20 ஓவர் விளையாடியிருந்தால் நாங்கதான் ஜெயிச்சிருப்போம்.. காரணம் சொல்லும் ஹைதராபாத் கோச் முரளிதரன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் 129 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா களமிறங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

தொடா்ந்து 3 மணி நேரத்திற்கும் மேல் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12.55-க்கு ஆட்டம் துவங்கியது. இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஐபிஎல் விதிமுறைப்படி, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 5.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

முரளிதரன் பேட்டி

இதுகுறித்து ஹைதராபாத் அணி பயிற்சியாளரும், இலங்கை முன்னாள் வீரருமான முத்தையா முரளிதரன் கூறியதாவது: பெங்களூர் பிட்ச் வழக்கமாக ரன் குவிப்புக்கு உதவுதான். ஆனால் இந்த வருடம் அந்த மைதானத்தில் அதிக ரன்கள் சேகரிக்க முடியவில்லை. எனவே 130 ரன்களே அதிகம் என்றுதான் நான் கருதியிருந்தேன். எனவே ஹைதராபாத் அணி எடுத்த ஸ்கோரே கொல்கத்தாவை மடக்க போதுமானதாக இருந்திருக்கும்.

இந்த ஸ்கோர் போதும்

இந்த ஸ்கோரை காத்துக்கொள்ள எங்களிடம் வலுவான பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் மழை காரணமாக 6 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு மாற்றியமைக்கப்பட்டதால் ஹைதராபாத் அணி வெற்றி பெறுவது கஷ்டமாகிவிட்டது. 20 ஓவர்கள் இருந்திருப்பின், 3-4 விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்தியிருந்தாலே, எதிரணியை சுருட்டியிருக்க முடியும்.

வேகமாக ஆடியிருக்க கூடாது

ஹைதராபாத் அணி ஏன் பெரிய ஷாட்டுகளை ஆடவில்லை என ரசிகர்கள் கேட்கலாம். இந்த பிட்சில் இதைவிட வேகமாக அடித்து ஆட முற்பட்டிருந்தால், 80 ரன்னுக்குள் சுருண்டிருப்போம். எனவே பொறுமையாக ஆடி 128 ரன்களை எடுத்தோம். இதுவே இந்த பிட்சுக்கு போதுமானதாக இருந்திருக்கும்.

மழைதான் காரணம்

ஹைதராபாத் அணி இந்த சீசன் முழுக்க சிறப்பாகவே ஆடியது. ஆனால், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு தோல்வியடைந்துவிட்டது. இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு வேலையை பார்க்க வேண்டியதுதான். கொல்கத்தா அணிக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு முரளிதரன் தெரிவித்தாரர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Sunrisers Hyderabad coach Muttiah Muralitharan said that the team would have had a better chance of making it to Qualifier 2 if it was a 20-over game instead of a six-over.
Please Wait while comments are loading...