For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல் வானிலிருந்து மறைந்ததே வால் வெள்ளி! இலங்கை வடமாகாண சபையில் ஜெ.வுக்கு இரங்கல்!

இலங்கை வடக்கு மாகாண சபையில் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்; அரசியல் வானில் இருந்து வால் வெள்ளி ஒன்று மறைந்து போனதே என இலங்கை வடக்கு மாகாண சபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை வடக்கு மாகாணசபை கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை:

இன்றைய தினம் எம் எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்தும் ஒரு நிகழ்வு பற்றி சபையில் பேசவேண்டியுள்ளது. தமிழ் நாட்டு அரசியலில் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்கள் நேற்று காலமானது எம் எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Jayalalithaa’s Demise is a great loss, syas Wigneswaran

வால் வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச்சென்று பிரகாசமாகி நின்று பின்னர் திடீரென மறைந்து விட்டது. அண்மையிலே வட இந்திய பெண் ஊடகவியலாளர் சிமி ஃகரைவால் என்பவருக்கு ஜெயலலிதா, ஆங்கிலத்தில் அளித்த ஒரு பேட்டி இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. அதைக் கேட்கும் போதுதான் சூழலானது எவ்வாறு ஒரு மனிதரை முழுமையாக மாற்றக்கூடிய வலு உடையது என்பதை அறியக் கூடியதாக இருந்தது.

மிக மெல்லிய சுபாவங் கொண்ட, கல்வியில் அதிகம் சிரத்தை கொண்ட, செழிப்பான ஒரு மென்மையான சூழலில் வளர்ந்த ஒருவர் எவ்வாறு பலவிதமான முரட்டுச் சூழல்களை எதிர்நோக்க வேண்டி வந்ததால் சாது மிரண்டது போன்று மிகவும் திடமான இரும்புப் பெண்மணியாக அவர் மாற வேண்டி வந்தது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அரசியல் வானில் மின்னிய போது அது அவருக்குப் பெருமை சேர்த்தாலும் அவருக்குப் பாரிய இடர்களையும் இன்னல்களையும் அரசியலில் ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஜெயலலிதா ஒரு பெண்ணாக ஆணாதிக்க சூழலிலே தனித்து நின்று வெற்றி பெற்றார் என்பது அவரின் திடசங்கற்பத்தையும் உழைப்பையும் விடாமுயற்சியையும் கெட்டித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றது. அண்மையில் அவரின் அழைப்பின் பேரில் அவரைச் சென்று சந்திப்பதற்காக நடடிவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விரைவில் குணமடைந்து வருவார் என எதிர்பார்த்திருந்தோம். காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டு போய் விட்டான். 'அம்மா' என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவர் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது பாரதநாட்டு அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஆட்சி காலத்தில் தமிழ் நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேலும் பல துறைகளிலும் மிக உன்னத நிலையை அடைந்தது.

தமிழின் மீதும் தமிழ் மக்கள் வாழ்வின் மீதும் தமிழ் மக்கள் எதிர்காலம் மீதும் அவர் மிக்க பற்றுறுதி கொண்டிருந்தார். கரிசனையுடன் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பெண் குலத்திற்கு எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் வேண்டும் எனக் கருதி அவர் முனைப்புடன் செயற்பட்டார். தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒரு பலம் மிக்க அரசியற் தலைவரை இழந்து விட்டது.

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதை விட எம்மால் அவர் சார்பாக வேறு எதையும் இத்தருணத்தில் செய்ய முடியாதிருக்கின்றது என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. எம் மக்களினது ஒன்று பட்ட சோகத்தினையும் மனச் சுமையினையும் தமிழ் நாட்டு மக்களுடன் இத் தருணத்தில் பகிர்ந்து கொள்கின்றோம்.

இவ்வாறு வடக்கு மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் உரையாற்றினார்.

English summary
Srilanka Northern Province CM Wingeswaran said that Jayalalithaa's Demise is a great loss to the global Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X