For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜீவ் கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது- தமிழகம் வாதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை நன்னடத்தை அடிப்படையில், விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மத்திய அரசின் அனுமதியுடன் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுவது மாநில அரசின் அதிகாரத்தை நசுக்கும் செயல் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்தது.

State government has the rights to release Rajiv Gandhi assassination case convicts: TN

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை 2014ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

பின்னர், நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பை திருத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ரஞ்சன் கோகேய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்பட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று கூறி, மத்திய அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதனிடையே ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுமீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இதில், மத்திய அரசு சார்பில் ஐந்தாவது நாளாக இம்மனு மீதான வாதங்கள் கடந்த வாரம் முன்வைக்கப்பட்டன. அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதாடிய போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ.தான் முழுமையாக விசாரித்தது. அவ்வாறு இருக்கும்போது இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஆயுள் கைதிகளை தன்னிச்சையாக விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்குக் கிடையாது.

தமிழக அரசு இதுபோன்ற முடிவை எடுக்கும் முன், மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இதுவே சட்ட நடைமுறை. ஆனால், இந்த வழக்கில் தமிழக அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டதுடன், மத்திய அரசின் கருத்தையும் அறியாமல் செயல்பட்டது தவறு.

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் அனைவருக்கும் ஏற்கெனவே தண்டனைக் குறைப்பு சலுகையை நீதிமன்றம் அளித்துவிட்டது. இதற்கு மேலும் அவர்களுக்கு சலுகை காட்டி விடுதலை செய்ய முற்பட்டால் அது குற்றவாளிகள் ஆதாயம் அடைவதற்கு வழி வகுக்கும்.

மேலும், இதுபோன்ற கொடிய குற்றங்களைச் செய்தவர்களை விடுவித்தால் அதன் பின்னர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது கடினம். விடுதலை செய்வதற்கு முன் எந்த கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை. மேலும் 7 பேரின் விடுதலையை வைத்து தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது.

எனவே, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுத் தரப்பு வாதத்தை நிறைவு செய்து கொள்வதாக ரஞ்சித் குமார் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜேஷ் திரிவேதி வாதிடும்போது, மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு வராது என்று தமிழக அரசு ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது. கூட்டாட்சி முறையில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வேறுபட்ட கருத்துகள் நிலவுவது சாதாரண விஷயம். இதே நிலைதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் நீடித்து வருகிறது என்றார்.

இதையடுத்து, நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்து விட்டதால், தமது வாதத்தை மேலும் தொடர தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி அனுமதி கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசு மனு மீதான விசாரணையை செவ்வாய்கிழமையான இன்றுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இன்று வாதத்தை தொடர்ந்த தமிழக அரசு வழக்கறிஞர் கூறியதாவது: தண்டனைக் குறைப்பு என்பது சிறைக் கைதிகளின் நன்னடத்தையைப் பொருத்து எடுக்கக் கூடிய முடிவு. இதில், விசாரணை அமைப்பு, வழக்கின் முக்கியத்துவத்தை கருதி முடிவு எடுக்கப்படுவதில்லை.

தண்டனைக் குறைப்புக்கு, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது மாநில அரசின் அதிகாரத்தை நசுக்குவதாகும். சட்டசபையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ஒருமனதாக தீர்மானித்தை முன்மொழியும் போது அதனை நிறைவேற்றுவது அரசின் கடமையாகும். இவ்வாறு வாதம் நடந்தது.

English summary
Tamilnadu government has the rights to release Rajiv Gandhi assassination case convicts, says TN advocate in the supreme court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X