மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு பச்சைத் துரோகம் - திருநாவுக்கரசர் பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு, தன் சுயநலத்துக்காக மாணவர்களின் வாழ்க்கையை பாழடித்துவிட்டது. தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்தது அதிமுக அரசு மாணவர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் மருத்துவ படிப்புக்கான 85% உள் ஒதுக்கீடு ரத்து ஆனது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Admk government done a blunder to medical aspirants said Thirunavukkarasar.

புதிய தர வரிசை பட்டியல் தயாரித்து கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்படி படித்த 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை இந்த ஆணை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர்கள் 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6510 இடங்களுக்காக பங்கேற்றனர். இதற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீதம் மத்திய பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கும் என உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

தள்ளாட்டத்தில் தமிழக கல்வித்துறை

தற்போது தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு ஜூலை 17 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல, பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த முடியாத சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் கல்வித்துறை பல்வேறு குழப்பங்களுக்கும், குளறுபடிகளுக்கும் ஆளாகி வருகிறது.

மாணவர்களின் நலனை பலி கொடுத்த அரசு

தமிழக மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வில் விலக்கு அளிக்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கான தீவிர முயற்சியில் அ.தி.மு.க. அரசு ஈடுபடாத காரணத்தால் தமிழகத்தின் மீது நீட் நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்கிற போது இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டுமென்று அ.இ.அ.தி.மு.க. முன் நிபந்தனையாக கூறியிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கிற அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களை காப்பாற்றுவதையே நோக்கமாக கொண்டிருப்பதால் தமிழக மாணவர்களின் நலனை பலி கொடுக்க வேண்டிய ஒரு நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் நிலை?

கடந்த ஆண்டு தமிழக அரசு நிகழ்த்திய கலந்தாய்வு மூலம் 2318 மருத்துவ இடங்களில் 2279 இடங்களை மாநில பாட திட்ட மாணவர்கள் சேர்ந்து பயனடைகிற நிலை ஏற்பட்டது. ஆனால் மத்திய பாட திட்டத்தின்படி வெறும் 16 மாணவர்கள் சேர்ந்து தான் பயனடைய முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வின்படி கலந்தாய்வு நடத்தப்பட்டிருந்தால் இந்நிலை தலைகீழாக மாறி 90 சதவீத இடங்களை மத்திய பாடத்திட்ட மாணவர்களும், 10 சதவீத இடங்களை மாநில பாடத் திட்ட மாணவர்களும் பெற வேண்டிய மிக மோசமான நிலை ஏற்பட்டிருக்கும்.

பச்சைத் துரோகம்

ஆனால் இதை தடுப்பதற்கு வழி தெரியாத எடப்பாடி பழனிச்சாமி அரசு என்ன செய்வதென்று தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தின் மீது திணித்த நீட் நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவகையிலும் நடவடிக்கை எடுக்க முடியாத திரனற்ற அவலநிலையில் அ.தி.மு.க. அரசு இருக்கிறது. இது தமிழகத்திற்கு அ.தி.மு.க. செய்த பச்சை துரோகமாகும். உடைந்து கிடக்கிற அ.தி.மு.க.வை காப்பாற்றிக் கொள்வதற்கு நரேந்திர மோடி அரசோடு பேரம் செய்து கொண்டதன் மூலம் தமிழகத்தின் நலன்கள் ஒவ்வொன்றாக தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.

மன்னிக்க முடியாத குற்றம்

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளை காப்பதற்கு ஒரே தீர்வு தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதுதான். இதை செய்து முடிப்பதற்கு பா.ஜ.க. மீது தீவிர அழுத்தத்தை செலுத்துவதற்கு அ.இ.அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை எனில் அதுவே மன்னிக்க முடியாத குற்றமாக தமிழக மக்கள் கருதுவார்கள்.

மேல்முறையீடு அவசியம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில் சட்ட நுணுக்கம் அறிந்த சமூக நீதியில் அக்கறையுள்ள, நீண்ட அனுபவமுள்ள மூத்த வழக்கறிஞர்களை நியமித்து எதிர்கொள்ள வேண்டும். இதன்மூலமே பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Tamilnadu government is so selfish to save its bribery government. For that it has victimized medical students future told congress leader Thirunavukkarasar.
Please Wait while comments are loading...