For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களைகட்டிய ஃபெட்னா தமிழ் விழா - சான் ஓசே டவுண்டவுனில் தமிழர்கள் சங்கமம்!

By Shankar
Google Oneindia Tamil News

சான் ஓசே(யு.எஸ்): வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை (ஃபெட்னா)யின் தமிழ் விழாவிற்கு, இன்று பெருந்திரளாக தமிழர்கள் வருகை தந்தனர்.

டவுண்டவுன் என்றழைக்கப்படும் நகரின் மத்திய பகுதியில் எங்கெங்கு காணினும் தமிழர்களின் அடையாளமான வேட்டி சட்டை, பட்டுச்சேலை என கண்கொள்ளாக் காட்சியளிக்கிறது.

தொடக்க நிகழ்ச்சிகள்

தொடக்க நிகழ்ச்சிகள்

வெள்ளிக்கிழமை (இந்திய நேரப்படி சனிக்கிழமை) காலை 9:30 மணி அளவில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், விழா ஒருங்கிணைப்பாளர் தில்லைக் குமரன், வளைகுடா தமிழ் மன்றத் தலைவர் ஆறுமுகம் பேச்சிமுத்து ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.

அமெரிக்காவின் வெவ்வேறு மாநிலங்களிலும், கனடாவிலும் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தான் ஃபெட்னா. தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் தமிழ் விழாவின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.

சங்கங்களின் சங்கமம்

சங்கங்களின் சங்கமம்

புறநானுறு, பாரதியார் மற்றும் திரைப்பட பாடல்களுக்கு வளைகுடா தமிழ் மன்றம், டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் சார்பில் இடம்பெற்றது. மினசாட்டோ தமிழ்ச்சங்க சார்பில் பொய்க்கால் குதிரை நடனம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

விழா மலரை வி.ஐ.டி பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் விஸ்வநாதன் வெளியிட, திருச்சி கலைக் காவிரி கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர். மார்கரெட் பாஸ்டின் மற்றும் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வைதேகி ஹெர்பர்ட் பெற்றுக்கொண்டார்கள்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம்

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம்

தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு குறித்து புரவலர் பால் பாண்டியன், பேராசிரியர் விட்சல் , டாக்டர் பழனியப்பன் மற்றும் டாக்டர் வி.எஸ் ராஜம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அமெரிக்கரான பேராசிரியர் விட்சல் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் அமைப்பதற்கான முயற்சியை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஹார்ட்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுவதற்கும், தமிழ் மொழி, வரலாறு மற்றும் பண்பாடு குறித்து ஆராய்ச்சிகள் செய்வதற்கும் வழி வகை செய்யப்படும்.

பொன்னாடை வேண்டாம், வாழைக் கன்று போதும்!

பொன்னாடை வேண்டாம், வாழைக் கன்று போதும்!

இந்த முயற்சியை வரவேற்ற டாக்டர் வி.எஸ் ராஜம், உடனடியாக தன்னுடைய சொந்த பணத்திலிருந்து, ஆரம்ப கட்ட பணிகளுக்கான முதலீட்டுப் பணம் (Seed Money) கொடுப்பதாக உறுதியளித்தார். உலகத் தமிழர்கள் இந்த முயற்சிக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக தனக்கு பொன்னாடை, மாலை மரியாதை ஏதும் வேண்டாம். ஒரு வாழைக் கன்று கொடுங்கள் போதும் என்றார் டாக்டர் ராஜம். வாழையடி வாழையாக தமிழும் தமிழர்களும் செழிப்பாக வளர வேண்டும் என்பதற்காக அதை குறிப்பிட்டார்.

வேந்தர் விஸ்வநாதன் - துணைத் தூதர் வெங்கடேசன்

வேந்தர் விஸ்வநாதன் - துணைத் தூதர் வெங்கடேசன்

விஐடி பல்கலைக் கழக வேந்தர் டாக்டர்.ஜி.விஸ்வ நாதன், இந்திய துணைத் தூதர் வெங்கடேசன் அசோக் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழறிஞர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். இசை மேதை பாபநாசம் சிவன் அவர்களுக்கு அஞ்சலி செய்யப்பட்டது.

அப்துல் ஹமீது, ஆர்.ஜே தீனா, படவா கோபி பங்கேற்ற வானொலி கதம்ப மாலை நிகழ்ச்சி நடந்தது. தீனாவும் கோபியும் சூப்பர்ஸ்டார் உட்பட பல திரை நட்சத்திரங்கள் பலகுரல்களில் பேசி அசத்தினார்கள்.

அரங்கம் நிறைந்த தமிழிசை

அரங்கம் நிறைந்த தமிழிசை

இரவு உணவு இடைவேளைக்கு பிறகு முனைவர் சௌம்யாவின் தமிழ் இசை நிகழ்ச்சி நடந்தது. அரங்கம் முழுவதம் நிறைந்த போதிலும், கனத்த அமைதியுடன் கேட்டு கரகோஷத்துடன் பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினார்கள். தமிழ் இசைக்கு இத்தனை ஏகோபித்த வர்வேற்பை பார்த்த போது சிந்துபைரவி படத்தின் 'பாடறியேன் படிப்பறியேன்' பாடல் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை.

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள் வளைகுடா தமிழர்களின் நடிப்பில் சிவகாமியின் சபதம் நாடகத்துடன் நிறைவு பெற்றன.

கோவூரில் இளையர் மன்றம்

கோவூரில் இளையர் மன்றம்

நாள் முழுவதும் பல்வேறு தனி அரங்கங்களில் இணை நிகழ்ச்சிகள் (parallel sessions) இடம் பெற்றன. முக்கிய அரங்கம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அரங்கம் என பெயரும், தனி அரங்கங்களுக்கு காஞ்சி, வன்னி, ஆவினன் குடி, திருகோணமலை, கோவூர் , புகார், கொற்கை, கூடல், உறையூர் என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது.

கோவூர் அரங்கத்தில் இளையர் மன்ற நிகழ்ச்சிகளும், காஞ்சியில் தொழில் முனைவோர் கூட்டம், வன்னியில் திருக்குறள் / தமிழ்த் தேனீ போட்டி, திருகோணமலையில் சதுரங்கப் போட்டி, புகாரில் உலக தமிழ் அமைப்புக் கூட்டம், கொற்கையில் நலம் தரும் மருத்துவம், நாடு கடந்த தமீழழ அரசாங்க கூட்டம், கூடலில் பறை இசை பயிற்சி பட்டறை, எழுத்தாளர் பூமணியுடன் சந்திப்பு ஆகியவை இடம்பெற்றன.

உறையூரில் அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகத்தின் செயல்திட்டங்களை விவரிக்கும் கூட்டம் நடைபெற்றது. ஆவினன் குடியில் மருத்துவர்களுக்கான தொடர் பயிற்சி முகாமில் ‘Potpourri for Primary Care Physicians and Specialists' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

சனிக்கிழமையின் சிறப்பு நிகழ்ச்சிகள்

சனிக்கிழமையின் சிறப்பு நிகழ்ச்சிகள்

அளவில் தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை, விழா தொடர்கிறது. தமிழ்த் தேனி இறுதிச் சுற்றுப் போட்டி, பேராசிரியர் அப்துல் காதர் பங்கேற்கும் கவி அரங்கம் , அமெரிக்க தமிழ் இளைஞர்களின் தமிழன் தமிழச்சி நிகழ்ச்சி, திருக்குறள் நடனம், கோலாட்டம், காவடி, சிலம்பம் மற்றும் தமிழ் இலக்கிய வினாடி வினா வும் இடம் பெறுகின்றன.

சங்கங்களின் சங்கமம் அணிவகுப்பு மாலையில் நடைபெறுகிறது. தொடர்ந்து, குறும்படம் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்
இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

தொடர்ந்து நடிகர் மாதவன் பார்வையாளர்களுடன் உரையாடுகிறார். ஹரிசரண், ஆலப்ராஜு, பூஜா, பிரகதி பங்கேற்கும் பென்னட் & பேண்ட் இன்னிசையுடன் சனிக்கிழமை நிகழ்ச்சிகள் நிறைவுபெறுகின்றன.

சான் ஓசே ஃபெட்னா அரங்கிலிருந்து இர தினகர்.

English summary
Thousands of Tamils from all over US and Canada have attended Fetna Tamil convention at San Jose, USA Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X