For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமலுக்கு வந்தது 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தான் தேர்தல் சமயத்தில் வாக்களித்தபடி வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் கோப்பில் கையெழுத்திட்டார்.

100 unit free power scheme comes into effect

இந்த இலவச மின்சாரத் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளதாக டான்ஜெட்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகள் 78,55,000 ஆகும். 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை 55,36,000 ஆகும். 201 முதல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை 49,66,000. 500 யூனிட் மின்சாரத்துக்கும் மேல் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை 7,30,000 ஆகும்.

இலவச மின்சார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் (மின் இணைப்பு) எவ்வளவு கட்டண சலுகை கிடைக்கும் என்பது குறித்து டான்ஜெட்கோ விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம்:

200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இதுவரை செலுத்திய கட்டணத்தை விட ரூ.150 குறைவாக செலுத்துவார்கள். 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் ரூ.200 மிச்சப்படுத்தலாம். 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.380 மிச்சம் ஆகும்.

உதாரணமாக 120 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 20 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.1.50 என்ற வீதத்தில் ரூ.30-ம், நிரந்தர கட்டணமாக ரூ.20-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.

160 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 60 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.1.50 என்ற வீதத்தில் ரூ.90-ம், நிரந்தர கட்டணமாக ரூ.20-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும்.

200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.1.50 என்ற வீதத்தில் ரூ.150-ம், நிரந்தர கட்டணமாக ரூ.20-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.170 செலுத்த வேண்டும்.

250 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 150 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த 50 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.150-ம், நிரந்தர கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.380 செலுத்த வேண்டும்.

300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 200 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.300-ம், நிரந்தர கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.530 செலுத்த வேண்டும்.

450 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 350 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த 250 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.750-ம், நிரந்தர கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.980 செலுத்த வேண்டும்.

500 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 400 யூனிட்டுகளில் முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த 300 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.900-ம், நிரந்தர கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.1,130 செலுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

English summary
TN govt's 100 unit free power scheme has comes into effect in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X