For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை தாக்குதல் சதித் திட்டம் பாகிஸ்தானில்தான் தீட்டப்பட்டது... முன்னாள் பாக் விசாரணை அதிகாரி

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கான சதித் திட்டம் பாகிஸ்தானில்தான் தீட்டப்பட்டது. பாகிஸ்தானிலிருந்துதான் தீவிரவாதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்துதான் தீவிரவாதத் தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்டது என்று பாகிஸ்தான் சார்பாக மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட முக்கிய அதிகாரி கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து, 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினர். 3 நாள் நீடித்த இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் என்பவர் மட்டும் சிக்கினார். பின்னர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தூக்கிலும் போடப்பட்டு விட்டார்.

பாகிஸ்தானில் கண் துடைப்பு வழக்கு

பாகிஸ்தானில் கண் துடைப்பு வழக்கு

இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட நபர் ஜாகியுர் லக்விதான். இவர் உள்ளிட்டோர் மீது பாகிஸ்தானிலும் ஒரு கண் துடைப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு அப்படியே கிடக்கிறது.

தாரிக் கோசா

தாரிக் கோசா

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பெடரல் விசாரணை அமைப்பின் (எப்.ஐ.ஏ) முன்னாள் தலைவரான தாரிக் கோசா, சதிச் செயல் முழுவதும் பாகிஸ்தானில்தான் தீட்டப்பட்டதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

டான் எடிட்டோரியல்

டான் எடிட்டோரியல்

டான் பத்திரிகைக்காக அவர் எழுதியுள்ள எடிட்டோரியலில் இந்த பரபரப்புத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த எடிட்டோரியலின் சாராம்சம்:

பாகிஸ்தானில் நடந்த சதித் திட்டம்

பாகிஸ்தானில் நடந்த சதித் திட்டம்

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தாக்குதல், பாகிஸ்தான் மண்ணில் திட்டமிடப்பட்டு, அங்கிருந்துதான் நடத்தப்பட்டது. இந்த கோரமான தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள், மூளையாக செயல்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்புகள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு மிக நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

தட்டாவில் பயிற்சி

தட்டாவில் பயிற்சி

மும்பை தாக்குதலை நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா என்ற இடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். அங்கிருந்துதான் கடல் வழியாக தொடங்கப்பட்டது. அந்த பயிற்சி முகாம் புலனாய்வு படையினரால் அடையாளம் காணப்பட்டு, பாதுகாக்கப்பட்டது. மும்பையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனங்கள் அனைத்தும் இந்த பயிற்சி முகாமில் இருந்து பெறப்பட்டவை. இவை முறையாக பொருந்தி உள்ளன.

கசாப் ஒரு பக்கா பாகிஸ்தானி:

கசாப் ஒரு பக்கா பாகிஸ்தானி:

மும்பைத் தாக்குதலில் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தான். கசாப் ஒரு பாகிஸ்தான் குடிமகன். அவருடைய இருப்பிடம், அவர் எங்கு படித்தார், எப்போது தீவிரவாதிகளுடன் இணைந்தார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தும் நிரூபனம்

அனைத்தும் நிரூபனம்

மேலும் கசாப் உள்ளிட்ட அனைத்துத் தீவிரவாதிகளுக்கும் தட்டா என்ற இடத்தில்தான் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கிருந்துதான் இவர்கள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

திருடப்பட்ட படகு

திருடப்பட்ட படகு

தீவிரவாதிகள் மும்பைக்கு செல்வதற்காக பயன்படுத்திய படகு, இந்திய படகோட்டியிடம் இருந்து பறித்ததாகும். அந்த படகு மீண்டும் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. வர்ணம் பூசப்பட்டது. மறைக்கப்பட்டது. இந்த படகு விசாரணை அமைப்பால் கைப்பற்றப்பட்டது.

லாகூர் டூ கராச்சி டூ மும்பை

லாகூர் டூ கராச்சி டூ மும்பை

மும்பை துறைமுகம் அருகே தீவிரவாதிகளால் கைவிடப்பட்ட ரப்பர் படகின் என்ஜினில் காப்புரிமை எண் உள்ளது. அது ஜப்பானில் இருந்து லாகூருக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகும். பின்னர் கராச்சியில் விளையாட்டுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்துதான் அந்த படகை என்ஜினுடன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி வாங்கி உள்ளார்.

கராச்சியில் கன்ட்ரோல் ரூம்

கராச்சியில் கன்ட்ரோல் ரூம்

கராச்சி செயல்பாட்டு அறையில் (கன்ட்ரோல் ரூம்) இருந்துதான் மும்பை தாக்குதல் நடவடிக்கைகள் இயக்கப்பட்டன. இதை விசாரணை அமைப்பினர் கண்டறிந்தனர். பாதுகாத்தனர். தகவல் பரிமாற்றம் நடந்த இணைய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் தளபதியாக செயல்பட்டவர், அவரது உதவியாளர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகவும் சிக்கலான வழக்கு

மிகவும் சிக்கலான வழக்கு

(தாக்குதலுக்கு நிதி வழங்கிய) வெளிநாடுகளை சேர்ந்த நிதி நன்கொடையாளர்கள், அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மும்பை தாக்குதல் வழக்கு தனித்துவமானது. மற்றொரு இடத்தில் (பாகிஸ்தானில்) நிரூபிப்பது என்பது மிகவும் சிக்கலானது. மிகவும் வலிமை வாய்ந்த சாட்சியங்கள் தேவைப்படுகிறது.

தீவிரவாதப் பேய்கள்

தீவிரவாதப் பேய்கள்

எனவே பேச மறுப்பதை, ஒருவர் மீது மற்றவர் கைகாட்டுவதை நிறுத்தி விட்டு, இரு தரப்பு சட்ட வல்லுனர்கள் உட்கார்ந்து பேச வேண்டும். நாம் ஒரு நாடாக தர்மசங்கடமான உண்மைகளை எதிர்கொள்வதற்கு, நமது நாட்டை வேட்டைக்காடாக்கும் தீவிரவாத பேய்களை எதிர்த்து போரிடுவதற்கு துணிச்சலை பெற்றிருக்கிறோமா? என்று கூறியுள்ளார் அவர்.

இவ்வளவு வெட்ட வெளிச்சமாக தாரிக் தற்போது கூறியுள்ளதைத்தான் இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானிடம் கூறி லக்வி உள்ளிட்டோரைத் தண்டிக்குமாறு கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan's former FIA chief Tariq Khosa has backed Indian claim on 26/11 terror attack in Mumbai. He has said more details about the plot in an editorial written for Dawn.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X