இரட்டை இலை: ஓபிஎஸ்- சசி அணிகளுக்கு ஜூன் 16 வரை தேர்தல் ஆணையம் அவகாசம்

இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அதிமுகவின் இரு அணிகளுக்கும் ஜூன் 16ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க சசிகலா, பன்னீர்செல்வம் அணிகளுக்கு ஜூன் 16ம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்கள் அளிக்க இரு அணிகளும் அவகாசம் கேட்டு இருந்தனர். இதை அடுத்து அவர்களுக்கு அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என செயல்பட்டு வருகின்றனர்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் அணியினர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

இரட்டை இலை சின்னம்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகின. இது குறித்தும் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அதிமுக கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி வைத்தது. ஏப்ரல் 17ஆம் தேதி இருதரப்பினரும் இரட்டை இலை சின்னம் குறித்த உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

ஆவணங்கள் தாக்கல்

இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பினர், சுமார் 40 லட்சம் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். ஆனால் சசிகலா தரப்பினர் ஆவணங்களை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வந்தனர்.

அவகாசம் கேட்டு மனு

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கூறி சசிகலா தரப்பு சார்பில், தேர்தல் ஆணையத்திடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஜூன் 16 வரை அவகாசம்

சசிகலாவின் மனுவை ஏற்ற தேர்தல் ஆணையம் , இரு அணிகளும் போதிய ஆவணங்களை தாக்கல் செய்ய ஜூன் 16ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

English summary
The Election Commission has given time till June 16 for the two factions in the AIADMK to submit the documents and affidavits supporting two leaves symbol.
Please Wait while comments are loading...