For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா நலம் பெற மண் சோறு சாப்பிடும் அதிமுக மகளிர் அணி: ஜெ., படத்துடன் கோவில் கோவிலாக பூஜை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உடலநலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மனம் உருக சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும் செய்து வருகின்றனர்.

மண் சோறு சாப்பிட்டும், பால்குடம் எடுத்தும் ஜெயலலிதாவிற்காக சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். கோ பூஜை, படிபூஜை, காவடி என தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணியர் கோயிலில் வெள்ளித் தேர் இழுத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

வல்லக்கோட்டை அருள்மிகு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மயிலாப்பூரில் மண் சோறு

மயிலாப்பூரில் மண் சோறு

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் ஜெயலலிதாவின் படத்தை மடியில் வைத்துக்கொண்டு மண் சோறு சாப்பிட்டு கபாலீஸ்வரரை வேண்டிக்கொண்டனர்.

பால்குட வழிபாடு

பால்குட வழிபாடு

மகளிர் அணியினர் சார்பில் கபாலீஸ்வரர் கோவிலில் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். ஜெயலலிதா விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அப்போது அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

பசுவிற்கு அகத்திக்கீரை

பசுவிற்கு அகத்திக்கீரை

தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் பசுவிற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி அகத்திக்கீரை கொடுத்து பூஜை செய்தார்.

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்தால் உடல்நலம் இல்லாமல் இருப்பவர்களுக்கு நோய் குணமடையும் என்பது நம்பிக்கை.

அமைச்சர் உதயகுமார் பூஜை

அமைச்சர் உதயகுமார் பூஜை

மதுரை திருமோகூர் சக்கரதாழ்வார் சன்னதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, கே.மாணிக்கம், பெரியபுள்ளான், நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன், எம்.ஜெயராமன், மா.இளங்கோவன், வக்கீல் ரமேஷ், பி.அய்யப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

படிபூஜை வழிபாடு

படிபூஜை வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியர் மலைக் கோயிலில் ஆயிரத்து 320 படிகட்டுகளுக்கு மஞ்சள், குங்கும், தேங்காய், வெற்றிலைப் பாக்கு வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு பிராத்தனைகள்

சிறப்பு பிராத்தனைகள்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் சீரடி சாய்பாபா பீடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் புதூர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கூட்டாத்துப்பட்டி அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பட்டினத்தார் கோவில்

பட்டினத்தார் கோவில்

திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார் திருகோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பொன்னேரியை அடுத்த சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயிலில், முருகப்பெருமாணுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடைபெற்றன.

தர்காவில் தொழுகை

தர்காவில் தொழுகை

ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில், சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள மகான் ஹக்கிம் செய்குதாவூது ஒலியுல்லா தர்க்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

English summary
ADMK women cadres ate mann soru (ground feast) and Take Paal Kudam for Jayalalitha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X