For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிஜிபி பதவி.. முட்டி மோதும் 5 தலைகள்!

By Staff
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

தமிழகத்திற்கு புதிய டிஜிபி ஜூலை 1 ம் தேதிக்குள் நியமிக்கப் பட வேண்டும். காரணம் தற்போதய டிஜிபி யான டி.கே. ராஜேந்திரன் இம் மாதம் 30 ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த முறை டிஜிபி ரேசில் ஐந்து டிஜிபிக்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் 2006 ம் ஆண்டு கொடுத்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில் எந்த ஒரு மாநிலத்திலும் டிஜிபி யாக நியமிக்கப் பட உள்ளவர் குறைந்தது இரண்டாண்டு காலம் அந்த பதவியில் நீடிக்கும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் என்பது விதி. இந்த தீர்ப்பின் சாராம்சம் இயற்கையாகவே இரண்டாண்டு காலம் பதவியில் நீடிக்க வயதுள்ள ஒருவர் (அதாவது குறைந்தது 58 வயதானவர்) அந்த பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் தமிழக அரசு பதவியிலிருந்து 60 வயதில் ஒய்வு பெறும் ஒருவருக்கு அவர் ஓய்வு பெறும் நாளுக்கு முதல் நாளன்று அவரை முழு அளவிலான (Regular DGP) டிஜிபி யாக நியமித்து விடுவது. இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட டிஜிபி தன்னுடைய 62 வயது வரையில் பணியில் இருப்பார். இதனைத் தான் ஜெயலலிதா அரசு 2011 ல் பதவிக்கு வந்ததில் இருந்து செய்து வருகிறது.

DGP appointment and politics

இவ்வாறு பலனடைந்தவர் தான் டிஜிபி யாக பதவி வகித்து ஓய்வு பெற்ற கே.ராமானுஜம். இதே கதைதான் பின்னர் டிஜிபி யாக வந்த அஷோக் குமாருக்கும் நடந்தது. 'இதன் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் தாங்கள் டிஜிபி அந்தஸ்துக்கும், அதற்கு சற்று அந்தஸ்து குறைந்த பதவிகளுக்கும் வருவது முற்றிலும் பாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக தமிழக அரசு அமல்படுத்துவதன் காரணமாக பல அதிகாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று கூறுகிறார் திமுக ஆட்சிக் காலத்தில் செல்வாக்குடன் இருந்த கூடுதல் டிஜிபி ஒருவர்.

இந்த பழங் கதையை ஏன் சொல்லுகிறோம் என்றால் இந்த கதை தெரிந்தால்தான் தற்போது ஊடகங்களில் காராசாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ’குட்கா ஊழல்’ பற்றிய உண்மையான பின்னணியின் ஒரு கோணம் புரியும்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மிகப் பெரிய அளவில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் உற்பத்தியும், விற்பனையும் கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்றதாகவும், இதில் ஒரு அமைச்சர், இரண்டு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிலருக்கு ரெகுலராக '’மாமுல் பணம்’’ கொடுக்கப்பட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

'’ஏற்கனவே வருமான வரி துறை இது சம்மந்தமான விரிவான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி விட்டதாகவும், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே இந்த அறிக்கை அனுப்பபட்டு விட்டதாகவும், ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை என்றும் ஒரு முன்னணி ஆங்கில நாளேட்டிலும், ஒரு முன்னணி தேசீய ஆங்கில செய்தி சேனலிலும் செய்திகள் வெளியிடப் பட்டன. எனக்கு தெரிந்து விவரம் அறிந்த எல்லோருக்குமே தெரிந்த இந்த விஷயத்தை தற்போது முன்னணி ஊடகங்களில் வெளியிடுவதன் நோக்கம் குறிப்பிட்ட இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் ரெகுலர் டிஜிபி யாக வந்து விடக் கூடாது என்பதுதான். இந்த தகவல்களை வலுவான ஆதாரங்களுடன் இந்த இரண்டு முன்னணி ஊடகங்களுக்கும் கொடுத்தது திமுக ஆட்சிக் காலத்தில் செல்வாக்குடன் விளங்கி, தற்போது ஓரங் கட்டப்பட்டிருக்கும் ஒரு ஏடிஜிபி தான்’’ என்று ஒன் இந்தியாவிடம் கூறினார், பெயர் கூற விரும்பாத ஓய்வு பெற்ற டிஜிபி ஒருவர்.

'’ஜெ ஆண்ட போது மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய அந்த இருவரும் தற்போது கடுங் கோபத்துடன் இருக்கிறார்கள். வருமான வரி துறையின் இந்த அறிக்கை இந்த நேரத்தில் எப்படி முன்னணியில் இருக்கும் அச்சு மற்றும் தொலைக் காட்சி ஊடகங்களின் கைகளுக்கு போய்ச் சேர்ந்தது என்பது அவர்களுக்கு தெரிந்து இருந்தாலும், அந்த இரண்டு குறிப்பிட்ட அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. இதில் மற்றோர் வேடிக்கையான விஷயம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இது புது தலைவலியை கிளப்பி விட்டிருக்கிறது. காரணம் யார் புதிய டிஜிபி யாக வந்தால் தான் சொல்லுவதை அப்படியே அவர் கேட்டு நடப்பார் என்ற புரிதல் அறவே முதலமைச்சர் எடப்பாடிக்கு இல்லாதது தான். என்னுடைய 35 ஆண்டு கால போலீஸ் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு கேலிக் கூத்தை நான் பார்த்தது இல்லை’’ என்று மேலும் கூறுகிறார் ஓய்வு பெற்ற அந்த டிஜிபி.

புதிய டிஜிபி யாக யார் வந்தாலும் அவர்கள் எந்தளவுக்கு முதலமைச்சருக்கும், மாநில அரசுக்கும் விஸ்வாசமாக இருப்பார்கள் என்பது அடுத்த கேள்வி. காரணம், மு.கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோர் முதலமைச்சர்களாக இருந்து போது அவர்களது அரசியல் ஆளுமை விஸ்வரூபம் கொண்டது. ஆனால் அத்தகைய ஆளுமை கொண்டவர்கள் தற்போது முதலமைச்சர்களாக இல்லை. '’ஏற்கனவே விஷயம் அறிந்த, ஆளுமை மிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய மோடி அரசுக்குத் தான் விசுவாசமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இதே அணுகுமுறையை தான் புதிய டிஜிபி யாக வரப் போகிறவரும் கடைபிடிக்கப் போகிறார்’’ என்கிறார் தலைமை செயலகத்தில் பணியாற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

தமிழ் நாட்டில் இரண்டு சதவிகித வாக்கு வங்கியை மட்டுமே கொண்ட பாஜக தமிழகத்தில் உண்மையிலேயே திரை மறைவிலிருந்து தான் சாதிக்க வேண்டியவற்றை எல்லாம் கன கச்சிதமாக சாதித்துக் கொண்டே இருக்கிறது என்பது சுவாரஸ்யமானதோர் விஷயம் தான்.

English summary
New DGP appointment has raised many questions on the rules and Gutka issue is said to be the impact in the new DGP appointment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X