For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் முன்பு ஓபிஎஸ்-சசிகலா அணி வாதம் அனல் பறக்கிறது

தேர்தல் ஆணையம் இரு தரப்பு ஆதாரங்களையும் பரிசீலித்து இன்று மாலையே முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பாரா? இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறது.

சின்னம் குறித்து இன்று மாலையே தனது முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

OPS or Sasikala: Who will get the AIADMK symbol

அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்தும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியும் ஓபிஎஸ் அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் விளக்கங்களை கேட்டுப் பெற்றுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் கடந்த 15ம் தேதி டெல்லி சென்று தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்தித்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து சசிகலா அணியினரும் 16ம் தேதி நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்களே இப்போது எதிர்க்கின்றனர் என கூறியதோடு, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்கவும் கேட்டுக்கொண்டனர்.

இதன்பிறகு பன்னீர்செல்வம் சார்பில் கூடுதல் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவுடன் 6 ஆயிரம் தொண்டர்கள் தனித்தனியாக மனுவும், 6 லட்சம் பேரின் கையெழுத்தும், 40 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதற்கான ஆவணங்களையும் இணைத்திருந்தனர். அதேபோல் சசிகலா தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், 1912 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இரு அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்கள் மற்றும் கருத்தை நேரில் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருதரப்பினரும் இன்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மைத்ரேயன் எம்பியுடன் ஹரீஸ் சால்வே, பாலாஜி, ராகேஷ் சர்மா, பரணீதரன், மனோஜ் பாண்டியன் ஆகிய மூத்த வக்கீல்கள் பங்கேற்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க உள்ளனர். சசிகலா அணி தரப்பில் சல்மான் குர்ஷித், மோகன் பராசரன், வீரப்பமொய்லி ஆகியோர் பங்கேற்று வாதம் முன்வைத்துக்கொண்டுள்ளனர்.

இரு தரப்பினரும் தங்கள் வாதங்களோடு பல ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் முன்பு எடுத்து வைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இரு தரப்பு ஆதாரங்களையும் பரிசீலித்து இன்று மாலையே முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (23ம் தேதி) யுடன் ஆர்கேநகரில் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. இதனால் தேர்தல் ஆணையம் இன்றே தனது முடிவை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Election Commission of India will take a call on which faction of the AIADMK would get to retain the party's symbol. Both the Sasikala and O Panneerselvam factions would argue before the EC to stake a claim to the two leaves which is the symbol of the AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X