For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேங்க் யூ டோணி....!

சென்னை: மிகக் கடினமான டூர்... போன வருஷம் கிளம்பிப் போனது.. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள். டெஸ்ட், ஒரு நாள் தொடர், உலகக் கோப்பை... கெடுபிடியான, உருப்படியான ஓய்வு இல்லாத.. எப்போதும் பந்தும், கையுமாக... கடுமையான நாட்கள்... எல்லாவற்றுக்கும் மத்தியில் டோணி, உங்கள் முகம்.. அந்த பெருமையைப் பெறத் துடித்துப் போராடிய அந்த முகம்... அது மட்டும்தான் தெரிகிறது டோணி.. உங்களுக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும்.. ஆனால் அதற்கு முன்பு உங்களிடம் நிறையப் பேச வேண்டும்.. !

சர்வதேச தரத்திலான பந்து வீச்சாளர்களைக் கொண்டிராத அணி என்ற அவப் பெயருடன் இருந்தது நமது இந்திய அணி. அந்த அணியை உங்களது பக்குவப்பட்ட கேப்டன்ஷிப்பினால், அழகான சக்தியாக உருவாக்கிய பெருமை உங்களுக்கு உண்டு டோணி... உண்மையிலேயே, சக்தி வாய்ந்த பந்து வீச்சாளர்களாக நமது ஷமியும், உமேஷ் யாதவும், இன்னும் பிறரும் மாற உங்களது வழிகாட்டுதல்தான் முக்கியக் காரணம். எங்களது கண்களுக்கு டங்கன் பிளட்சரோ, பரத்தோ, ரவி சாஸ்திரியோ, சஞ்சய் பாங்கரோ தெரியவில்லை. டோணி மட்டும்தான் தெரிகிறார்.

Thank you Dhoni

மார்வலஸ் ஜாப்... வேகமாக வந்து பந்து வீசுவது வேகப் பந்து வீச்சு அல்ல. அதில் வெரைட்டி இருக்க வேண்டும். லைன் சரியாக இருக்க வேண்டும்.. லென்த் இருக்க வேண்டும். எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படிப் போட வேண்டும் என்ற உத்தி இருக்க வேண்டும்.. புத்தியை செலுத்த வேண்டும். அதையெல்லாம்.. கணக்குப் பாடம் புரியாமல் தவிக்கும் குட்டிக் குழந்தைகளுக்கு அழகாக எடுத்துச் சொல்லித் தருவார்கள் பாருங்கள்.. அதுபோல நேர்த்தியாக சொல்லி பந்து வீச்சாளர்களைத் திருத்தி சரி செய்து தெளிவாக்கிய பெருமை டோணி, உங்களுக்கு மட்டுமே உண்டு.

ஒரு விக்கெட் கீப்பராகவும் நீங்கள் இருப்பதால், பிட்ச் எப்படி செயல்படுகிறது, பந்து எப்படி வருகிறது, எப்படி பவுன்ஸ் ஆகிறது என்பதையெல்லாம் கணிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கூடுதல் போனஸாகவே இருந்தது. இதைப் பயன்படுத்தி உங்களது பந்து வீ்ச்சாளர்களை சரியாக பயன்படுத்தி அசத்தினீர்கள் பாருங்கள்.. அதற்காகவே உங்களுக்கு ஒரு பெரிய சபாஷ் போட வேண்டும்.

இளம் வீரர்கள் அடங்கிய குழு உங்களிடம் இருந்தது. இளம்கன்று பயம் அறியாது என்பார்கள். எனவே அவர்களை சரியான வழியில் வழி நடத்தி, அவர்களுக்கு அதிகம் டியூஷன் எடுக்காமல், உங்களது கடமை என்ன என்பதை அவர்களுக்கு அழகாக புரிய வைத்து அமைதியாக இருந்து அமர்க்களமான ரிசல்ட்டுகளை நீங்கள் பெற்றுக் கொடுத்தீர்கள் பாருங்கள்.. அதற்காகவும் உங்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

வீரர்கள் தவறு செய்யும்போதெல்லாம் நீங்கள் அவர்களை அமைதியாக பார்க்கும் பார்வையிலேயே அவர்களது தவறை உணர வைக்கும் அந்த பாங்கு இருக்கிறதே... அது வேறு எந்தக் கேப்டனிடமும் பார்க்காத ஒன்று. திட்டாமல், கோப்படாமல், ஆவேசப்படாமல்... அந்த நாகரீகம்.. வேறு யாருக்குமே வராது டோணி.

கடந்த பல மாதங்களாக குடும்பத்தினரை , மனைவி, உறவுகள், நண்பர்களை விட்டு பிரிந்து வேறு தேசத்தில் நீங்கள் இருந்த காலம்.. நிச்சயம் ஜாலியான டூராக இருந்திருக்க வாய்ப்பில்லை.. எங்களால் உணர முடிகிறது.. சத்தியமாக சொல்கிறேன் தல.. எங்களால் இப்படியெல்லாம் பொண்டாட்டி, புள்ளையை பிரிந்து இருக்க முடியாது... ஆனா நீங்கள் இருந்து விட்டீர்கள்.. அதுவும் புதிதாகப் பிறந்த அந்த பட்டுக் குட்டியைக் கூட பார்க்கத் துடிக்காமல்.. அமைதியாக நிதானமான வழக்கமான புன்னகையுடன்.... யு ஆர் கிரேட் டோணி!

ஆஸ்திரேலியாவுக்கு நீங்கள் போய் இறங்கியதுமே இங்கே நம்ம ஊர்களில் எதிர்பார்ப்புகள் எழுந்து விட்டன. டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பது நம்மவர்களின் முதல் எதிர்பார்ப்பு. ஆனால் நான்கு டெஸ்ட்டும் நமக்கு சோதனையாக அமைந்தபோது திட்டாத வாய்களே இல்லை.

மிட்சல் ஜான்சன் போன்ற வேகப் புயல்களை சந்தித்து சமாளிப்பது எவ்வளவு கடினம் என்பது மைதானத்துக்கு வராமலேயே எங்களால் உணர முடிகிறபோது நேருக்கு நேர் சந்திக்கும் உங்களது வீரர்களுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த சவால்களையும் நீங்கள் அழகாக, சாதுரியமாக சந்தித்து மீண்டது மறக்க முடியாதது....

நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று சொன்னபோது நல்ல தலைவரை இழக்கிறோமே என்று வருந்தாத உள்ளம் இல்லை.. இந்தியாவை கவர்ந்த மிகச் சிறந்த கேப்டன் நீ்ங்கள்தான். சச்சின் டெண்டுல்கருக்காக 200வது டெஸ்ட் போட்டியை நடத்தி பேர்வேல் கொடுத்த நாங்கள் உங்களுக்கும் கூட அதே போன்ற சிறந்த கெளரவத்தை தாயகத்தில் நடத்தி நிச்சயம் பிரியாவிடை கொடுக்க வேண்டும்.. நிச்சயம் அதை நாங்கள் செய்ய வேண்டும்.. அதற்கான முழுத் தகுதியும் உங்களுக்கு உண்டு.

முத்தரப்புத் தொடரிலும் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனால் உங்களது கேப்டன்ஷிப் பெரும் ஆறுதலாக இருந்தது.

உலகக் கோப்பையில் இந்த துயரத்தையெல்லாம் நீங்கள் துடைத்துப் போட்டீர்கள். முதல் போட்டியிலிருந்து அரை இறுதிப் போட்டி வரை நமது அணியை நீங்கள் கொண்டு சென்ற விதம், வீரர்களை விளையாட வைத்த விதம், நீங்கள் ஆடிய விதம்.. அபாரம் அபாரம்... பாராட்ட வார்த்தைகளே இல்லை.. நிச்சயம் இப்படி ஒரு உலகக் கோப்பையை நமது அணி இதுவரை பார்த்ததில்லை.. அதுவும் ஆஸ்திரேலியாவில்... பிரமாதப்படுத்தி விட்டீர்கள்.

ஒவ்வொரு போட்டியும் ஒரு நினைவுச் சின்னம் போல மாறி நிற்கிறது.. அந்த மாற்றத்திற்குக் காரணம் டோணி... சந்தேகமே இல்லை. வாய்ச் சவடால் பேசாமல், சவால் விடாமல் ஒவ்வொரு அணியையும் நமது அணி அமைதியான முறையில் சந்தித்து அழகான கிரிக்கெட்டை கொடுத்த விதம் தித்திப்பானது.. மறக்க முடியாதது.

ரசிகர்களுக்கு எப்போதுமே வெற்றி மட்டுமே தேவை. அது அவர்களது தவறும் அல்ல.. அது மனித இயல்பும் கூட.. வென்றால் தான் சந்தோஷம்.. ஆனால் எப்படி வாழக்கையில் வெற்றியும் தோல்வியும் இயல்போ அதுபோலத்தான் விளையாட்டிலும். அதை நாம் சில நேரங்களில்.. அல்ல அல்ல.. பல நேரங்களில் உணர மறுத்து விடுகிறோம்.. ஆனால் டோணி, தோல்விக்கு நிச்சயம் நீங்கள் பொறுப்பல்ல.. நேற்று நீங்கள் தனி மனிதராகப் போராடியதும்.. அந்தப் போராட்டம் வீணாகப் போனபோது நீங்கள் தலையைக் குணிந்தபடி அமைதியாக பெவிலியன் திரும்பிப் போனதும்.. மனசெல்லாம் வலித்தது டோணி... நிச்சயம் நேற்று தங்களத கடமையைச் செய்யத் தவறிய நமது வீரர்கள் இதைப் பார்த்து வருந்தியிருப்பார்கள்...!

ஆனால் நேற்று கூட நீங்கள் யாரையும் திட்டியிருக்க மாட்டீர்கள்.. ஏன் கேட்டிருக்கக் கூட மாட்டீர்கள், ஏம்ப்பா சரியாக ஆடலை என்று.. அதுதான் டோணி... ஆனால் நிச்சயம் உணர்த்தியிருப்பீர்கள்.. யார் யார் தவறு செய்தார்கள் என்பதை... !

எனக்கு நினைவு தெரிந்தவரை கிரிக்கெட்டுக்காக சொந்த வாழ்க்கையை விட்டுக் கொடுத்த, தள்ளி வைத்த வீரர்கள் குறித்து அதிகம் கேள்விப்பட்டதில்லை. பாதி டூரில் மனைவிக்கு உடம்பு சரியில்லை, குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று கிளம்பிப் போன வீரர்கள் நிறையவே உள்ளனர். அதில் தவறும் இல்லை.. மனைவி குழந்தைகளை விடவா மற்றவை முக்கியம்.. நிச்சயம் அதில் தவறு இல்லை.. ஆனால் நீங்கள் அந்த வகையிலும் கூட எங்களது இதயங்களை தொட்டு விட்டீர்கள்.

அழகான பட்டுக் குட்டி பிறந்திருக்கிறது.. திருமணமாகி நீண்ட மாதங்களுக்குப் பிறகு செல்ல மகள் பிறந்திருக்கிறாள்.. பார்க்கப் போகவில்லை நீங்கள்.. கேட்டதற்கு, முதலில் உலகக் கோப்பை.. பாப்பாவை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அதே நிதானப் புன்னகையோடு சொன்னீர்கள் பாருங்கள்... நீங்கள்தான் "ரியல்" கேப்டன்!

நீங்கள் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள். சொல்லப் போனால் மாணவர்களும், இளைஞர்களும் உங்களைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். தலைமைத்துவப் பண்பு, அமைதி, அடக்கம், நெருக்கடியிலும் புத்தியை செலுத்தி செயல்படுவது, கடைசி வரை போராடுவது, உறுதியாக இருப்பது, செய்யும் செயலில் சுத்தம் என நடமாடும் நாளந்தா பல்கலைக்கழகமாக திகழ்கிறீர்கள் டோணி.

வீரர்களுக்கு சல்யூட் செய்து வணக்கம் சொல்வார்கள்.. உங்களுக்கும் இந்த நாடே சல்யூட் செய்கிறது.. பல நல்ல விஷயங்களை மொத்தமாக குவித்து வைத்துள்ள பிரமிப்பூட்டும் மனிதர் நீங்கள்... உங்களுக்கு தேங்க்யூ என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. இந்த உலகக் கோப்பைத் தொடர் மூலம் ஒட்டுமொத்த எதிர் அணிகளையும் தூங்க விடாமல் செய்து அத்தனை இந்தியர்களையும் குதூகலிக்க வைத்ததற்காக மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டுக்கும் நீங்கள் செய்துள்ள சேவைக்காகவும் நிறைய நிறைய நன்றிகள் சொல்ல வேண்டும்...!

தேங்க்யூ டோணி...!

Story first published: Friday, March 27, 2015, 11:53 [IST]
Other articles published on Mar 27, 2015
English summary
Dhoni, the real captaion in many ways, have made the fans proud and we have to thank him for his committment towards his country and his sport, the Cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X