For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? வாட்ஸ் அப்பில் கலக்கும் செய்தி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: டேபிள் மேட் தொடங்கி அர்விந்த் கெஜ்ரிவாலை காஜல் அகர்வால் என்று சொன்னதாக கூறி கலாய்த்தது வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்துள்ளனர்.

இதுவரை இதற்கு எதிராக பொங்கி எழாத விஜயகாந்த் சமீபத்தில் தனது கட்சியினர் மூலம் கமிஷனர் ஆபிஸில் புகார் கொடுக்கப் போக தற்போது கலாய்ப்புகள், கேலி கிண்டல்கள் சற்று குறைந்துள்ளன..

A positive article post on Vijayakanth on rounds in wattsapp

இருந்தாலும் விஜயகாந்த்தை விட மனம் இல்லாதவர்கள், தற்போது விஜயகாந்தைப் பற்றி நல்லவிதமாகவும் பாஸிட்டிவாகவும் வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து செய்தி பரப்பி வருகின்றனர்.

அப்படி ஒரு செய்தி இது.

அந்த செய்தியைப் படியுங்களேன்:

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தை கோபக்காரர், அரசியல் நகரிகமில்லாதவர், குடிப்பவர் என்றும் பொதுவாக விமர்சிக்கின்றனர். ஆனால் விஜயகாந்த், நிஜத்தில் அடுத்தவருக்கு உதவி செய்பவர், மனிதநேயமிக்க மனிதர், நல்ல நிர்வாகி.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளில் வெற்றிகரமான நடிகர் விஜயகாந்த் ஆனார்.

மதுரைக்கார விஜய்

சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. ரஜினியும், கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலத்தில் நெடிய போராட்டத்திற்கு பின்பு "இனிக்கும் இளமை" என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

தூரத்து இடிமுழக்கம்

இவரின் அடுத்த படமான "தூரத்து இடி முழக்கம்" மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பம் ஆனது.

புதியவர்களுக்கு வாய்ப்பு

அந்த காலகட்டத்தில் வெற்றிகரமான இயக்குநர்களின் இயக்கத்தில் ரஜினியும், கமலும் நடித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். திறமையான புதிய இயக்குனர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளி வந்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன.

வசூல் சக்கரவர்த்தி

திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்.

நடிகர்களுக்கு ஒத்துழைப்பு

இயக்குநர்கள் மட்டுமல்ல பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், நடிகர் சரத்குமார், கசான்கான், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே.

அடித்துத் துவைத்த வடிவேலு

இவ்வளவு ஏன்? கடந்த தேர்தலில் இவரை அடித்து துவைத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அறிமுகம் வேண்டுமானால் ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்தான். சின்ன கவுண்டர் படத்தில், கவுண்டமணியால் ரிஜெக்ட் செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார்.

பேசி நடிக்க வைத்தார்

மீண்டும், கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப்படத்தில் கவுண்டமணி முட்ட, அமரனிடமும், கவுண்டமணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார். இப்படி, இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் விஜயகாந்தை இன்றைக்கும் உச்சத்தில் வைத்துள்ளனர்.

பாக்யராஜின் முதல் தேர்வு

இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கியபோது, அவரின் முதல் தேர்வாக அமைந்தவர் விஜயகாந்த்தான்.

நடிகர் சங்க கடன்

இவரின் நிர்வாகத் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாக கடனில் தவித்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட, திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார்.

நிர்வாக திறமை

அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில், இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தொலைக்காட்சி நிர்வாகமும் சிறப்பாக இருந்து வருகிறது.

அரசியலில் வெற்றி

அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்காமல் அதிலும் காலூன்றி சாதித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பழம் தின்று கொட்ட போட்டவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எந்த ஒரு நடிகையையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதில்லை. இவரின் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவர்ச்சி நடிகையும் கிடையாது.

வெளிப்படையான பேச்சு

கருணாநிதிக்கு ஒரு எம்.ஜி.ஆர். போல, எம்.ஜி.ஆருக்கு ஒரு ஜெயலலிதா, நிர்மலா போல நடிகர் பட்டாளம் எதுவும் கிடையாது. எவருடனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது. மற்ற அரசியல் தலைவர்கள் போலல்லாமல் இவரின் வெளிப்படையான, களங்கமில்லாத பேச்சு ஒரு சிலருக்கு கசப்பாக இருக்கும்.

சூழ்ச்சியும் வஞ்சகமும்

இவரின் தேர்தல் வாக்குறுதியான, கறவை மாடுகள் வழங்கப்படும் என்கிற திட்டம் அ.தி.மு.க.வால் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை, கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24,000 ஓட்டுக்களை பிரித்ததால் அங்கு 3,000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தே.மு.தி.க. தோற்றது. இது போல, வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10,000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

கோபக்கார விஜயகாந்த்

இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோபமும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச்சித்திரமானார். இவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பயனடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம். இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாடமாட்டேன் எனவும், மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளித்தவர் இவர்.

மக்கள் நலத்திட்டங்கள்

இவருக்கு அரசியலுக்கு வரவேண்டுமென்று எண்ணம் இல்லாதபோதே மக்களுக்கு பல உதவிகளை செய்து பழக்கப்பட்டவர். தினமும் அன்னதானம், தையல் மிஷின் என்று இவரை பார்த்து மற்ற நடிகர்களும் செய்கிறார்கள். எங்கு துயர சம்பவங்கள் நடந்தாலும் முதலில் நிவாரண நிதி அறிவிப்பதும், அளிப்பதும் விஜயகாந்த் மட்டுமே.

நிவாரண நிதிகள்

கார்கில் நிவாரண நிதி, குஜராத் நிவாரண நிதி, சுனாமி நிவாரண நிதி, கும்பகோணம் தீ விபத்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது (10-09-2014) கூட காஷ்மீர் நிவாரண நிதி அறிவித்து இருக்கிறார். என்ன துயரமான சம்பவம் நடந்தாலும் உடனே உதவித்தொகை அறிவிக்கும் மற்ற நடிகர்கள் அதை ஒழுங்காக கொடுக்கின்றார்களா என்றால் அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

கும்பகோணம் தீ விபத்து நிதி

பத்து வருடங்களுக்கு முன் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் ரஜினி மட்டும் அல்ல, கமல் 12 லட்சம், விஜயகாந்த 10 லட்சம், சூர்யா, விஜய், சரத் இப்படி அனைவருமே உதவித் தொகை அறிவித்தனர், ஆனால், இதுவரை உள்ள விவரங்கள்படி விஜயகாந்த், சூர்யா தவிர யாருடைய உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. இல்லை கொடுத்துவிட்டார்கள் என்றால், தெரிந்தவர்கள் சொல்லவும்.

இருட்டடிப்பு செய்ய முயற்சி

விஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் அவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை. விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை சிலர் காமெடியாக சித்தரித்து ஊடகங்களில் பரப்புகின்றனர். அவர்களை நாம் ஊக்குவிக்காமல் இருப்போம் என்று இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இது தற்போது வாட்ஸ் அப்பில் தீயாக பரவி வருகிறது.

English summary
Another set of positive article posts on DMDK leader Vijayakanath is on rounds in FB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X