவின் முன்னணி தனியார் செய்தித் தொலைக் காட்சி நிறுவனமான என்டிடிவி இந்தியா (ஹிந்தி சேனல்) சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. வரும் 9 ம் தேதி ஒரு நாள் முழுவதும் இந்த சேனல் தன்னுடைய ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது. இந்த தண்டனைக்கான காரணம், இந்தாண்டு ஜனவரி 2 ம் தேதி பஞ்சாபின் பதான்கோட் விமான படை விமான தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது நேரடி ஒளிபரப்பை மேற்கொண்ட இந்த சேனல் தேச பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் செய்திகள் வெளியிட்டது என்ற குற்றச்சாட்டுதான். தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த சேனலின் செய்தியாளர்கள் விமானபடை தளத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், ஆயுத தளவாடங்களை சேமித்து வைத்திருக்கும் இடங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றியெல்லாம் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பினார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.

One day ban on NDTV: Will September 6, 1988 return?

2008 ம் நவம்பரில் மும்பையில் நிகழ்ந்த நான்கு நாள் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் செய்தித் தொலைக் காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு சில நடத்தை விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும்போது சம்மந்தப்பட்ட காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் என்று சிலவற்றை மத்திய அரசு இயற்றியுள்ளது. அந்த விதிமுறைகளுக்கு மாறாக இந்தச் சேனல் செயல்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு.

இது சம்மந்தமாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கூட்டு அமைச்சரவைக் குழு அனுப்பிய இரண்டு சம்மன்களுக்கு பதில் கொடுத்துள்ள என்டிடிவி, தாங்கள் எந்தவிதமான சட்ட மற்றும் நடத்தை விதிமுறைகறளை மீறவில்லை என்றே கூறியுள்ளது. மேலும் தாங்கள் ஒளிபரப்பிய அதே காட்சிகளையும், தாங்கள் கொடுத்து அதே செய்திகளையும் தான் மற்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பியதாக என்டிடிவி தன்னுடைய பதிலில் கூறியிருக்கிறது. ஆனால் இந்த பதில் திருப்தியில்லை என்று கூறிவிட்ட மத்திய அரசு, வரும் நவம்பர் 9ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 10 ம் தேதி அதிகாலை 1 மணி வரை என்டிடிவி ஹிந்தி சேனல் தன்னுடைய ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக கூறியிருக்கும் என்டிடிவி, சட்ட நடவடிக்கைகள் உட்பட அனைத்தும் ஆராயப்பட்டு வருவதாகக் கூறுகிறது.

மத்திய அரசின் இந்த முடிவு நாடு முழுவதிலும் அனைத்து ஊடக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளிடமும் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியிருக்கிறது. ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் இந்த தடையை கண்டித்திருக்கின்றன. பத்திரிகை ஆசிரியர்களின் கூட்டமைப்பான எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா இந்த தடை 'பட்டவரத்தனமான சென்சார்ஷிப் என்றும், அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் பேச்சுரிமைக்கு எதிரானது' என்றும் கூறியிருக்கிறது.

'மோடி அரசுக்கு எதிராக ஆக்கபூர்வமான செய்திகளை தொடர்ந்து கொடுத்து வருவதாலும், சாமான்யனின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து செய்திகளை தருவதாலும், என்டிடிவி ஹிந்தி சேனலை தனிப்பட்ட முறையில் மத்திய அரசு குறிவைப்பது நியாயமற்றது. இந்த நடவடிக்கை திரும்ப பெறப்பட வேண்டும்' என்று மும்பை பிரஸ் கிளப் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

2014 மே மாதம் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து ஊடகங்கள் குறிவைக்கப் படுவதன் தொடர்ச்சிதான் இது என்றே பார்க்கப் படுகிறது. தமிழகத்தில்தான் இதன் தொடக்கம் இருந்தது என்பது பரவலாக பலருக்கும் தெரியாத விஷயம். சென்னையிலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சத்தியம் தொலைக்காட்சி' க்கு மத்திய அரசு 2015 மே மாதம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. காரணம் பிரதமரை அவதூறு செய்யும் விதத்தில் நிகழ்ச்சி நடத்தியதான குற்றச்சாட்டு. 'உங்கள் ஆசிர்வாத நேரம்' என்ற மதரீதியிலான நிகழ்ச்சியிலும், 'பார்த்ததும், படித்ததும்' என்ற நிகழ்ச்சியிலும் சம்மந்தப்பட்ட செய்தியாளர் பிரதமரை அவதூறாக சித்தரித்தாக குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது. இந்த இரு நிகழ்ச்சிகளும் டிசம்பர் 9, 2014 ல் ஒளிபரப்பட்டன. பின்னர் இந்த தொலைக் காட்சியின் விளக்கத்தை அடுத்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த நிகழ்வு தமிழ்நாட்டு ஊடக வெளியிலும், சிவில் சமூகத்திலும் விவாதிக்கப் பட வேண்டிய அளவுக்கு விவாதிக்கப் படவில்லை.

(http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Sathiyam-TV-gets-a-warning/articleshow/47413956.cms)

(http://www.thenewsminute.com/article/tamil-channel-sathiyam-tv-alleges-political-censorship-govt-warns-it-%E2%80%98defaming%E2%80%99-modi-33948)

அடுத்ததாக 2015 மார்ச்சில், யாக்கூப் மேமன் தூக்கிலிடப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஒரு சம்பவம்.1993 மார்ச் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்தான் யாக்கூப் மேனன். இவர் தூக்கிலிடப் பட்ட பின்னர் இந்திய குடியரசுத் தலைவரையும், இந்திய நீதித் துறையையும் கொச்சைபடுத்தும் விதத்தில் செய்திகளை வெளியிட்டதாகச் சொல்லி மூன்று செய்தித் தொலைக் காட்சி சேனல்களுக்கு - ஏபிபி நியூஸ், என்டிடிவி 24x7 (ஆங்கில செய்தித் தொலைக்காட்சி சேனல்) மற்றும் ஆஜ் தக் ஆகிய சேனல்களுக்கு மத்திய அரசு, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாதென்று சொல்லி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டிஸ்களுக்கு இவர்கள் என்ன விளக்கம் அளித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப் படவில்லை. (http://indianexpress.com/article/india/india-others/explain-why-you-shouldnt-face-action-for-yakub-coverage-govt-notice-to-3-channels/)

சமீபத்திய நிகழ்வு, சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய பாதுகாப்பு படைகள் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நிகழ்த்திய 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' பற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேட்டியை என்டிடிவி ஆங்கில தொலைக் காட்சி ஒளிபரப்பாமல் பின்வாங்கியது. தற்போது மேற்கொள்ளப்பட்ட 'சர்ஜிகல் ஸ்டிரைக்' பற்றிய ஆதாரங்கள் என்னவென்று சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். இது போன்ற 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள்' கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகளிலும் நடத்தப்பட்டன என்பதுதான் சிதம்பரம் வைக்கும் முத்தாய்ப்பான வாதம். இதனை பாஜக அரசு கடுமையாக மறுக்கிறது.. ஆனால் சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை செயலர் எஸ்.ஜெய்ஷங்கர் இதனையே நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறை நிலைக்குழுவில் பேசும்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. (http://indianexpress.com/article/india/india-news-india/surgical-loc-strikes-border-attack-past-s-jaishankar-panel-meeting-proof-uri-3090729/)

சிதம்பரத்தின் இந்த பேட்டி கடைசி நேரத்தில் ஒளிபரப்பாகாமல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசின் அழுத்தம்தான் காரணம் என்று வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரியும் அளவில் இந்த ரத்து நடவடிக்கை இருந்தது என்பதுதான் முக்கியமானது.

"சிதம்பரத்தின் இந்த பேட்டி ரத்தானதற்கு வெளியிலிருந்து வந்த அழுத்தும்தான் காரணம் என்பது அனேகமாக எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. சிதம்பரம் முன்னாள் மத்திய அமைச்சர் மட்டுமல்ல, அவர் ஒரு முன்னணி வழக்கறிஞரும் கூட. தன்னுடைய வார்த்தைகளை அளந்து பேசுபவர். ஆகவே அவரது பேட்டி ரத்தானது விளாதீமீர் புடின் அமல்படுத்திக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதை நினைவூட்டுகிறது,'' என்கிறார் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான கிரிஷ் ஷஹானே. (http://scroll.in/article/819387/a-film-cancelled-a-tv-interview-canned-competitive-nationalism-is-eroding-free-expression-in-india)

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 1975 - 77 அவசர நிலைக் காலத்தின் போது, ஒரு மாணவராக 19 மாதங்கள் மிசா சட்டத்தில் சிறையிலிருந்தார். 2015 ம் ஆண்டு அக்டோபர் 27 ம் தேதி புதுடெல்லியில் 'சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவுச் சொற்பொழிவு' நிகழ்த்திய ஜெட்லி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மீதான தடை பற்றி இவ்வாறு கூறுகிறார். "எதையும் தடை செய்ய வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டதாக நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். இனிமேல் ஊடகங்களை, செய்திகளை தடை செய்வது என்பது அனேகமாக இயலாதது அல்லது தடையை அமல்படுத்துவது என்பது மிகவும் கடினமானது என்றே நான் நினைக்கிறேன். ஊடகங்களின் செயற்பாடுகளில் அரசு தலையிடலாமா? கூடியவரையில் தலையிடக் கூடாது என்பதே என் கருத்து''. (http://indianexpress.com/article/india/india-news-india/age-of-bans-on-media-over-difficult-to-implement-jaitley/)

ஆகவே இந்த பின்புலத்தில் பார்த்தால்தான் என்டிடிவி ஹிந்தி சேனல் மீதான தடையின் முழு பரிமாணம் புரியும். நாடு முழுவதிலும் இருந்தும் இன்று இந்த தடைக்கு எதிரான குரல்கள் ஒவ்வோர் மணி நேரத்திலும் அதிகரித்து வருகின்றன. நாடு அவசர நிலைக் காலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற கருத்து பரவலமாக பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகளிடம் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தடைக்கு எதிராக நீதிமன்றங்களை என்டிடிவி நாடலாம் என்றும் கூறப்படுகிறது. நீதிமன்றங்களில் என்ன நடக்கும் என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. இதனிடையே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு இந்தத் தடை நியாயமானதுதான் என்றும், இதற்கு எதிரான கண்டனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் தெரிவித்து விட்டார். இந்த தடையை நீக்கும், மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

நவம்பர் 9 ம் தேதி என்டிடிவி ஹிந்தி தொலைக் காட்சிக்கான ஒரு நாள் தடை அமல் படுத்தப்பட்டால் அதற்கு எதிராக அனைத்து ஊடகங்களும் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கை வரத் தொடங்கியிருக்கிறது. நவம்பர் 9 ம் தேதி அனைத்து தொலைக் காட்சிகளும் தங்கள் ஒலிபரப்பை நிறுத்த வேண்டும். அனைத்து பத்திரிக்கைகளும் தங்களது பதிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கின்றன. இதே போன்ற ஒரு போராட்டம் பிரதமர் ராஜீவ் காந்தி பத்திரிகைகளை ஒடுக்க முற்பட்ட போது நடந்தது குறிப்பிடத் தக்கது. போஃபர்ஸ் ஊழல் வெடித்துக் கிளம்பியபோது அரசின் இன்ன பிற ஊழல்களை மற்றவர்கள எழுதாமல் இருப்பதற்காக ராஜீவ் காந்தி அரசு பத்திரிகைகளுக்கு எதிரான புதியதோர் அவதூறு மசோதாவை கொண்டு வந்தது. கடுமையான ஷரத்துக்களை கொண்டிருந்த மசோதா அது. ஆகஸ்ட் 30, 1988 மக்களவையில் அந்த மசோதா நிறைவேறியிருந்தது.

இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து பத்திரிகைகளும் ஒன்றிணைந்து போராடின. செப்டம்பர் 6, 1988 இந்தியாவின் அனைத்து தினசரி பத்திரிக்கைகளும் தங்களது பதிப்பை நிறுத்தின. பிடிஐ, யூஎன்ஐ உள்ளிட்ட நான்கு செய்தி ஏஜன்சிகளும் தங்களது பணியை ஒரு நாள் முற்றிலுமாக நிறுத்தின. சுமார் 25,000 க்கும் மேற்பட்ட இந்தியாவின் செய்தி தாள்களும், வார, மாதாந்திர சஞ்சிகைகளும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. அடிபணிந்த ராஜீவ் காந்தி அரசு செப்டம்பர் 22, 1988 ல் இந்த மசோதாவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

http://indiatoday.intoday.in/story/rajiv-gandhi-government-withdraws-infamous-defamation-bill/1/329854.html

http://www.nytimes.com/1988/09/07/world/indian-papers-close-in-protest.html

http://www.ucanews.com/story-archive/?post_name=/1988/09/07/public-protest-seen-to-defer-government-bill-curbing-press-freedom&post_id=36942

அதுபோன்ற ஒற்றுமை இந்த முறை நவம்பர் 9 ல் கடைபிடிக்கப்பட முடியுமா என்பதுதான் கேள்வி? இதற்கு வாய்ப்பு குறைவு என்றுதான் படுகிறது. ஏனெனில் அப்போது ஆபத்து வெளிப்படையாகவே இருந்தது. இப்போது மறைமுகமாக, கொஞ்சங் கொஞ்சமாய்தான் வந்து கொண்டிருக்கிறது. மேலும் 1988 ல் இன்றைக்கு இருப்பது போல ஊடகங்களில் கார்ப்போரேட்டுகளின் செல்வாக்கு இல்லை. ஆகவே செப்டம்பர் 6, 1988 மீண்டும் நவம்பர் 9, 2016 ல் திரும்புமா என்றால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே படுகிறது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தவிர இந்த முறை செப்டம்பர் 6, 1988 வரலாறு மீண்டும் நிகழாது என்பதே துரதிர்ஷ்டவசமான யதார்த்தம்.

English summary
R Mani's article on the recent order against NDTV Hindi channel to stop the telecast for 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X