For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடனடியாக மரண தண்டனைக்கு முடிவு கட்டுங்கள்... கருணாநிதி கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சட்ட ஆணையம் தற்போது செய்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு, இந்தியாவில் அனைத்துக் குற்றங்களுக்குமே மரண தண்டனை கிடையாது என்ற முடிவினை எடுத்து, அதற்கான அறிவிப்பினை உடனடியாக செய்திட முன் வர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண தண்டனையை ஒழிக்க இதுவே சரியான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நீண்டதொரு அறிக்கையையும் கருணாநிதி வெளியிட்டு அதில் பல விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:

பல காலமாக வலியுறுத்துகிறேன்

பல காலமாக வலியுறுத்துகிறேன்

"A large section of India's voters - constituting the dominant view - is in favour of abolishing the death penalty, as per the CSDS survey" என்று 25-7-2013 தேசிய நாளிதழில் செய்தி ஒன்று வந்தது. அதாவது இந்திய வாக்காளர்களில் பெரும்பாலோரின் கருத்து மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதாகும் என்று ஒரு ஆய்விலே கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கருத்தினைத் தான் திமுகவும் கொண்டுள்ளது. அதைப் பற்றி நானும் பல ஆண்டுக் காலமாக வலியுறுத்தி வருகிறேன்.

ரத்து செய்து விடலாம்

ரத்து செய்து விடலாம்

29-8-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், மனித உரிமைக்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான தூக்குத் தண்டனை தேவையில்லை என்றும், அதனை எல்லா நாடுகளும் ரத்து செய்து விடலாமென்றும் கருத்து தெரிவிக்காதோர் யாரும் இல்லை. உயர்ந்தபட்சத் தண்டனையான தூக்கு தண்டனைக்குப் பதிலாக - கொலைக் குற்றம் சாற்றப்பட்ட ஒரு கைதி - எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அந்தக் குற்றத்தை எண்ணியெண்ணி தனக்குத் தானே வருந்துவதை விட தூக்குத் தண்டனையால் பெரிய பயன் ஒன்றும் விளைந்து விடப் போவதில்லை என்பதால்; ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்திட வேண்டும்.

ஆயுள் முழுவதும் வருந்த வேண்டும்

ஆயுள் முழுவதும் வருந்த வேண்டும்

கொலைக் குற்றத்தில் ஒரு மனிதன் ஈடுபட்டிருப்பானேயானால், அவன் அதற்காக ஆயுள் முழுவதும் வருந்தி வாடுவது தான்; தூக்குத் தண்டனையை விடக் கடுமையானது என்பது மட்டுமல்ல - அந்த மனிதன் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினை வழங்கி, வழி வகுத்திடக் கூடியதுமாகும். மத்தியப் பேரரசுக்கு நாம் எழுதிய மனமுருக்கும் கடிதங்களும் - பிரதமர் மற்றும் இந்தியத் தலைவர்கள் அனைவரிடமும் நேரில் எடுத்து வைத்த கோரிக்கைகளும் யாரும் அறியாதது அல்ல என்று குறிப்பிட்டிருந்தேன்.

104 நாடுகள் ஆதரவு

104 நாடுகள் ஆதரவு

2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மன்றம் தூக்குத்தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன் வைத்த போது, அதை 104 நாடுகள் ஆதரித்துக் கையெழுத்திட்டன; இந்தியா உட்பட 39 நாடுகள் தான் அதை எதிர்த்து வாக்களித்தன; ஐ.நா. தீர்மானத்தையொட்டி உலகின் 90 சதவிகித நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. அந்தப் பெரும்பான்மையுடன் இந்தியாவும் இணைய வேண்டாமா என்றும் நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் கேட்டிருந்தேன்.

தீவிரவாதத்தைக் காரணம் காட்டி

தீவிரவாதத்தைக் காரணம் காட்டி

ஆனால் ஒருசிலர், தீவிரவாதம் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் மரண தண்டனையை நீக்கி விட்டால் குற்றச் செயல்கள் இன்னும் பெருகி விடும் என்பது, அந்தத் தண்டனையை ஆதரிப்பவர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் தான் மரண தண்டனை இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற பொருள் பற்றி ஆராய்ந்திட, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஷா அவர்கள் தலைமையில், ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட "சட்ட ஆணையம்" ஒன்றினை 2014ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் பணித்தது.

திமுகவின் கருத்தை முன்வைத்த கனிமொழி

திமுகவின் கருத்தை முன்வைத்த கனிமொழி

மரண தண்டனை முற்றிலுமாக சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்ற என்னுடைய வலியுறுத்தலை அடிப்படையாக வைத்து மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர், கவிஞர் கனிமொழி அந்தக் கருத்தை இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் மூலமாகத் தெரிவித்ததோடு, அந்த ஆணையம் நடத்திய ஆலோசனையிலும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தார்.

அப்துல் கலாம் கருத்தும் அதுவே

அப்துல் கலாம் கருத்தும் அதுவே

அண்மையில் மறைந்த இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர், மேதகு அப்துல் கலாம் அவர்கள் கூட மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமென்ற இந்தச் சட்ட ஆணையத்திடம் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையதினம் இந்தச் சட்ட ஆணையம் அளித்த இறுதி அறிக்கையில், தீவிரவாதம், தேச விரோதச் செயல்கள் தொடர்பான குற்றங்களைத் தவிர்த்து பிற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை ரத்து செய்து விடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

குற்றம் குறையாது

குற்றம் குறையாது

மரண தண்டனை விதிப்பதால், குற்றங்கள் தடுக்கப்படும் என்பது ஒரு கற்பனையான கருத்து என்றும் அதன் பரிந்துரையில் தெரிவித்திருக்கிறது. நீதிபதி ஷா அவர்கள் அளித்த பேட்டியிலே கூட, கடந்த 11 ஆண்டுகளில் 3 பேருக்குத் தான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் கூட மரண தண்டனை விதிக்கும் முறை இல்லை என்றெல்லாம் கருத்து தெரிவித்ததாக ஒரு செய்தி வந்துள்ளது.

3 பேர் மட்டும் எதிர்ப்பு

3 பேர் மட்டும் எதிர்ப்பு

இந்த சட்ட ஆணையத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அரசுப் பிரதிநிதிகளான மூன்று உறுப்பினர்கள் மட்டும் மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக அதிலே ஒரு உறுப்பினரான பி.கே. மல்கோத்ரா கூறும்போது, ஐ.நா. பொதுச் சபையில் மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது, அந்தத் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்த நிலையில், மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென்பது அந்த முடிவுக்கு எதிராக அமைந்து விடும் என்று தான் கூறி யிருக்கிறார். இதே பிரச்சினைக்காக 1962ஆம் ஆண்டு சட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் மரண தண்டனை நடைமுறையில் இருக்க வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்த போதிலும், தற்போது சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரை வரவேற்கத் தக்க நிலையிலே உள்ளது.

உடனே முடிவெடுங்கள்

உடனே முடிவெடுங்கள்

எனவே சட்ட ஆணையம் தற்போது செய்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு, இந்தியாவில் அனைத்துக் குற்றங்களுக்குமே மரண தண்டனை கிடையாது என்ற முடிவினை எடுத்து, அதற்கான அறிவிப்பினை உடனடியாக செய்திட முன் வர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DMK president Karunanidhi has urged the centre to abolish the death sentence immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X