For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதம் என்பது மக்களை ஒற்றுமைப்படுத்தும் சக்தியே... மோதலுக்கானதல்ல: குடியரசுத் தலைவர் உரை

Google Oneindia Tamil News

டெல்லி: மதம் என்பது மக்களை ஒற்றுமைப்படுத்தும் சக்தியே என்றும், மதத்தை மோதலுக்கு காரணமாக்க முடியாது என்றும் தனது குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் எல்லையில் அடிக்கடி நடக்கும் போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்றவற்றுக்கு தீர்வு காண வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பயங்கரவாத்திற்கு எதிராக நாம் நடத்தும் போரில் உலகம் நம்முடன் கைகோர்த்து நிற்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

President Pranab Mukherjee's Speech on the Eve of Republic Day: Full Text

2015-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

66-வது குடியரசு தின நாளில் நமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது ராணுவ படைகளுக்கும், துணை ராணுவப் படைகளுக்கும், உள்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

ஜனவரி 26-ம் தேதி நமது நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் ஒருநாள். ஏனெனில், அன்றுதான் நவீன இந்தியா உதயமானது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து பூரண ஸ்வராஜ்யம் வேண்டும் என்ற தீர்மானத்தை மகாத்மா காந்தியின் தார்மீக - அரசியல் தலைமையின் கீழ் தேசிய காங்கிரஸ் 1929 டிசம்பரில் நிறைவேற்றியது.

1930-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியை நமது நாட்டின் சுதந்திர தினமாக கருதி, நாடு முழுவதும் கொண்டாடும் படி கூறினார் காந்திஜி. அன்று முதல் சுதந்திரம் பெறும் வரை சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்று நம்நாடு இந்த நாளில் சபதம் ஏற்றது. சரியாக 20 ஆண்டுகளுக்கு பின் 1950-ல் நமது நாடு நவீன சாசனத்தை அதாவது, அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால், அதைக் காணும் வாய்ப்பு கிட்டாமல் மகாத்மா காந்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது உயிரைத் தியாகம் செய்து விட்டார். ஆனால், அவரது உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவான நமது அரசியல் சாசனம் இன்றைய உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

ஜனநாயகம், நம்பிக்கை சுதந்திரம், ஆண்-பெண் சமத்துவம், வறுமையில் வாடுவோரை பொருளாதார ரீதியில் கைதூக்கி விடுவது என்ற நான்கு அம்சங்கள்தான், நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகள். இந்த கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளாக அரசியல் சாசனத்தில் வரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆட்சியாளர்களுக்கு மகாத்மா காந்தி எடுத்துரைத்த போதனை எளிமையானது, சக்தி வாய்ந்தது, அந்த போதனை இதுதான். 'எப்போதாகிலும் உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் நீங்கள் பார்த்த ஏழையின் முகத்தை, நலிவுற்ற மனிதனின் முகத்தை உங்கள் மனக்கண் முன் நிறுத்தி, பசியாலும், ஆன்மீக ரீதியிலும் வாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு நமது சுதந்திரம் ஆதரவாக நிற்குமா என்று எண்ணிப்பாருங்கள்' என்றார். உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் வறுமையை முற்றிலுமாக அகற்றும் திசையில் நமது நடவடிக்கைகள் அமையவேண்டும்.

பெரும்பான்மை பலம்

கடந்த ஆண்டு பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, முப்பது ஆண்டுகளுக்கு பின், நாட்டு மக்கள் ஒரு தனிப்பட்ட கட்சிக்கு பெரும்பான்மை பலம் அளித்து நிலையான அரசு அமைக்கவும் கூட்டணி நிர்பந்தத்திலிருந்து விடுபட்டு ஆட்சி நடத்தும் உரிமையையும் அளித்துள்ளார்கள்.

மக்கள் அளித்த இந்த பெரும்பான்மை பலத்தை கொண்டு அவர்களுக்கு அளித்த உறுதியை நிறைவேற்றுவதற்கான கொள்கையையும் சட்டத்தையும் வகுத்து செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த தேர்தல் முடிவின் தீர்ப்பாகும்.

வாக்காளர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தி விட்டார்கள். அந்த வாக்காளர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவது அவர்களின் வாக்குகளை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமை. தூய்மையான, திறன்மிக்க, சிறந்த, பெண்ணுரிமையை மதிக்கக்கூடிய ஒளிவு - மறைவற்ற, கட்டுப்பாட்டுணர்வு கொண்ட, மக்கள் நலனுக்கேற்ற ஆளுகைக்காக அளிக்கப்பட்ட வாக்கு இது.

அவசர சட்டங்கள்

இயங்கும் மக்கள் மன்றம் இல்லாமல் ஆட்சி நடக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றம் தான் மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக சுமூகமாக பேச்சு நடத்தி, முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவது இந்த மன்றம்தான். பேச்சுவார்த்தை மூலம் ஒத்த கருத்தை உருவாக்கி, சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த மன்றங்களின் அடிப்படை தத்துவம்.

விவாதம் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றுவது நாடாளுமன்றத்தின் சட்டம் வகுக்கும் உரிமையை பாதிக்கும். அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது சிதைத்து விடும். இது ஜனநாயகத்திற்கோ, நமது சட்டங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கோ உகந்தது அல்ல.

பெண்கள் பாதுகாப்பு நிலையால் வேதனை

ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், ரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதி மற்றும் ஏராளமானோர் தங்கள் பணி ரீதியாகவும் அணுகுமுறை ரீதியாகவும் மாறுபட்ட நிலை கொண்டிருந்த போதிலும், அவர்கள் அனைவரின் குரலும் தேசபக்த குரலாகவே ஒலித்தது. இந்த தேசிய தலைவர்களால்தான் நாம் சுதந்திரத்தை பெற்றோம். இந்தியத் தாய் விடுதலை பெறுவதற்காக உயிர்த்தியாகம் செய்தும் வெளியே தெரியாத வீரர்களுக்கும் நமது வணக்கத்தை செலுத்துவோம். பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில், நமது தாய்த் திருநாடு தனது சொந்த குழந்தைகளாலும் மதிக்கப்படவில்லை என்பதுதான் எனக்கு வேதனை அளிக்கிறது.

பாலியல் பலாத்காரம், கொலை, சாலைகளில் கேலி-கிண்டல் செய்வது, பெண்களை கடத்துவது, வரதட்சணை போன்ற கொடுமைகள், சொந்த வீட்டிலேயே பெண்கள் அஞ்சும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் குடும்பத்தின் தேவதைகள் என்றும் ஆன்மாவை கிளறிவிடும் சுடர் என்றும் ரவீந்திரநாத் தாகூர் வர்ணித்தார்.

பெண்களுக்கு உரிய மரியாதை அளித்து கண்ணியமாக நடத்தி அவர்களுக்கு மதிப்பளிக்கும் நெறிமுறைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க பெற்றோர், ஆசிரியர், தலைவர்கள் என்ற வகையில் நாம் தவறிவிட்டோமா என்பதுதான் கேள்வி?

பெண்கள் பாதுகாப்புக்காக பல சட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம். பெஞ்சமின் பிராங்க்ளின் குறிப்பிட்டதை இங்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்: 'கொடுமைக்கு உள்ளானவர்கள் மட்டுமின்றி பாதிக்கப்படாதவர்களும் குரல் எழுப்பாமல் நீதி கிடைக்காது' என்பது அவர் கூறிய வாசகம். எந்தவொரு வன்முறையாலும் பெண்களின் கவுரவம் பாதிக்கப்படாமல் காப்பாற்றுவேன் என்று ஒவ்வொரு இந்தியனும் உறுதி ஏற்கவேண்டும், பெண்களை மதித்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நாடுதான் உலக சக்தியாக திகழும் என்று பெஞ்சமின் பிராங்க்ளின் குறிப்பிட்டார்.

மக்களை ஒற்றுமைப்படுத்தும் சக்தியே மதம்

இந்திய அரசியல் சாசனம் ஜனநாயகத்தின் புனித நூல். பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, வேறுபட்ட சமுதாயங்களிடையே நல்லெண்ண வளர்ப்பு என்ற நாகரீகத்தை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவில் சமூக பொருளாதார மாற்றத்திற்கான துருவ நட்சத்திரம் அது. இந்த விழுமியங்கள் மிகுந்த கவனத்தோடும் விழிப்புணர்வோடும் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம்.

ஜனநாயகத்தின் உள்ளடக்கிய உரிமை அரசியல் முரண்பாடுகள் காரணமாக, சில சமயங்களில், நமது பண்பாட்டிற்கு எதிரான வெறுப்பை உருவாக்குவதுண்டு. வன்முறை நாட்டு மக்களின் இதயங்களை புண்படுத்திவிடும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் சக்தியே, மதம் என்றார் காந்திஜி. அதனை மோதலுக்கான் காரணியாக மாற்ற முடியாது.

இந்தியாவின் மென்மையான சக்தி குறித்து ஏராளமாக சொல்லப்படுகிறது. தத்துவ ரீதியாக உலகின் பல நாடுகளில் மோதல் உருவாகி, வன்முறைக்கு இட்டுச்செல்லும் சர்வதேச சூழ்நிலையில், நம்பிக்கைக்கும் பல்வேறுபட்ட மக்களுக்கும் இடையே உறவை பேணுவதில்தான் அந்த மென்மையான சக்தி அடங்கியுள்ளது. நமது மென்மையான சக்திக்கு இதுவே மிகப்பெரிய எடுத்துக்காட்டு. நம்பிக்கை அனைத்துமே சட்டத்தின் முன் சமம், ஒவ்வொரு கலாச்சாரமும் மற்ற கலாச்சாரத்துடன் இணைந்து ஆக்கபூர்வமான துடிப்பை உருவாக்கக்கூடியது என்பதில் நாம் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்: உண்மையே பலம், ஆதிக்க உணர்வு பலவீனம் என்று இந்திய தத்துவம் நமக்கு போதிக்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர்

உலகில் பல நாடுகளுக்கிடையிலான முரண்பாடு அவற்றின் எல்லைகளை ரத்தக்களறியாக்கி பயங்கரவாதத்தை தீய சக்திகளின் பட்டறையாக மாற்றியுள்ளது.

நமது நாட்டின் எல்லைக்குள் பயங்கரவாதமும், வன்முறையும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. அமைதி, அகிம்சை, நல்லுறவு அடிப்படையில் நமது வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டு உள்ள போதிலும் நாட்டின் வளர்ச்சி, சமவாய்ப்பை நோக்கிச் செல்லும் நமது பயணத்திற்கு ஊறுவிளைவிக்கும் சக்திகள் விஷயத்தில் நாம் கவனக்குறைவாக இருந்துவிட முடியாது. நமது மக்களுக்கு எதிராக போர் தொடுக்கும் இந்த சக்திகளை முறியடிக்கும் பலமும் நம்பிக்கையும் நமக்குள்ளது.

நமது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் அடிக்கடி நடக்கும் போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்றவற்றிற்கு ராஜ்ஜிய முறையில் தீர்வு காண்பதோடு எதிரிநுழைய முடியாத அரணாக நமது பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாத்திற்கு எதிராக நாம் நடத்தும் போரில் உலகம் நம்முடன் கைகோர்த்து நிற்கவேண்டும்.

பொருளாதார முன்னேற்றம்

ஜனநாயகத்திற்கு பொருளாதார முன்னேற்றம் ஒரு பரிசோதனை. 2015-ம் ஆண்டு நம்பிக்கை தரும் ஆண்டு. பொருளாதார அளவுகோல்கள் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றன. வெளிநாடுகளுடனான நமது பொருளாதாரம் வலுப்பெறுவது, நிதித்துறையில் கட்டுப்பாட்டை நோக்கிய முன்னேற்றம், விலைவாசி கட்டுப்பாடு, உற்பத்தித் துறையிலும் விவசாயத்திலும் கடந்த ஆண்டு நிலையிலிருந்து மீட்சி பெற்று கண்டு வரும் முன்னேற்றம் ஆகியவை நமது பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. 2014-15-ம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்ட வளர்ச்சி வீதத்தை பெற்று வருவது, நமது பொருளாதாரம் ஏழு முதல் எட்டு சதவீத வளர்ச்சியை நோக்கி பீடு நடைபோடுவதற்கு ஆரோக்கியமான அறிகுறியாகும்.

ஒரு சமுதாயத்தின் வெற்றி என்பது அதன் விழுமியங்களையும், நிறுவனங்களையும் ஆட்சி அமைப்பையும் போற்றிப் பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும்தான் உள்ளது. கடந்த கால கொள்கைகள், நிகழ்கால வெற்றி, எதிர்கால சாதனைக்கான வாய்ப்புக்களில்தான் நமது குறிக்கோள்கள் அடங்கியுள்ளன.

21-ம் நூற்றாண்டு... இந்தியாவின் ஆண்டு!

இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் நமது வருங்கால சந்ததியினர் கல்வி, தேசபக்தி, அன்பு, நேர்மை, கடமையுணர்வு முதலியவற்றில் பரிமளிக்க செய்வதும் நமது நாட்டின் தேசிய லட்சியம். தாமஸ் ஜெஃபர்ஸன் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மக்கள் அனைவருக்கும் கல்வி புகட்டி அறிவாற்றலை தாருங்கள் ஏனெனில் நமது சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்பது அவர்கள்தான் என்கிறார் ஜெஃபர்ஸன்.

நமது கல்விக்கூடங்களின் தரத்தை விரைவில் உயர்த்தி 21-ம் நு]ற்றாண்டில் உலகத்தரம் வாய்ந்ததாக அவற்றை மிளிரச்செய்யவேண்டும். புத்தகங்களின் தரம், வாசிக்கும் பழக்கம் ஆகியவற்றின் மூலம் அழுத்தங்களிலிருந்து விடுவித்து, வகுப்பறைக்கு வெளியேயும் அறிவாற்றலை விரிவுபடுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எண்ணற்ற சிந்தனைகளின் சங்கமமாக மாறுவதன் மூலம் நம்மை சிறந்த படைப்பாளிகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த அண்டவெளியில் மேகங்களையே நூலகமாக கொண்டு எல்லையில்லா அளவாக தொழில் நுட்பத்திலும் தொலைத்தொடர்பிலும் கையடக்கமான கணினி மூலம் அளப்பரிய வாய்ப்பை நமது இளைய தலைமுறையினர் பெற முடியும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் ஆண்டாக அமையும். பின்னோக்கி செல்லும் பழக்கத்தையும் சமூக தீமைகளையும்களையும் ஆற்றலை நாம் தொடர்ந்து பின்பற்றாவிடில் எதிர்காலம் ஒருபுறம் பிரகாசமாகவும் மறுபுறம் கைநழுவிச் செல்வதாகவும் அமைந்து விடும்.

கடந்த நூற்றாண்டில் மறைந்தவர்கள் பலர், நினைவிலிருந்து நீங்கியவர்கள் பலர் என்றாலும், மேலும் பலர் நிலைத்து நிற்கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்திஜி திரும்பிய நூற்றாண்டை நாம் இந்த ஆண்டு கொண்டாடி கொண்டிருக்கிறோம். 1915-ம் ஆண்டு அங்கிருந்து திரும்பிய காந்திஜி, தனது கண்களை அகலத் திறந்து வைத்திருந்தார். அதேசமயம், தமது வாயை மூடிக்கொண்டிருந்தார். அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோம். 1915-ம் ஆண்டில் அவர் காட்டிய வழியை பின்பற்றும் நாம், 1901-ம் ஆண்டு முதன்முதலாக தாயகம் வந்தபோது, காந்திஜி எப்படி நடந்துகொண்டார் என்பதையும் பார்க்கத் தவறக் கூடாது.

அந்த ஆண்டில்தான், பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மகாத்மா காந்தி பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

ரிப்பன் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பங்கேற்றார், அந்த இடம் முழுவதையும் சக பிரதிநிதிகள் அசுத்தம் செய்திருப்பதை அவர் பார்த்தார். இதனால், அதிர்ச்சியடைந்த காந்திஜி, அந்த அசுத்தத்தை போக்க, துப்புரவு பணியாளரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை, தாமே ஒரு துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார். இது நடந்தது 1901-ம் ஆண்டு. அப்போது, அவரை இந்த விஷயத்தில் யாரும் பின்பற்றவில்லை. 114 ஆண்டுகளுக்கு பின், மகாத்மா காந்தியின் அந்த முன்மாதிரியை நாம் பின்பற்றி தேசப்பிதாவின் தகுதிமிக்க குழந்தைகளாக நம்மை மாற்றிக்கொள்வோம்."

இவ்வாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தன் உரையில் கூறினார்.

English summary
President Pranab Mukherjee addressed the nation on the eve of Republic Day. Here is the full text of his speech:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X