For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 மீனவர்களின் விடுதலையை சிலர் அரசியலாக்குகிறார்களே: முதல்வர் ஓ.பி.எஸ். வேதனை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதை ஒரு சில அரசியல்வாதிகள் அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனை அளிக்கக் கூடியது என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம் அவர்களை மீட்க இடைவிடாத நடவடிக்கைகளை முன்னாள் முதல்வர் மேற்கொண்டுள்ளார். 2011-ஆம் ஆண்டு அஇஅதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் பிரதமர் அவர்களுக்கு 56 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

5 fishermen release issue: TN CM saddened by some politicians' actions

ஈரான் நாட்டுச் சிறையில் வாடிக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து தமிழகம் திரும்பிய அவர்களுக்கு புது வாழ்வு ஏற்படுத்த 2 லட்சம் ரூபாயை ஜெயலலிதா வழங்கினார். ஒடிசா மாநிலத்தில் புயலில் சிக்கித் தவித்த 18 தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டு அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 மீனவர்களை மீட்டெடுக்க மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தான். எனவே, கச்சத் தீவை தாரை வார்த்த ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய்த் துறையும் இவ்வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க இயலாமல் போனது கச்சத் தீவு ஒப்பந்தத்தினால் தான்.

தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டி விட்டார்கள் என சிறை பிடிக்கப்படுவதும், மீனவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதும், பாரம்பரிய மீன்பிடி உரிமையை இழந்த காரணத்தால் தான். எனவே தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசும், கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும், பராம்பரிய மீன்பிடி இடங்களில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டுத் தர வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த திருவாளர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லேங்க்லெட் ஆகிய ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று மீன்பிடி விசைப்படகில் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து புறப்பட்டு தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் மீது யாழ்ப்பாணம் மாகாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்துதல் குற்றத்திற்கான பிரிவின்கீழ் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு ஒன்றை இலங்கை அரசு தொடர்ந்தது. இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதால், கைது செய்யப்பட்ட ஐந்து அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று ஜெயலலிதா அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு, இந்த ஐந்து மீனவர்களையும் விடுவிக்க மீனவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு இலங்கையைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்திடவும், அவர்களை விடுவிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் ராமேசுவரத்திலுள்ள நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு (Alliance for Release of Innocent Fishermen Trust) மூலம் நடவடிக்கை எடுத்திட 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி 14.12.2011 அன்று ஆணையிட்டார்.

தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐந்து மீனவர்களை ஜாமீனில் விடுவிக்க 21.3.2012 அன்று யாழ்ப்பாணம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது 11.6.2012 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் இம்மீனவர்களின் குடும்பங்கள், வருமானம் ஈட்டித் தரும் தங்கள் குடும்பத் தலைவர்கள் சிறையில் உள்ள நிலையில், அன்றாட குடும்பச் செலவிற்கு வருமானமின்றி துன்பப்படுவதால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, குடும்பம் ஒன்றிற்கு அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து முன்தேதியிட்டு மாதந்தோறும் 7,500/- ரூபாய் வழங்கிட 6.8.2012 அன்று ஆணையிட்டார்.

அவரது ஆணையின் அடிப்படையில் மேற்படி ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 2,44,000/- ரூபாய் வீதம் மொத்தம் 12,20,000/- ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட இடைவிடா தொடர் முயற்சிகளின் காரணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின்படி 5 மீனவர்களும் இலங்கை அரசால் 19.11.2014 அன்று விடுவிக்கப்பட்டு 20.11.2014 அன்று தாயகம் திரும்பியுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் நேற்று நள்ளிரவில் சென்னை விமான நிலையம் வந்தந்தடைந்த போது, சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி, மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர். எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

மேலும் அப்போது இந்த 5 மீனவர்கள் தங்கள் வாழ்க்கையை புதிதாக தொடங்குவதற்கு ஏதுவாக, ஒவ்வொருவருக்கும் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக அரசின் சார்பில் வழங்கினர். விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் அவர்களது சொந்த ஊருக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்களின் நலன் காப்பதில் எப்போதும் முன் நிற்பவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். மீனவர்கள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது அஇஅதிமுக அரசு தான். இலங்கை அரசால் பொய் வழக்கு போடப்பட்ட உடனேயே, அந்தப் பொய் வழக்கினை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது ஜெயலலிதா தான்.

இது பன்னாட்டுப் பிரச்சனை என்ற காரணத்தால், இலங்கை அரசுடன் தமிழ்நாடு அரசு நேரடியாக எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள இயலாது. இலங்கை அரசுடன் மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் மட்டுமே தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும். தனது இந்தத் தார்மீகக் கடமையை மத்திய அரசு செயல்படுத்திட தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் ஜெயலலிதாவும், தமிழ்நாடு அரசும் ஆகும். அதற்கேற்ப, மத்திய அரசு செயல்பட்டு, 5 தமிழ்நாடு மீனவர்களும் விடுதலை பெற்றது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

இந்த வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. 5 மீனவர்களின் விடுதலைக்குத் தாங்கள் தான் காரணமென இங்கே உள்ள ஒரு சிலர் மார்தட்டிக் கொள்வது, தமிழ்நாட்டு மீனவர்களை கொச்சைப்படுத்துவது ஆகும். தங்களால் தான் இது நடைபெற்றது என்று இங்கே தமிழ்நாட்டில் கூறிக்கொள்ளும் ஒரு சிலர், கடந்த மூன்றாண்டுகளாக இது பற்றி என்ன நடவடிக்கை எடுத்தனர்? இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு உடனடியாக தாக்கல் செய்யப்பட 20 லட்சம் ரூபாய் அனுப்பும்படி இந்திய தூதரகம் கேட்ட போது, அந்தப் பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தது, மீனவர் நலனில் என்றும் அக்கறை செலுத்தும் அஇஅதிமுக அரசு தான்.

மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பினை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தும் ஒரே இயக்கம் அஇஅதிமுக தான்; ஒரே அரசு அஇஅதிமுக அரசு தான். மீனவர்களின் நலனுக்காக எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அரசு அஇஅதிமுக அரசு தான். மீனவர்கள் எந்தவித இன்னலுக்கு ஆட்பட்டாலும், ஓடோடிச் சென்று, அவர்கள் துயர்துடைப்பதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பேணிப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அஇஅதிமுக அரசுதான்.

உண்மையான மீனவ நண்பன் யார் என்பதும் தமிழ்நாடு மீனவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாடு மீனவர்கள் நலன் காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CM O. Panneerselvam slams some political leaders for taking advantage of the 5 fishermen release issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X