For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அமைச்சர். டி.என். சுவாமிநாதன் வெளியிட, அ. உமாமகேசுவரன் பெற்றுக் கொண்டார்.

Vipulananda Adigal documentary screened in SL

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின் ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அன்புவேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அங்குத் திரையிட முன்வந்தேன்.

மட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்த நாள் நிகழ்வு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் அடிகளார் தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யாலயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

Vipulananda Adigal documentary screened in SL

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுக விழா குறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம்வேலுப்பிள்ளை, மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூக ஆர்வலர் காசிபதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர், காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்த பட்டறிவுகளை நான் பகிர்ந்துகொண்டேன். ஆவணப்படம் திரையிடப்பட்டதும் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையைப் பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்த மதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் பகிர்ந்துகொண்டமை எனக்கு ஊக்கமாக இருந்தது. விபுலாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள் விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார் வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் ஏற்றுக்கொண்டேன்.

Vipulananda Adigal documentary screened in SL

07.08.2017 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், இந்து சமய கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலாற்று அறிஞருமான முனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.

இலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார். விபுலாநந்தரின் சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச்சாலையில் விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

Vipulananda Adigal documentary screened in SL

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், நாடகவியல் அறிஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின் மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டு பேராசிரியர்களும் எடுத்துரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாகப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர் இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Vipulananda Adigal documentary screened in SL

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்த செயல்மறவருமான திரு. அ. உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்த அறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்து சமய திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கல்விப் பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும், புதுவையிலும் விரைந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கட்டுரை, படங்கள்: முனைவர் மு. இளங்கோவன்

http://muelangovan.blogspot.in/

English summary
Vipulananda Adigal documentary was screened in Colombo, Sri Lanka recently. Puducherry professor Dr Mu Elangovan and others attened the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X