For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிக்கிற ரயில் வேணாம்… ஒடுற ரயிலை மறிங்க: எழும்பூர், சென்ட்ரலில் கைதானோர் விடுதலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதூவில் அணைகட்டுவதை எதிர்த்து சென்னை எழும்புரில், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கர்நாடக அரசு காவிரி அணையின் குறுக்கே இரண்டு அணைகளை கட்டும் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் இன்று விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

Rail Roko at Egmore

சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தி.மு.க., காங்கிரஸ், த.மாகா., ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் விவசாய அமைப்பினர் எழும்பூர் ரயில் நிலைய பிரதான வாயில் முன்பு திரண்டனர். போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

9.30 மணியளவில் போராட்டம் தொடங்கியது. அப்போது தி.மு.க. துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு, த.மா.கா. சார்பில் சைதை ரவி முனைவர் பாட்சா, ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, விடுதலை கட்சி சார்பில் உச்சேஸ்வரன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் பேசினார்கள்.

Rail Roko at Egmore

நிற்கும் ரயில் முன்பு

பின்னர் அனைவரும் ரயில் மறியல் செய்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் சென்றனர். 7-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு மறியல் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர்.

Rail Roko at Egmore

மன்னார்குடி ரயில்

ஆனால் அது மாலையில் புறப்படும் ரயில் என்பதை அறிந்ததும் 6-வது பிளாட்பாரத்தில் மன்னார்குடி செல்வதற்கு தயாராக இருந்த ரயிலை நோக்கி ஓடினார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்ததால் போலீசாரால் எதுவும் செய்யமுடியவில்லை.

விலகு விலகு....

ரயில் என்ஜின் மீது ஏறி நின்றும், தண்டவாளத்தில் அமர்ந்தும் மறியலில் ஈடுபட்டனர். கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த ரயில் 10.40 மணிக்கு மன்னார்குடிக்கு புறப்பட வேண்டும். 10.50 மணியில் இருந்து என்ஜின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்தார். ஆனால் மறியல் செய்தவர்கள் யாரும் விலகவில்லை.

Rail Roko at Egmore

குண்டு கட்டாக தூக்கி

போலீசார் ஒரு புறத்தில் வலுக்கட்டாயமாக தொண்டர்களை தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினார்கள். ஆனால் இன்னொரு புறத்தில் ஏறி குதித்து மறியல் செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சுமார் அரைமணிநேரம் நடைபெற்ற போராட்டம் காரணமாக 11.20 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டு சென்றது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்

இதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்

English summary
Members of the Farmers Union supported by members of various political parties have been involved in a rail roko at egmore railway station protesting against Karnataka's efforts to construct a dam at Mekedatu across Cauvery
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X