For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணப்பாடு படகு விபத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - 20 பேர் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று மாலை மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடலில் இருந்து அபிநயா என்ற 12 வயது சிறுமியின் உடல் மீட்கப்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கடல் பகுதிக்கு மீனவர்களின் படகில் நேற்று மாலை சுற்றுலா சென்ற போது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து அழகம்மன்புரத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் கடந்த 24ம் தேதி மகாசிவராத்திரி விழா துவங்கி 3 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

10 dead, 20 rescue at boat accident near Manapad shore in Tuticorin

நேற்றுடன் விழா முடிவடைந்ததையடுத்து மதியம் கிடா வெட்டி கறி விருந்து சாப்பிட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பின்னர் சுற்றுலாவாக திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு செல்ல முடிவெடுத்தனர். இதற்காக 4 டிரக்கர் மற்றும் 4 பைக்குகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் உள்பட சுமார் 30 மேற்பட்டோர் மணப்பாடு சென்றனர்.

கடலுக்குள் சுற்றுலா

மணப்பாட்டை சேர்ந்த செல்வம் என்பவரிடம் கடலுக்குள் சுற்றிப்பார்க்க செல்ல வேண்டும் என்று கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். அதிக பணம் தருவதாக கூறி வற்புறுத்தவே வேறு வழியின்றி மாலை 6 மணியளவில் அவர்களை கடலுக்குள் படகில் அழைத்துச் செல்ல சம்மதித்தார். சாத்தூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் தனது மனைவி சுகன்யாவுடன் மணப்பாட்டுக்கு சுற்றுலா வந்திருந்தார் அவரும் அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்களும் செல்வத்தின் பைபர் படகில் கடலுக்குள் சென்றனர்.

அலையில் சிக்கிய படகு

அமாவாசை என்பதால் நேற்று கடலில் அலைகள் பயங்கரமாக இருந்தன. படகு கரையிலிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது ஒரு ராட்சத அலை பயங்கரமாக மோதியது. படகில் அளவுக்கு அதிகமானோர் இருந்ததால் நிலை தடுமாறிய படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் கடலுக்குள் மூழ்கினர். கரையில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் இதைக்கண்டு உடனடியாக தங்களது படகுகளில் விரைந்து சென்று, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

10 பேர் உயிரிழந்த சோகம்

நீரில் தத்தளித்த கார்த்திகேயனும் சிலரை மீட்டார். அழகம்மன்புரத்தை சேர்ந்த ஆறுமுககொடி மனைவி உஷா, சுந்தர்ராஜ் மனைவி முருகேஸ்வரி, அழகேசன் மகள் முத்துச்செல்வி, ஆறுமுக கொடி மகன் சுந்தரேசன், மார்க்கண்டேயன் மகன் ஜெயராமன், ஜெயராமன் மனைவி முத்துலட்சுமி, சுந்தர்ராஜின் 8 வயது மகன், மற்றும் ஒருவர் என 8 பேரும், திருச்சியைச் சேர்ந்த சுகன்யாவும் உயிரிழந்தனர். இன்று காலையில் சிறுமி அபிநயா சடலமாக மீட்கப்பட்டார்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலி

அழகம்மன்புரம் கிராமத்தில் மகா சிவராத்திரி விழாவின் 3 வது நாளன்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இளைஞர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளை ரத்து செய்து விட்டு சுற்றுலா சென்றனர். அங்கு நடந்த விபத்தில்தான் ஒரே கிராமத்தை சேர்ந்த 9பேர் இறந்தனர். அமாவாசை நாளில் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கடலுக்குள் சென்று உயிரை விட்டுள்ளனர்.

20 பேர் உயிருடன் மீட்பு

விபத்தில் சிக்சிய 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்களில் சந்திரசேகர் மகள்கள் சிவகார்த்திகா,16, சிவரஞ்சனி,17, மீனாட்சிசுந்தரி,20, தினேஷ் மனைவி கவிதா,23, வரதன் மகன் திலிப் 9, ஜெயராமன் மகன் சந்தோஷ்,9 ஆகிய 6 பேர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பற்ற பயணம்

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், மணப்பாடு கடலில் மூழ்கிய 9 பேர் மரணமடைந்தனர். அனுமதியின்றியும், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமலும் கடலுக்குள் படகில் சென்றுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆர்டிஒ தியாகராஜன், தாசில்தார் செந்தூர்ராஜன் ஆகியோர் மேற்பார்வையில் கடலுக்குள் யாரும் சிக்கியுள்ளார்களா என தேடும் பணி நடைபெற்றது. இப்பணியில் கடலோர காவல் படையினரும் உள்ளூர் மீனவர்களும் பங்கேற்றனர். இன்று காலையில் சிறுமி ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 10 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக படகின் உரிமையாளர் செல்வத்திடம் விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.

English summary
10 people died after a boat carrying 20 capsized near Manapad shore in Tuticorin district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X