For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போபர்ஸ் ஊழல்- பிரணாப் 'வாய்தவறி' சொன்னதை வெளியிடாதீங்க... சுவீடன் பத்திரிகைக்கு இந்தியா நெருக்கடி?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 'வாய் தவறி' தெரிவித்த கருத்தை பிரசுரிக்க வேண்டாம் என்று சுவீடன் பத்திரிகைக்கு இந்திய அரசு நெருக்கடி கொடுத்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று போபர்ஸ் ஆயுத பேர ஊழல். 1986ம் ஆண்டு சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 1500 கோடிக்கு பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

Pranab's remark on Bofors triggers row

இதில் பெருமளவில் லஞ்சம் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி குடும்பத்துக்குக் கை மாறியதாக சர்ச்சை எழுந்தது. இதனால் 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவியது.

அப்போது தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமை சுவிடன் செல்ல உள்ளார். இதையொட்டி கடந்த வாரம் சுவீடனைச் சேர்ந்த "டேகன்ஸ் நைஹெட்டர்' என்ற நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அதில், சுவீடனிடம் இருந்து இந்தியா வாங்கிய போபர்ஸ் பீரங்கிகள் குறித்த கேள்விக்கு, போபர்ஸ் பீரங்கிகளை வாங்க நடைபெற்ற பேரம் ஊழல் அல்ல' என்று பிரணாப் கூறியதாக அந்தப் பேட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டேகன்ஸ் நைஹெட்டர் நாளிதழின் ஆசிரியர் பீட்டர் வோலோடார்ஸ்கிக்கு ஸ்வீடனுக்கான இந்தியத் தூதர் பனஸ்ரீ போஸ் ஹாரிசன் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது பேட்டியின்போது வாய்தவறி ஒரு கருத்தைக் கூறினார். பேட்டி முடிந்ததும் அந்தக் கருத்தில் திருத்தம் ஒன்றைச் சேர்க்குமாறு கூறியுள்ளார். ஆனால் அதைச் சேர்க்காமல், அவரது பேட்டியை வெளியிட்டது தங்களது தொழில் தர்மத்தை மீறிய செயல் மட்டுமின்றி, நேர்மையற்ற செயலுமாகும். இந்த விவகாரத்தில் ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில் பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை காட்டப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் 'டேகன்ஸ் நைஹெட்டர்' நாளிதழின் இணையதளத்தில் அதன் ஆசிரியர் பீட்டர் வோலோடார்ஸ்கி இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பேட்டியை நாங்கள் வெளியிடுவதற்கு முன், இந்தியத் தூதர் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது போபர்ஸ் குறித்த கேள்வி - பதில்களை எங்கள் நாளிதழ் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதியான ஒருவர் , ஒரு நாட்டின் தலைவரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் எந்தெந்த பதில்களைப் பிரசுரிக்க வேண்டும் என்றும் எங்களைக் கட்டுப்படுத்த முயலுவது வியப்பளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதனிடையே, டேகன்ஸ் நைஹெட்டர் ஆசிரியரிடம் பேட்டியை திரும்பபெறுமாறு கேட்கவில்லை என்று இந்தியா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.

English summary
Controversy hit the President's impending visit to Sweden, with its national daily Dagens Nyheter claiming that it was asked to delete references to Bofors from an interview with Pranab Mukherjee with a warning that the visit could be at risk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X