For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் 2 தீவிரவாதிகள் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வேலூர்: ஆம்பூரில் பதுங்கியிருந்த 2 வட மாநில தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருப்பதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாலை ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால் போலீசார் அவரை ஆம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

2 terrorists nabbed near Ambur

காவல்நிலையத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மாமுன் அலி என்பவரின் மகன் சையது முகமது அலி என்றும் சிகிச்சை பெறுவதற்கு வேலூரில் தங்கியிருந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எவ்வித ஆவணங்களும் அவனிடம் இல்லை. மேலும் அவனிடம் 5 சிம்கார்டுகள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஒரு சிம்கார்டு மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர்.

எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சையது முகமது அலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினான். இதனையடுத்து இந்தி தெரிந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வேலூர் சிஎம்சி அருகே உள்ள லாட்ஜில் தனது நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்றிரவு வேலூரில் உள்ள ஒரு சில லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை தீவிரமாக சேகரித்தனர். இதில் வட இந்திய நபருடன் தங்கியிருந்தவனை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ராஜஸ்தான், ஆக்ரா உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், வேலூரில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வேலூரில் யார் அவர்களுக்கு உதவி செய்தது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்களுக்கு வேறு எந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது? மேலும் இவர்களின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள செல்போன் எண்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் வேலூரில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த பலர் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகள் போர்வையில் தங்கியிருந்து வேலூரில் குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
2 terrorists have been arrested near Ambur in Vellore district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X