For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்தை எறி.. பிடிச்சி அடி.. கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக்! ஒரு புது அனுபவம்

By Veera Kumar

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இந்திய அளவில் ஈர்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் - டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டி நேற்று (புதன்கிழமை) தொடங்கி செப்டம்பர் 18ம் தேதி வரை நடக்கிறது.

TNPL cricket gives a feel good experience to the fans

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி (திண்டுக்கல்) நெல்லை ஐ.சி.எல். மைதானம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. 28 லீக் ஆட்டம், இரண்டு அரை இறுதி, இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 31 ஆட்டம் நடைபெறும்.

இந்தப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தென்சென்னை), தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), ரூபி காஞ்சி வாரியர்ஸ் (காஞ்சீபுரம்), வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் (திருவள்ளூர்), மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் (மதுரை), திண்டுக்கல் டிராகன்ஸ் (திண்டுக்கல்), லைகா கோவை கிங்ஸ் (கோவை), காரைக்குடி காளை (காரைக்குடி) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஐ.பி.எல். பாணியிலேயே இந்த தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் குறிப்பிட்ட தொகைக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உள்ளூர் திறமைசாலிகளுடன், ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), பத்ரிநாத் (காரைக்குடி), முரளிவிஜய் (கோவை), தினேஷ் கார்த்திக், எல்.பாலாஜி (தூத்துக்குடி) உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும், ஆர்.சதீஷ், தலைவன் சற்குணம், யோமகேஷ் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) போன்ற ஐ.பி.எல்.லில் ஆடிய அனுபவம் வாய்ந்த வீரர்களும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் அங்கம் வகிக்கிறார்கள்.

நேற்று நடந்த முதல் போட்டியில், சொந்த மண்ணில் சேப்பாக் அணி தோற்றது. தூத்துக்குடி வெற்றி வாகை சூடியது. இந்த போட்டித்தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் நாடு முழுக்க பிற மொழி ரசிகர்களாகும் போட்டியை ரசிக்க முடிந்தது.

இதுவரை சர்வதேச அளவில் புகழ்பெற்ற தமிழகத்து கிரிக்கெட் வீரர்களைத்தான், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் தமிழகத்து உள்ளூர் முகங்களை உலகம் அறியச் செய்துள்ளது இந்த தொடர். உண்மையான, திராவிட களையுடன் கூடிய முகங்களை பார்த்துவிட்டு.. ஓ.. இதுதான் தமிழக களையோ என்று அறிய முடிந்தது பிற மாநில மக்களால்.

கிரிக்கெட் ஆடும்போது வீரர்கள் அனைவருமே தமிழில் பேசிக்கொள்கிறார்கள். டேய்.. பந்த எறி.. பிடிச்சி அடி.. என அவர்கள் சத்தம்போடுவது, ஸ்டெம்புகளில் உள்ள மைக் வழியாக டிவியில் லைவாக கேட்க முடிந்தது. இதுவும் ஒரு புதிய அனுபவம்தான். கிராமப்புற மைதானங்களில் ஆடும் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை போன்ற உணர்வை இந்த சத்தம் ரசிகனுக்கு வழங்குகிறது.

இதுவரை முக்கிய போட்டிகளை ஹிந்தி கமெண்டரியுடன் ஒளிபரப்பி வந்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். அது நம்மவர்களில் பெரும்பாலானோருக்கு புரியாது. வாரே வா.. சக்கா, பவுண்டரி மிலாங்கே.. என்பது போன்ற ஒரு சில வார்த்தைகளை தெரிந்து வைத்துக்கொண்டு நாமும் பல்லை கடித்து அந்த சேனலை கடந்து செல்வோம். ஆனால், தமிழில் வீரர்கள் பேசிக்கொள்வதை கேட்கும்போது நம்மவர்களுக்கு, இன்ப தேன் வந்து பாய்கிறது காதுகளில்.

கர்நாடகாவில் கூட இதுபோன்ற உள் மாநில டி20 கிரிக்கெட் நடைபெறுகிறது. ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற முன்னணி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய வைக்க அவர்களால் முடியவில்லை. ஆனால், அந்த சேனல் புண்ணியத்தால் தமிழகத்து கிராமப்புற வீரர்களின் திறமை இப்போது நாடு முழுக்க ஒளிவீசி தெரிய ஆரம்பித்துள்ளது.

Story first published: Thursday, August 25, 2016, 12:03 [IST]
Other articles published on Aug 25, 2016
English summary
TNPL cricket gives a feel good experience to the cricket fans as it has local flavor.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X