ராம்குமார் மரணம்: புழல்சிறை மின்சார சுவிட்ச் பாக்ஸ் படம் வெளியானது எப்படி? - ஏடிஜிபி உத்தரவு

சென்னை: புழல்சிறையில் ராம்குமார் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மின்சார வயர் படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு சிறைத்துறை ஏடிஜிபி விஜயகுமார் இன்று உத்தரவிட்டுள்ளார். புகைப்படம் வெளியானது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரை விசாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இளம் பெண் சுவாதி, 24 கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த 18ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்தது.

ADGP orders for probe into the leak of Ramkumar prison cell image

ராம்குமார் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ராம்குமாரின் பெற்றோர்களும், வழக்கறிஞரும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் பிரேதப் பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்று தினங்களாக நீதிபதி தமிழ்செல்வி புழல் சிறையில் விசாரணை நடத்தி வருகிறது.

மின்சார வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். சிலரை காப்பாற்றிவிடுகிறோம். பலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர் என்று மருத்தவர்கள் கூறியுள்ளனர்.

அதிக திறன் கொண்ட மின்சாரம் பாயும்போது உடல் உடனடியாக எரிந்து உயிரிழப்பு ஏற்படும். மின்சார விபத்துகள் தவறுதலாக நடைபெறும் நிகழ்வாகும். மின்சார வயரை பிடித்து தற்கொலைக்கு முயற்சி செய்வது என்பது மிகவும் அரிதானது என்று தீக்காய சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலுக்குள் மின்சாரம் பாயும்போது உடலை மின் கடத்தியாகவே பயன்படுத்தி பூமிக்குள் சென்றுவிடும். எனவே மின்சாரம் உடலுக்குள் பாயும் இடத்திலும் வெளியேறும் இடத்திலும் தீக்காயங்கள் இருக்கும். ஒருவர் மின் வயரை வாயால் கடித்திருந்தால் வாய் மற்றும் மின்சாரம் வெளியேறிய கால் பாதங்களில் காயம் ஏற்பட்டிருக்கும். மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டிருந்தால், உடலின் மற்ற இடங்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.

மின்சாரம் உடலில் பாயும்போது உறுப்புகளை செயலிழக்கச் செய்யும். முக்கியமாக இதயத்தின் செயல்பாட்டை நிறுத்திவிடும். மின்சாரத்தின் திறனைப் பொருத்து உடலும் கருப்பாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ராம்குமார் விஷயத்தில் உண்மை என்னவென்பது பிரேதப் பரிசோதனை நடந்த பிறகுதான் தெரியவரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், ராம்குமார் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மின்சார வயர் படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு சிறைத்துறை ஏடிஜிபி விஜயகுமார் இன்று உத்தரவிட்டுள்ளார். புகைப்படம் வெளியானது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரை விசாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Tamil Nadu ADGP, prisons has orders for a probe into the leak of Ramkumar prison cell image.
Please Wait while comments are loading...

Videos