For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"இளசு முதல் பெருசு" வரை... அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவது 26,000 பேர்: அதிர்ஷ்டம் யாருக்கோ?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் எம்.எல்.ஏ சீட் கேட்டு இளைய தலைமுறையைச் சேர்ந்த டாக்டர்கள், பொறியியல் பட்டதாரிகள் முதல், ரிட்டையர்ட் ஆன அதிகாரிகள் வரை 26ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 234 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வலியுறுத்தி 7936 பேர் விண்ணப்பம் செய்துள்ளனராம். இதன்மூலம் மொத்தம் ரூ.28.40 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 நாட்களாக ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் உள்ள பகுதி வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த அரசியல்வாதிகளால் களை கட்டியது. அவர்களுக்கு மத்தியில் ஜீன்ஸ், டிசர்ட் அணிந்த இளைஞர் பட்டாளங்களும், சுடிதார், குர்தா அணிந்த நவநாகரீக மங்கைகளும் வலம் வந்ததைப் பார்த்த போது கார்ப்பரேட் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இடம் மாறி இங்கு வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றியது.

தமிழக சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக தனது பணியை செய்யத் தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சியினரும் படு பரபரப்பாக தங்களின் தொண்டர்களை முடுக்கிவிடத் தொடங்கியுள்ளனர்.

ஒருபக்கம் விருப்பமனுக்கள் தாக்கல், மறுபக்கம் நேர்காணல், இன்னொரு பக்கம் பிரச்சாரம் என சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தமிழக அரசியல் களம்,
யாருடன் யார் கூட்டணி என்பது இன்னமும் உறுதியாகாத நிலையில் எந்த கட்சி எந்தப் பக்கம் போகும்? யார் - யாரெல்லாம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் வாக்காளர்கள் மத்தியில் பலமாகவே உள்ளது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. எப்போதுமே முன்னிலையிலேயே இருக்கும். கூட்டணி பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேர்தல் பணிகளை முன்கூட்டியே முடுக்கிவிட்டதோடு, அதேபோல விருப்பமனு அறிவிப்பிலும் முந்திக்கொண்டார்.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 20ம் தேதிமுதல் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 3ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொண்டர்களின் ஆர்வத்தையும் கூட்டத்தையும் பார்த்து 6ம் தேதிவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பக்கா அரசியல்வாதிகள்

பக்கா அரசியல்வாதிகள்

அரசியலில் நீண்ட நாட்களாக பதவியை அனுபவித்த முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது சாதாரண தொண்டர்கள் வரை விருப்ப மனு அளித்துள்ளனர். முதன் முதலாக சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் ப்ளஸ் கனவுடனும் இளசுகள் பட்டாளமும் அதிமுகவில் சீட் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலர்ஃபுல் கட்சிக்காரர்கள்

கலர்ஃபுல் கட்சிக்காரர்கள்

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் வாங்கும் போது, வெள்ளை வேட்டி - சட்டை அணிந்தவர்களையே கட்சி அலுவலகங்களில் அதிகம் பார்க்க முடியும். பெண்கள் என்றால் பெரும்பாலும் நடுத்தர வயதை எட்டிய திருமணமானவர்களாகவே இருப்பார்கள். இம்முறை அந்த நிலை மாறி, அரசியல் களத்தின் கலரே மாறுகிறதோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இளம் பெண்களும், இளைஞர்களும் படையெடுத்து வந்தனர்.

கார்ப்பரேட் அலுவலகம்

கார்ப்பரேட் அலுவலகம்

சுடிதார் அணிந்த இளம் பெண்களும், ஜீன்ஸ், டி.சர்ட் அணிந்த இளைஞர்களும் இம்முறை அதிகமாகவே விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பலர்
இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையிலும், தகவல் தொழில் நுட்பப்பிரிவிலும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கடந்த சில வாரங்களில் அதிமுக கட்சி அலுவலகமே கார்ப்பரேட் அலுவலகம் போல காணப்பட்டது.

கட்சிக் கொள்கைள்

கட்சிக் கொள்கைள்

சேலத்தை சேர்ந்த நந்தினி பி.டெக் முடித்துள்ளார். இவர் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்ப மனு அளித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. அதன் காரணமாகவே அ.தி.மு.க.வில் தன்னை இணைத்தும் கொண்டேன் என்று கூறும் நந்தினி, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதிமுகதான் சிறந்த களம் என்கிறார்.

அரசியல் ஆர்வம்

அரசியல் ஆர்வம்

பொறியியல் பட்டதாரியான தினேஷ் என்ற வாலிபர், மதுரவாயல் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார். அ.தி.மு.க.வின் கொள்கைகள் பிடித்துள்ளதால் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளேன் என்று அவர் கூறினார். தினேசின் பெற்றோர் அரசு ஊழியர்களாக உள்ளனர். சிறுவயதில் இருந்தே அரசியலுக்கு வரவேண்டும் என்பதை தினேஷ் லட்சியமாகவே கொண்டிருந்தான் என்கின்றனர் அவர்கள்.

70வது வயது பாட்டி

70வது வயது பாட்டி

விருப்ப மனு அளிப்பதற்கு அதிமுக தலைமை அலுவலகத் துக்கு தனது பேரனுடன் வந்த 70 வயது மூதாட்டி ஏ.கமலா ஆறு முகம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அதிமுக தொடங்கியது முதல் கட்சி உறுப்பினராக இருக்கும் இவர், சிதம்பரம் மேலாறு தெருவில் வசித்து வருகிறார். உடல் நலமில்லா விட்டாலும் அதிமுகவில் சீட் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு 7936 பேர் மனு

ஜெயலலிதாவிற்கு 7936 பேர் மனு

234 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வலியுறுத்தி 7936 பேர் விண்ணப்பம் செய்துள்ளனராம். ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இங்கு ஜெயலலிதாவுக்காக மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

26174 பேர் மனுக்கள் 28.40 கோடி வசூல்

தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு 26, 174 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். கட்சியினர் தாங்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரி, தமிழகத்தில் 17,698 பேரும், புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிடுவதற்காக 332 பேரும், கேரளத்தில் போட்டியிடுவதற்காக 208 பேரும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு ரூ. 11 ஆயிரம், புதுச்சேரிக்கு ரூ. 5 ஆயிரம், கேரளத்துக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் கட்டணமாக ரூ.28.40 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டம் யாருக்கு?

அதிர்ஷ்டம் யாருக்கு?

அ.தி.மு.க.வில் தான் கட்சி உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பது இளைஞர்களின் நம்பிக்கையாகும்.
இதன் மூலம் சட்டசபை தேர்தலில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்குமோ?

English summary
On behalf of AIADMK general secretary and Chief Minister Jayalalithaa, 7,936 applications had been filed. A total of 26,174 applications were received till 5 p.m. on Saturday from AIADMK cadres interested in contesting the Assembly elections in Tamil Nadu, Puducherry and Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X