For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலி' ஆடுகளாக தவிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள்; லஞ்சம் கொடுத்தால் நகரும் ஆராய்ச்சி'

By BBC News தமிழ்
|

ஆராய்ச்சி என்றாலே சிக்கல்களும் சோதனைகளும் சேர்ந்தே இருக்கும். அந்த ஆராய்ச்சியை ஆரம்பித்து, முடிப்பதற்குள் ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அனுபவிக்கும் துயரம், பல நேரங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எல்லை மீறிய நிலையில் இருக்கிறது.

ஆராய்ச்சி மாணவர்கள்
Getty Images
ஆராய்ச்சி மாணவர்கள்

பி.எச்டி என்ற ஆராய்ச்சிப் பட்டத்தைப் பெறுவதற்காக, அதற்கான திட்டத்தைப் பதிவு செய்வது முதல், அரசு உதவிகளைப் பெறுவது, உதவி புரியும் பேராசிரியரின் தொல்லைகளை சமாளிப்பது என பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியா முழுவதும், ஏறத்தாழ பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் அதைக் காண முடிகிறது.

அறிவியல், பொருளாதாரம், கலை, கணிதம், புள்ளியியல், நடனம், இசை, வேளாண்மை என ஏராளமான துறைகளில் ஆராய்ச்சிப் பட்டங்கள் பெறப்படுகின்றன. இதன் மூலம், விஞ்ஞானியாக, பேராசிரியராக வர முடியும். ஆராய்ச்சியாளராகவும் தொடர முடியும்.

ஆனால், இதில் ஆரம்பம் முதல் கடைசி வரை, ஒவ்வொரு படியும் ஒரு போரைப் போன்றது என்பது பெரும்பலானா ஆராய்ச்சி மாணவ, மாணவியரின் கருத்தாக, கவலையாக உள்ளது.

அவ்வாறு போராடி முன்னேறி வரும் ஓர் ஆராய்ச்சி மாணவியைச் சந்தித்தோம். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள காட்டு இடையர்பாளையத்தைச் சேர்ந்த இளமதி, கடந்த 6 ஆண்டுகளாக ஆராய்ச்சி மாணவியாக இருக்கிறார். அதுவும், இந்தியத் தலைநகர் டெல்லியில்.

மலேரியா தொடர்பான தேசிய ஆராய்ச்சி மையத்தில், கொசுக்களால் பரப்பப்படும் ஒட்டுண்ணி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆராய்ச்சி மாணவி இளமதி
BBC
ஆராய்ச்சி மாணவி இளமதி

முதலில், ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு ஒவ்வொரு கட்டத்திலும் என்ன செய்ய வேண்டும் என்ற முறையான வழிகாட்டுதல் இல்லை என்பது அவரது கவலையாக உள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), என பல அமைப்புக்கள் இந்த ஆராய்ச்சிகளுக்கு உதவுகின்றன. பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கு மாணவர்கள் தங்கள் திட்டங்களைச் சமர்ப்பித்து அதற்கான நிதி ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால், அப்படிப்பட்ட ஒப்புதல் கிடைப்பதற்கே ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிடுகிறது என்கிறார் இளமதி. "உதாரணமாக, நான் சமர்ப்பித்த ஆராய்ச்சித் திட்டத்திற்கான நகல்கள் காணாமல் போய்விட்டதாக அதற்கான ஒப்புதல் குறித்த ஆய்வுக்கூட்டத்துக்கு இரண்டு மணி நேரம் முன்னதாகத்தான் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நல்ல வேளையாக நான் டெல்லியில் இருந்ததால் பெரும்பாடுபட்டு அவர்கள் கேட்ட நகல்களை மீண்டும் சமர்ப்பிக்க முடிந்தது. தமிழ்நாட்டில் இருந்தால், நேரடியாகவும் வந்து கேட்க முடியாது. நமது திட்டத்தை நிராகரித்துவிட்டார்கள் என்று இருந்துவிடும் மாணவ, மாணவிகள்தான் அதிகம்" என்று விவரித்தார்.

திட்டம் சமர்ப்பித்து, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆராய்ச்சியைத் துவக்க முடிந்தது. அதுவரை, வேறு ஒரு இடத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவர் கூறுகிறார்.

சர்வதேச தரத்துக்கு நமது ஆராய்ச்சிகள் வளர முடியாமல் போவதற்கு இந்தக் குழப்பங்கள் அடிப்பைக் காரணம் என்பது அவரது நம்பிக்கை.

ஆராய்ச்சி மாணவர்கள்
Getty Images
ஆராய்ச்சி மாணவர்கள்

உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து பூச்சிகள் தொடர்பான ஓர் ஆராய்ச்சிக்கு வாய்ப்புக் கிடைத்தும், இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களால் அந்த வாய்ப்பைத் தவறவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

ஒவ்வொரு கட்டத்திலும் ஊழல்

ஆராய்ச்சிப் படிப்புக்கு பதிவு செய்த பிறகு, ஒவ்வொரு இடத்தில் இருந்தும் நமது கோப்புக்கள் அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடுத்த இடத்துக்கு நகர்வதற்கு லஞ்சம் கொடுத்தால்தான் நகரும் என்கிறார் அவர்.

"ஆராய்ச்சிகள் முடிந்து, அதுதொடர்பான முடிவுகள் கட்டுரையாகத் தொகுக்கப்பட்டு, மாநிலத்தில் ஒருவர், தேசிய அளவில் ஒருவர் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் என மூன்று விஞ்ஞானிகளுக்கு அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். பணம் கொடுக்காவிட்டால் அவற்றை அந்த விஞ்ஞானிகளுக்கு அனுப்பவே மாட்டார்கள். வரும் வரும் எனக் காத்திருந்து நமக்கு வயசுதான் ஏறிக்கொண்டிருக்கும். அந்த விஞ்ஞானிகள் ஏதாவது கூடுதல் தகவல் கேட்டிருந்தால் அதை இணைத்து மறுபடியும் அனுப்ப வேண்டும். அப்போதும் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும்" என்கிறார் இளமதி.

சாதாரணமாக, ஐந்து ஆண்டுகளில் ஆராய்ச்சிப் படிப்புக்கள் முடியும். ஆனால், நடைமுறையில் எத்தனை ஆண்டுகள் என சொல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்கிறார் அவர்.

ஆராய்ச்சி மாணவர்கள்
Getty Images
ஆராய்ச்சி மாணவர்கள்

இளநிலை, முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் இருவருக்குமே மாதாந்திர ஊக்கத் தொகையைப் பெறுவதும் குதிரைக் கொம்பாகவே இருப்பதாகவும், முறையற்ற இடைவெளியில், காலதாமதமாகவே அந்த ஊக்கத் தொகைகள் கிடைப்பதாகவும் இளமதி பல உதாரணங்களைத் தெரிவிக்கிறார்.

பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களில் கூட, நிர்வாகத் தடைகள் ஆராய்ச்சிக்குப் பெரும் தடைக்கற்களாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆராய்ச்சிக்கான ஒரு சாதாரண ரசாயனம் வாங்குவதற்கு ஒப்புதல் பெறுவதற்குக் கூட அலைய வேண்டிய சூழல் இருப்பதாக வேதனைப்படுகிறார் இளமதி..

கைடு' என்ற போர்வைக்குள் ஒரு குரூரம்

ஒவ்வொரு ஆராய்ச்சி மாணவர் அல்லது மாணவியும், கைடு என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பேராசிரியர் அல்லது பேராசிரியையின் உதவியுடன் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், 75 சதம் கைடுகள், ஆராய்ச்சி மாணவ, மாணவிகளுக்கு உதவாமல், அவர்களது சொந்த வேலைகளுக்கே அதிகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார் இளமதி.

"பேராசிரியர்கள் தங்களது சொந்த வளர்ச்சியில்தான் அக்கறை காட்டுவார்கள். தங்களுக்கான பணிகளை முடிக்க ஆராய்ச்சி மாணவ, மாணவிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் ஒரு கருத்தரங்கிற்கோ அல்லது வேறு அமர்வுகளுக்கோ செல்லும்போது அதற்கான விவரங்களை நம்மைத் தயாரித்துக் கொடுக்கச் சொல்வார்கள். மாணவிகளாக இருந்தாலும் கூட, பேராசிரியைகளிடம் பணிபுரிவது இன்னும் கடினம். சொந்த வேலைகள்தான் அதிகம் கொடுப்பார்கள்" என்று தனது நண்பர்களுக்கு நேர்ந்த பல அனுபவங்களை விவரித்தார் இளமதி.

ஆராய்ச்சி மாணவர்கள்
Getty Images
ஆராய்ச்சி மாணவர்கள்

"சில பேராசிரியர்கள், தங்களது பாலியல் இச்சைக்கும் அப்பாவி ஆராய்ச்சி மாணவிகளை அச்சுறுத்திப் பணிய வைக்கும் கொடுமையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது' என்று வேதனைப்படுகிறார் இளமதி.

"இன்னும் கொடுமை என்னவென்றால், நாம் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை தனக்கு வேண்டிய இன்னொரு மாணவனுக்கு எடுத்துக் கொடுத்துவிடும் கொடை வள்ளல்' பேராசிரியர்களும் இருக்கிறார்கள்" என அவர் குற்றம் சாட்டுகிறார்.

"ஆராய்ச்சியாளராகத் துடிக்கும் இளைஞர்களின் லட்சியங்களைவிட, லட்சங்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது" என்று முத்தாய்ப்பாக தனது மனக்குமுறல்களைக் கொட்டி முடித்தார் இளம் ஆராய்ச்சியாளர் இளமதி.

கலாநிதி கருத்து

முன்னேறத் துடிக்கும் இந்திய இளைஞர்களுக்கு ஏன் இப்படிப்பட்ட சவால்கள் தடையாக இருக்கின்றன என்று முன்னாள் துணைவேந்தர் கலாநிதி அவர்களிடம் கேட்டபோது, "தற்போது, தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு கமிட்டியிலும் அவர்களின் ஆதிக்கம் இருக்கிறது. எனவே, தகுதியுள்ள ஆராய்ச்சிகளுக்கு நிதி கிடைக்காமல் போய்விடுகிறது" என்றார்.

தென்னிந்தியாவில் இருந்து அனுப்பப்படும் தகுதி படைத்த ஆராய்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், தகுதியற்ற வட இந்திய ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்படுவதும் நடப்பதாகக் கூறும் கலாநிதி, தென்னிந்திய மாணவர் அனுப்பும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் டெல்லியில் வேறு ஒருவருக்கு மாற்றப்படுவதாக இளமதியின் குற்றச்சாட்டை உறுதி செய்கிறார் கலாநிதி.

இதுபோன்ற முறைகேடுகள், ஐஐடி போன்ற பெரிய நிறுவனங்களில் குறைந்த அளவிலும், மற்ற நிறுவனங்களில் அதிக அளவிலும் நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

உண்மையான ஆராய்ச்சி நடக்கிறதா?

"கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மற்றும் தனியார் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் 50-க்கு 50 என்ற விகிதத்தில் இருந்தன. தற்போது, தனியார் 97 சதம், அரசு நிறுவனங்கள் 3 சதம் என்ற அளவுக்கு மாறிவிட்டன. ஆராய்ச்சியே தற்போது வர்த்தகமயமாகிவிட்டது. உண்மையான ஆய்வு 20 சதம்தான் நடக்கிறது" என்கிறார் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி.

கைடு என்று கூறப்படும் ஆராய்ச்சிக்கு உதவும் பேராசிரியர்கள், மாணவர்களை துன்புறுத்துவதாக இளமதியைப் போன்ற ஏராளமான மாணவ, மாணவிகள் கூறும் குற்றச்சாட்டு உண்மைதான் என்று கூறும் கலாநிதி, ஐஐடி போன்ற நிறுவனங்களில் 25 சதம் அளவுக்கும் பிற கல்வி நிறுவனங்களில் 75 சதம் அளவுக்கும் நடப்பதாகச் சொல்கிறார்.

இந்தக் களைகளை அகற்றி, கல்வி வளாகங்களைத் தூய்மைப்படுத்த முடியாதா?

"யார் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கொடுக்கிறார்கள் என்பதில் துவங்க வேண்டும். லாப நோக்கமற்ற, அறக்கட்டளை என்ற பெயரில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் 99.9 சதம், வர்த்தகமயமாகிவிட்டன. அங்கிருந்து சுத்தப்படுத்தத் துவங்க வேண்டும்" என்பது முன்னாள் துணைவேந்தர் கலாநிதியின் ஆழமான கருத்தாக உள்ளது.

பூனைக்கு மணி கட்டப்போவது யார்?

இதையும் படிக்கலாம் :

வலியை உணராமல் இருப்பது வலிமையா? பலவீனமா?

தந்தையரின் ஈடுபாடு குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்கும்

கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)

அபூர்வத் திமிங்கிலங்களின் கொம்பு வேட்டை:

மனிதரைப்போன்ற இன்னொரு இனம் கண்டுபிடிப்பு:

BBC Tamil
English summary
Research students in India are struggling to complete the task in their hands, thanks to corruption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X