For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பற்றியெரியும் குஜராத்... சங் பரிவாரின் சதிக்கு பலியாவாரா மோடி?

By R Mani
Google Oneindia Tamil News

குஜராத் கடந்த மூன்று நாட்களாக பற்றியெறிந்து கொண்டிருக்கிறது.காரணம் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரி போராடும் பட்டேல் சமூகத்தினர்தான்.

குஜராத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் தொழில், வர்த்த்தகம் போன்றவற்றில் முன்னிணியில் உள்ள சமூகத்தினர்தான் பட்டேல்கள்.

குஜராத் மக்கள் தொகையில் இவர்கள் 15 சதவிகிதத்தினர். இதில் மற்றோர் ஆச்சரியமான விஷயம் இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவது 22 வயது ஹர்தீக் பட்டேல் என்ற இளைஞர். பட்டீதார் அனமத் ஆந்தோலன் சமிதி என்ற போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்தீக் பட்டேல்.

The real background for Gujarat violence

புதன்கிழமை இரவு வரையில் ஒன்பது பேர் இந்தக் கலவரத்தில் கொல்லப் பட்டனர். கட்டுங்கடங்காமல் போன கலவரத்தை ஒடுக்குவதற்கு ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குஜராத் தலைநகர் அஹமதாபாத் வந்திறங்கினர். 2002 ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய கலவரம் ஒரு மாதகாலம் நீடித்தது. இரண்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிர்கத்தியாகினர். அதன் பின்னர் 13 ஆண்டுகாலத்துக்கும் மேலாக எந்த பெரிய கலவரங்களும் இல்லாமல்தான் குஜராத் இருந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக நிலைமை எல்லை மீறிக் கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக பட்டேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி போராடி வருகின்றனர். ஆனால் செவ்வாய்க் கிழமை முழு பந்த் அடைப்புக்காக அழைப்பு விடுக்கப் பட்டதை தொடர்ந்து நிலைமை முற்றத் துவங்கியது. செவ்வாய் மாலையில் ஹர்தீக் பட்டேலை இரண்டு மணி நேரம் கைது செய்த போலீசின் தவறான அணுகுமுறைதான் கலவரத்தை கொழுந்த விட்டெறியச் செய்ய பிள்ளையார் சுழி போட்டதாக கூறப்படுகிறது.

கைதான இரண்டு மணி நேரத்திலேயே ஹர்தீக் பட்டேல் விடுதலை செய்யப் பட்டாலும், இது கொந்தளிப்பான சூழலை உருவாக்கி விட்டது. வரலாறு காணாத விதத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அவர்களது வீடுகள், அலுவலகங்களை கொளுத்தத் தொடங்கினர். குறைந்தது 50 துணை போலீஸ் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்பட்டார். பல பாஜக அலுவலகங்களும், முனிசிபல் அலுவலகங்களும் எரிக்கப்பட்டன. 15 பாஜக தலைவர்கள் குறி வைத்து தாக்கப் பட்டனர். மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அடி விழுந்தது. மாநில உள்துறை இணையமைச்சர் ஆர் பட்டேலின் அலுவலகம் எரிக்கப் பட்டது. அஹமாத்பாத்தின் ஒன்பது பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 300 பஸ்கள் எரித்து சாம்பாக்கப்பட்டன. வட குஜராத்தில் நிலவரம் முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்தது வன்முறை கோர தாண்டவமாடியது, அரசு அலுவலகங்களும், வங்கிக் கட்டிடங்களும் தீக்கிரையாயின, தேசீய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

The real background for Gujarat violence

பட்டேல் சமூகத்தினர் குஜராத்தின் முன்னேறிய வகுப்பினர். 15 சதவிகித வாக்கு வங்கி இவர்களுடையது. 30 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் அப்போதய காங்கிரஸ் அரசு சமூக ரீதி யாக பிற்பட்டவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது அதனை பட்டேல் சமூகத்தினரின் துணை கொண்டு பாஜக கடுமையாக எதிர்த்தது. ஆட்சியையும் கைப்பற்றியது.

ஆனால் இன்று ஆட்சிக் கட்டிலை பல்லாண்டுகள் அலங்கரிக்க பேருதவி புரிந்த பட்டேல் சமூகத்தினரிடம் வசமாய் மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறது பாஜக.

பாஜகவின் 120 எம்எல்ஏக்களில் 40 பேரும், 26 எம்பிக்களில் 5 பேரும் பட்டேல்கள், கடந்த மூன்று நாள் கலவரத்தில் குறைந்தது ஆறு மாநில அமைச்சர்கள், 15க்கும் மேற்பட்ட எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. இதிலிருந்தே எந்தளவுக்கு பாஜகவினர் மீது போராட்டக்காரர்கள் கோபமாக இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளலாம். கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரசை ஆட்சிக் கட்டிலின் அருகிலேயே வரவிடாமல் ஓட ஓட துரத்திக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு பட்டேல் சமூகத்தினரின் பேராதரவே பெருந்துணையாக இருந்து வருகிறது.

என்ன ஒரு ஆச்சர்யமென்றால், ஒரு 22 வயது இளைஞன் இவ்வளவு பெரிய போராட்டத்தை, ஐந்து லட்சம் பேருக்கு மேல் திரளக் கூடிய ஒரு கூட்டத்தை கூட்டி மூன்று நாட்கள் மாநிலத்தையே ரணகளமாக்க கூடிய போராட்டத்தை நடத்த முடியுமா என்பதுதான். இதற்கான பதில், நிச்சயம் 22 வயது இளைஞனால் மட்டுமே இது சாத்தியமாகாது என்பதே.

அப்படியென்றால் இதனைச் செய்வது யார்? ஹர்கீத் பட்டேலை இயக்குவது யார்? சர்வ வல்லமை பொருந்திய மோடி பிரமராகி டில்லி போய் விட்டாலும், அவரது தொண்டரடிப் பொடியாக இருக்கும் ஆனந்தி பென் என்ற பெண் முதல்வர்தான் இன்று குஜராத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். இன்னமும் குஜராத் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில்தான் மோடி வைத்துக் கொண்டிருக்கிறார். அப்படியிருக்கையில் இந்த வரலாறு காணாத வன்முறைக்கு யார் காரணம்? காங்கிரஸ் கட்சி இத்தகைய கலவரங்களை தூண்டி விடும் திறனை இழந்துவிட்டதென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

The real background for Gujarat violence

2014 மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் மொத்த 26 இடங்களையும் பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ் கட்சி அம் மாநிலத்தில் துடைத்தெறியப்பட்டதை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. சிதிலமடைந்து போயுள்ள காங்கிரஸ் இன்று இத்தகைய காரியங்களில் ஈடுபட்டால், அதற்கு தான் கொடுக்கும் விலை பிரம்மாண்டமானது என்பது அக் கட்சிக்கு நன்றாகவே தெரியும். மத்தியிலும் மாநிலத்திலும் அசுர பலத்துடன் இருக்கும் மோடி கட்சியை எதிர்த்து, அன்றாட வாழ்வை துவம்சமாக்கும் காரியங்களில் ஈடுபடுவதென்பது தற்கொலைக்குச் சமம் என்பதை சோனியா வின் சீடர்களும் நன்றாகவே அறிவர்.

ஆகவே இது மோடியால் சுலபத்தில் தொட முடியாவர்களின் வேலைதான். அவர்களின் பின் புலத்தில்தான் இது நடக்கிறது என்பதே உண்மை. ஹர்தீக் பட்டேல் விஎச்பி தலைவர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது உண்மையை அம்பலமாக்கிவிட்டது.

மோடிக்கும், இந்த விஎச்பி தலைவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஆனந்தி பென்னுக்கும் இந்தத் தலைவருக்கும் கூட நீண்ட பகை உண்டு. ‘இந்த கலவரங்களை இந்தளவுக்கு ஊக்குவித்து நடத்துவது யாரென்பது மோடிக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது. சங் பரிவாரத்தின் முக்கிய அங்கத்தினரை தொடுவதற்கு மோடி ஒன்றும் விவரம் தெரியாதவர் அல்ல. தான் நினைத்தது எதுவும் நடக்காத விரக்தியால், வெறுப்பால், அந்தத் தலைவர் இந்தக் கலவரத்தை தூண்டிக் கொண்டிருக்கிறார் என்பதை அவ்வளவு சுலபத்தில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது' என்கிறார் குஜராத்தின் முன்னணி பத்திரிகையாளர் ஒருவர்.

‘கோடிக்கணக்கான ரூபாய் இந்தப் போராட்டங்களுக்காக செலவிடப்பட்டிருக்கிறது. இது எங்கிருந்து வந்த பணம்? இதனைப் புரிந்து கொண்டால் இதனை பின்னாலிருந்து இயக்குபவர்கள் யாரென்பதையும், அவர்கள் சங் பரிவாரத்தாலும்,மோடியாலும் அவ்வளவு சுலபத்தால் தொட முடியாதவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்' என்கிறார் மேலும் அவர்.

மற்றோர் காரியமும் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் மோடிக்கு எதிரான வேலை இதுவென்றால், மற்றோர் புறம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் காரியமாகவும் இது பார்க்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டின் மரபார்ந்த எதிரிகள்தான் சங் பரிவாரத்தினர்.

இட ஒதுக்கீடு தேவையா என்பதை மறுபரிசீலனை செய்ய ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என விஎச்பியின் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கோரிக்கை விடுத்துள்ளார். ஜாதிரீதியிலான இட ஒதுக்கீடே தவறு என்கிறார்.

இட ஒதுக்கீட்டை வைத்து புதிய விவகாரத்தை ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் பாஜகவுக்கு கிடைக்கப் போவது ஆதாயமா, இழப்பா என்பதை அடுத்தடுத்து இதில் ஏற்படப் போகும் திருப்பங்களே நிர்ணயிக்கும்.

-ஆர்.மணி

English summary
Columnist R Mani describes in this article about the background of the recent Gujarat violences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X