For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிக் கிருத்திகை: வடபழனி, திருத்தணி முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஆடி கிருத்திகை விழா, தமிழகம் முழுவதும் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களான வடபழனி, கந்தக்கோட்டம், திருப்போரூர், குமரக்கோட்டம், குன்றத்துார் ஆகிய ஆலயங்களில் அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம் ஆகும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடிக் கிருத்திகை தினம் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. அறுபடை வீடு தலங்களிலும், சென்னையில் உள்ள முருகன் கோவில்களிலும், ஆடி கிருத்திகை விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முருகனுக்கு உகந்த கிருத்திகை

முருகனுக்கு உகந்த கிருத்திகை

முருகப் பெருமானுக்கு, ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில், தை கிருத்திகை, தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விழாக்கள் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. அந்த வகையில், ஆடி கிருத்திகை தினம் மிகவும் விசேஷமாக, இன்று தமிழகம் முழுவதும் உள்ள, முருகன் கோவில்களில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடி கிருத்திகை விரதம்

ஆடி கிருத்திகை விரதம்

தை மாதக் கார்த்திகையை விட ஆடி மாதக் கார்த்திகை சிறப்பானதாக உள்ளது. இது தேவர்களின் மாலைக் காலம் ஆகும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

அறுபடை வீடுகள்

அறுபடை வீடுகள்

அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகையும் விழாவும் ஒன்று. முக்கியமாக திருத்தணியில் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருத்தணியில் தரிசனம்

திருத்தணியில் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி ரயில், பஸ் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி நகரில் குவிந்தனர். ஆடி பரணி நட்சத்திரதினமான நேற்று அதிகாலை திருத்தணி தணிகை முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அலங்காரத்தில் முருகன்

அலங்காரத்தில் முருகன்

முருகனுக்கு தங்க கவசமும் வைர கிரீடமும் பச்சை மரகத கல்லும் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மலைக்கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும் பலவகை மலர்களாலும் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

காவடி நேர்த்திக்கடன்

காவடி நேர்த்திக்கடன்

மஞ்சள் ஆடை அணிந்து பால் காவடி எடுத்து வந்த பக்தர்கள் வரிசையில் நின்று முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயில் மற்றும் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

குவிந்த பக்தர்கள்

குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் ஆலயத்தில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நேற்று முதலே முருகப் பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

கந்தக்கோட்டம்

கந்தக்கோட்டம்

சென்னையில் பாரிமுனை ராசப்பசெட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலில், இன்று அதிகாலையில் ஆடி கிருத்திகை வெகு சிறப்பாக தொடங்கியது. காலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வெள்ளி தேரில் முத்துக்குமார சுவாமி வீதி உலா வருவது வருடத்திற்கு ஒரு முறை ஆடிகிருத்திகை அன்று மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வடபழனி முருகன்

வடபழனி முருகன்

வடபழனியில் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இன்று காலை 3.30 மணியளவில் நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் காலையில் இருந்தே குவியத் தொடங்கினர். ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா‘ என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

English summary
Devotees from different parts of Vellore, and Chittoor district in Andhra Pradesh, going to the Sri Subramaniaswamy Temple at Tiruttani to participate in the Adi Krithigai festival. Aadi Krithigai is a day auspicious for Lord Muruga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X