For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ?

By டாம் கீட்டிங் - நிதி, குற்றம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மையம்
|

கத்தாரை , சௌதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகள் தனிமைப்படுத்திய சர்ச்சை, அந்த எரிவாயு வளமிக்க நாடு , மத்தியக்கிழக்கு பகுதியின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளிலிருந்து வருகிறது.

கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி
Reuters
கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி

கத்தாரின் தன்வழி சார்ந்த வெளியுறவுக் கொள்கை பற்றி கத்தாரின் அண்டை நாடுகள் அதிருப்தி தெரிவித்திருப்பது இது முதல் முறை அல்ல - கத்தாருடன் அந்த நாடுகள் தங்கள் ராஜீய உறவுகளை 2014ல்கூட ஒன்பது மாதங்களுக்குத் துண்டித்திருந்தன.

இஸ்லாமியவாத முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கு கத்தாரின் ஆதரவு, தாலிபான் மற்றும் அல் கயிதாவின் துணைக் குழுக்களுடன் அதற்குள்ள நெருங்கிய உறவு, இரானுடன் உறவு போன்றவை காரணமாக பதற்றங்கள் எழுந்துள்ளன.

இந்த இரான் தொடர்பு காரணமாக, கத்தார் அரசிடமிருந்து நிதி உதவி பெற்று இயங்கும் அல் ஜசீரா தொலைக்காட்சி சானல் , சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆதரவு பெற்ற யேமன் அரச படைகளை எதிர்த்துப் போரிடும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தருவதாக சமீபத்தில் சௌதி அரேபியா குற்றஞ்சாட்டியிருந்தது.

சௌதி அரேபியாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த கத்தார், தான் தனது அண்டை நாடுகள் சிலவற்றைக் காட்டிலும், பலமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கூறுகிறது.

கத்தார்
EPA
கத்தார்

எனினும், இந்த சமீபத்திய சர்ச்சை, கத்தார் தனது பெருஞ்செல்வத்தை எப்படிப் பயன்படுத்துகிறது, என்ன பங்காற்றுகிறது என்பதை குறிப்பாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த 26 பேர் மற்றும் சிரியாவில் ஜிஹாதிகளால் கைப்பற்றப்பட்ட பல டஜன் கணக்கான ஷியா போராளிகளை விடுவிக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரலில் சிரியாவில் உள்ள ஒரு முன்னாள் அல் கயீதா துணைக்குழுவிற்கும், இரானிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், கத்தார் சுமார் ஒரு பிலியன் டாலர்கள் தந்தது என்று கூறப்படுகிறது.

எனவே , புரட்சிகர சித்தாந்தத்துக்கும், தீவிரவாதத்துக்கும் தொடர்ந்து கத்தார் நிதியுதவி செய்து வருவதாகக் கூறப்படுவதுதான் இம்முறை கவலையை எழுப்பும் விஷயமாக இருக்கிறது.

கத்தார்
AFP
கத்தார்

9/11 தாக்குதலுக்கு பிறகு குவியும் அதிக கவனம்

9/11 தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்க அமெரிக்கா தலைமையில் உலகளாவிய முயற்சிகள் இடைவிடாமல் நடக்கின்றன.

உள்நாட்டு சட்டங்கள் மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபை மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அமைப்புகளும், தனிநபர்களும், நாடுகள் மற்றும் ஐ.நாவின் தடைகளுக்கு உட்பட்டுள்ளன.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியை அனுப்பும் வழிகளாக சந்தேகிக்கப்படும், பணம் அனுப்பும் நிறுவனங்கள் மற்றும் அற நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

ஆனால் இவைகளை மீறி, கத்தார் உட்பட சில முக்கிய நாடுகளின் உறுதிப்பாடு மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

''நெடுங்காலமாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்த கத்தார், பல ஆண்டுகளுக்காக வெளிப்படையாகவே, பிராந்திய ஸ்திரத்தன்மையை குலைத்துவரும் ஒரு குழுவான, ஹமாஸ் இயக்கத்திற்கு நிதி அளித்து வந்துள்ளது. சிரியாவில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் அரசாங்கம் ஆதரவு தருவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன,'' என்று 2014ல் அமெரிக்காவின் கருவூல அமைச்சின், பயங்கரவாதம் மற்றும் நிதிப் புலனாய்வு துறைக்கான துணைச் செயலாளர் டேவிட் கோஹன் தெரிவித்தார்.

கத்தாரில் அல் கயீதா மற்றும் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு போன்ற தீவிரவாதக் குழுக்களுக்கு நன்கொடைகளை திரட்டுபவர்களை அனுமதிக்கும் ஒரு தாராள சூழ்நிலை நிலவியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத்த்துக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதை கத்தார் காட்டினாலும், கத்தார் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது என்று கோஹெனுக்குப் பதிலாக அமெரிக்க கருவூல அமைச்சகத்தில் பதவியேற்ற ஆடம் ஸுபின் 2016ல் கூறினார்.

மேலும் நடவடிக்கை எடுக்க தேவையான அரசியல் மனோதிடம் மற்றும் அனைத்து பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக சட்டங்களை திறம்பட அமல்படுத்துவதற்கான திறன் கத்தாரிடம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, பல கத்தாரி பிரஜைகள் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்தனர் என்று கூறி அமெரிக்கா அவர்கள் மீது தடைகளை விதித்தது.

கடந்த மாதம் ரியாத் நகரில் சௌதி அரேபியாவின் மன்னர் சல்மான்னை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
AFP
கடந்த மாதம் ரியாத் நகரில் சௌதி அரேபியாவின் மன்னர் சல்மான்னை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஆயினும் கத்தாரின் நிதி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தலைமை தாங்கி நடத்தினாலும், சந்தேகத்திற்கிடமின்றி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சமீப விஜயத்தால் துணிச்சல் அடைந்திருக்கும் சௌதி அரேபியா ஒன்றும் இதே போன்ற விமர்சனத்திலிருந்து தப்பிவிடவில்லை.

9/11 விமானக் கடத்தல்களில் ஈடுபட்ட 19 பேர்களில் 15 பேர் சௌதி பிரஜைகள்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட. 2009 காலகட்டத்தில் பரிமாறப்பட்ட ராஜிய கேபிள்கள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நன்கொடை தருபவர்களை சமாளிப்பதை முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள சௌதி அரசை இணங்கச் செய்வதில் இருந்த சிரமங்களைப் பற்றி அமெரிக்காவுக்கு தொடர்ச்சியாக இருந்த விரக்தியைப் பிரதிபலிக்கின்றன.

மேலும், சௌதி தன்னிடம் இருக்கும் எண்ணெயால் வந்த செல்வத்தை, உலகெங்கும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மசூதிகள் வழியாக, அதன் அடிப்படைவாத வஹாபி இஸ்லாம் கொள்கையைப் பரப்ப பயன்படுத்தியிருக்கிறது.

இந்த பள்ளிக்கூடங்களும், மசூதிகளும் தீவிரவாதத்துக்கு காரணமாக உள்ளன என்ற குற்றச்சாட்டு சிலரால் எழுப்பப்படுகின்றன.

கத்தார்
AFP
கத்தார்

சௌதி அரேபியாவில் சிறிய எண்ணிக்கையில் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தாலும், சௌதி அரேபியா கத்தாரை விட தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பட்டை எடுப்பதாகத் தோன்றுகிறது.

அதன் முயற்சிகளுக்காக அங்கீகாரமும் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சௌதி அரேபியாவுக்கு சென்ற சமயத்தில், அமெரிக்கா மற்றும் சௌதி இணைந்து கூட்டாக பயங்கரவாதத்திற்கு நிதிஅளிப்பதை குறிவைக்கும் பிராந்திய அளவிலான ஒரு மையம் தொடங்கப்படுவது குறித்த அறிவிப்பை இரு அரசுகளும் வெளியிட்டன.

பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் புதிய மற்றும் வளர்ந்து வரும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மையமாக அது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் பார்வையில் சௌதி அரேபியா தீவிரவாதத்திற்கு நிதி அளிக்கும் ஒரு பிரச்சனைக்குரிய நாடாக இருந்த நிலையில் இருந்து, வளைகுடா பிராந்தியத்தில் அது தீர்வில் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது .

கத்தார்
Getty Images
கத்தார்

கத்தார் மீது சந்தேகம் ஏன் ?

ஆனால் சௌதி அரேபியா, பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் பிரச்னையை சமாளிப்பதாக உறுதியளித்து மட்டுமே போதுமானதாக இருக்காது.

தீவிரவாத குழுக்களுக்கு நேரடியாக நிதியளிப்பதைப் பற்றி ஆச்சரியமளிக்காதவகையில், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முக்கிய கவனம் செலுத்தினாலும், தீவிரவாத அல்லது தீவிரவாத சிந்தனைகளை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நிதியளிக்கும் நபர்கள் மீது சமீபத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

பிரிட்டனின் மக்களவையில் 2015 டிசம்பரில், இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் மீது இராக்கிலிருந்து சிரியாவுக்குள் நடத்தப்பட்டுவந்த பிரிட்டிஷ் குண்டுத்தாக்குதல்களை தொடர்வது குறித்த விவாத்த்தில் பேசிய அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், பிரிட்டனுக்குள், தீவிரவாதத்துக்கு நிதி தரும் எஞ்சியிருக்கும் எந்த ஒரு அமைப்பையும் வேரறுக்கவும், அதன் தன்மை, அளவு மற்றும் பிரிட்டனுக்குள் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைக்கு தேவையான நிதி வெளிநாடுகள் உட்பட எங்கிருந்து வருகிறது என்பதை ஆராயவும் ஒரு முழுமையான ஆய்வு ஒன்றை நிறுவுவது குறித்து உறுதியளித்தார்.

இது வளைகுடா விவகாரங்களின் தற்போதைய நிலைக்கு நம்மை மீண்டும் கொண்டு செல்கிறது.

முன்பு போலவே விரைவில் இந்த நெருக்கடியும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த சண்டை காரணமாக, பயங்கரவாதத்துக்கு நிதி தருவது மற்றும் தீவிரவாத சித்தாந்தம் ஆகியவை மீது அதிகரித்துள்ள கவனம், நீடித்து நிலைத்திருக்கும்.

கத்தாரைப் பொறுத்தவரை, அது இந்த விஷயம் எவ்வளவுதான் நியாயமற்றது என்று எண்ணினாலும், தீவிரமான சந்தேகத்தின் மையமாக அது தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்

தொடர்புடைய கட்டுரைகள்:

கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்

இரானை அடுத்து கத்தாருக்கு உணவு பொருட்களை அனுப்பியது மொராக்கோ

'செளதி அரசர் ஷா சல்மானின் மனதில் கத்தார் மக்களுக்கு இடம் உண்டு'

கத்தார் மீதான தடை: இந்தியர்களின் நிலை என்ன?

BBC Tamil
English summary
he dispute that has seen Saudi Arabia and its Gulf allies isolate Qatar stems from allegations that the tiny gas-rich nation is sponsoring extremist groups which are destabilising the Middle East.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X