கூலிப்படையுடன் கூட்டு... ரூ.4 கோடி வழிப்பறி கொள்ளையில் பதுங்கியிருந்த 2 போலீசாரும் சிக்கினர்!

By:

கோவை: கேரளா கூலிப்படையுடன் கூட்டணி அமைத்து ரூ4 கோடி ஹவாலா பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் தலைமறைவாக பதுங்கியிருந்த கரூர் போலீசார் சரவணன் மற்றும் தர்மேந்திரா இருவரும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்து கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மதுக்கரை அருகே கடந்த மாதம் 25-ந் தேதி சென்னையில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி ஒரு கார் சென்றது. அந்த காரை போலீஸ் உடையில் இருந்த மர்ம நபர்கள் வழிமறித்து காரில் வந்தவர்களை இறக்கிவிட்டு காரை சோதனையிடுவது போல் நடித்து காரை கடத்திச் சென்றனர்.

ரூ4 கோடி பணத்துடன் கார் கடத்தப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் காரின் சொந்தக்காரரான கேரள மாநிலம் மலப்புரம் தங்க நகைக் கடை உரிமையாளர் அன்வர் சதா தம்முடைய கார் மட்டும் கடத்தப்பட்டதாக கோவை மாவட்ட போலீஸாரிடம் புகார் அளித்தார்.

பாலக்காட்டில் கார் மீட்பு

காரில் இருந்தது ஹவாலா பணம் என்பதால் அதை மறைத்தே புகார் தரப்பட்டிருக்கிறது என்ற சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக 4 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி 27-ந் தேதி பாலக்காடு அருகே நின்ற காரை மீட்டனர்.

போலீசுக்கும் தொடர்பு

மேலும் மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் காரையும் அதில் இருந்த ரூ4 கோடியையும் கொள்ளையடித்தில் தமிழக போலீசுக்கும் பங்கிருப்பது தெரியவந்தது.

ஆளுக்கு பாதி...

அதாவது கொள்ளையடித்ததில் ரூ 2 கோடியை தாங்கள் எடுத்துக்கொண்டு, மீதம் ரூ 2 கோடியை உடந்தையாக இருந்த கரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர் சரவணன், ஹெட் கான்ஸ்டபிள் தர்மேந்திரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் கைது

இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக தப்பி ஓடிய போலீசார் சரவணன் மற்றும் தர்மேந்திரன் இன்று கரூரில் சிக்கினர். இருவரிடமும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து கோவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உயர் அதிகாரி

இந்த ரூ4 கோடி ஹவாலா கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது தென்மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி என்பதும் தெரியவந்துள்ளது. அந்த உயர் அதிகாரி குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
In the sensational highway robbery case involving Rs 4 crore of unaccounted money the Coimbatore rural police arrested 2 police from Karur.
Please Wait while comments are loading...

Videos