For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழிற்புரட்சி செய்த ''பொருளாதார மேதை'' ஜெயலலிதா: சட்டசபையில் பாராட்டி தீர்மானம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உலக தொழில் அதிபர்கள் மாநாட்டை நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று தமிழக சட்டசபையில் நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் தொழிற்புரட்சி செய்த பொருளாதார மேதை, சிந்தனை சிற்பி என்றும் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூடப்பட்டது.

தமிழகத்தில் தொழில் துவங்க மின்சாரம் உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து உலக தொழில் முதலீட்டாளர்களை முதல்வர் ஈர்த்திருக்கிறார் என்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. புதிய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை ஓ. பன்னீர் செல்வம் பட்டியலிட்டு கூறினார்.

சட்டசபையில் தீர்மானம்

சட்டசபையில் தீர்மானம்

தமிழக சட்டசபையில் இன்று ஜெயலலிதாவுக்கு பாராட்டு, நன்றி தெரிவித்து அமைச்சரும், அவை முன்னவருமான ஓ. பன்னீர் செல்வம் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். உண்ணவும் நேரமில்லா உழைப்பு, உறங்கவே நினையாத விழிப்பு தனக்காக ஏதுமின்றி, தமிழர்களுக்காகவே வாழுகின்ற துடிப்பு, ஏறெடுத்துப் பார்க்கும் பார்வையும், ஏனென்று கேட்கும் கேள்வியும், உதட்டில் இருந்து உதிரும் வார்த்தையும், உள்ளத்தில் ஒலிக்கும் வேட்கையும், வாள் எடுத்து வீசும் வீச்சும், வானிடியாய் பேசும் பேச்சும், வளையா செங்கோலும், வாரித் தரும் பொற்கரமும், தனக்காக எதுவுமின்றி, எல்லாமே தமிழருக்கே என்று வாழும் வள்ளலே.

அதிசய அன்னையே

அதிசய அன்னையே

செல்வச் செழிப்பில் உதித்து, அறிவூட்டும் பள்ளியிலே படித்து, பாடங்கள் அனைத்திலும் முதலிடமே வகித்து, கூர்மதியில் செழித்து, பேரறிவில் திழைத்து, கழகம் என்னும் பொக்கிஷத்தைக் கட்டிக் காத்து, எத்தர்கள் ஏவிய எண்ணில்லா கணைகளை எதிர்த்து, தகர்த்து, புறமுதுகு காட்டாத போர்க்களங்கள் கண்டு, வரலாறும் வாய்பிளக்கும் வாகைகளை வரிசையாய்க் கொண்டு, அதிசயமே வடிவான அன்னையே.

கருணை மழை

கருணை மழை

ஓராயிரம் எதிரிகள் ஓரணியில் திரண்டாலும், புறமுதுகிட்டு ஓடச் செய்து போர்க்கொடி நாட்டி, புண்ணிய பூமி காக்க வந்த சிங்கநிகர் தலைவியே, வான் மழை பொய்த்தாலும் வாரித் தரும் வள்ளல், தாய் மனம் பொய்க்காது என்று அள்ளித் தரும் அட்சயமே, திரும்பும் திசையெல்லாம தீபமாக நின்று, காணும் திசையெல்லாம் கருணை மழை பொழிந்து வரம் அளிப்பவரே, இமயத்தை பணிய வைக்கும் துணிவும், இல்லார்க்கு வாழ்வளிக்கும் கனிவும், தொண்டர்களை வாழவைக்கும் ஈரமும், துரோகிகளை வீழ்த்துகின்ற வீரமும், நெருப்பாற்றில் நீந்துகின்ற தீரமும், நினைத்ததை முடிக்கின்ற நெஞ்சின் உரமும், ஒருசேரப் பெற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதா.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

முதன் முறையாக தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பாங்குடன் நடைபெற்றதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். இதற்கு வித்திட்டதோடு மட்டுமல்லாமல் இந்த உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு குறித்து நுணுக்கமாக ஒவ்வொன்றைப் பற்றியும் அறிவுரைகளை அவ்வப்போது வழங்கியவர் முதலமைச்சர் அம்மா.

ரூ-2,42,160 கோடி

ரூ-2,42,160 கோடி

முதலமைச்சர் அம்மாவின் பெருமுயற்சியின் காரணமாகவே ஒரு லட்சம் கோடி முதலீடு என நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதாவது 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

தமிழகம் முதலிடம்

தமிழகம் முதலிடம்

இன்று தமிழ்நாட்டில் மிக அதிகளவிலான ஆலைகள் உள்ளன. தொழிற்சாலைகளில் 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் வேலைபுரிவோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

உள்நாட்டு உற்பத்தி

உள்நாட்டு உற்பத்தி

அம்மா தமிழகத்தின் முதலமைச்சராக 1991-ம் ஆண்டு பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் தேசிய சராசரியைவிட குறைவாகவே இருந்தது. ஆனால், இன்றோ தமிழகத்தில் தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட ஒன்றரை மடங்கு அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது.

அசோகெம் பாராட்டு

அசோகெம் பாராட்டு

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, ஒட்டுமொத்த உட்கட்டமைப்பு, மின்சாரம், சாலை வசதி, சுகாதாரம், தனி நபர் வருமானம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய 9 இனங்களில், 8 இனங்களில் மிகச் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என கடந்த பிப்ரவரி மாதம் அசோகெம் வெளியிட்ட ஒப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவே காரணம்

ஜெயலலிதாவே காரணம்

தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்த அளவு முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு முக்கியக் காரணம் முதலமைச்சர் அம்மா முதன்முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது தொழிற்புரட்சி ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுதான். முதன்முதலாக தமிழ்நாட்டில் தொழில் கொள்கை ஒன்றை 1992ம் ஆண்டு முதலமைச்சர் அம்மா வெளியிட்டு நடைமுறைப்படுத்தியதே இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் வியத்தகு வளர்ச்சிக்கு அடிப்படை.

தமிழகத்தில் தொழிற்சாலைகள்

தமிழகத்தில் தொழிற்சாலைகள்

அந்தத் தொழில் கொள்கைக் காரணமாகத்தான் ஃபோர்டு மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது முதல் உற்பத்தி தொழிற்சாலையினை தமிழகத்தில் துவங்கின. இந்த நிறுவனங்கள் தங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவிட வேண்டுமென கடும் போட்டி பல்வேறு மாநிலங்களிடையே இருந்தபோது, இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் நிறுவ முழுமுதற் காரணமானவர் முதலமைச்சர் அம்மா தான்.

நிமிடத்திற்கு 3 கார்கள்

நிமிடத்திற்கு 3 கார்கள்

மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு உதிரிப் பாகங்கள் வழங்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தமிழகத்தில் இதன்காரணமாக அமையப்பெற்றன. மேலும், பல மோட்டார் வாகன நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைத்த காரணத்தால் இன்று நிமிடத்திற்கு 3 கார்கள் உற்பத்திச் செய்யும் மிகப் பெரிய மோட்டார் வாகனங்கள் உற்பத்தி கேந்திரமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களில் 30 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் ஏற்றுமதியில் 70 சதவிகிதம் தமிழகத்திலிருந்துதான் மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்றுமதியில் முதலிடம்

ஏற்றுமதியில் முதலிடம்

2003-ல் முதலமைச்சர் அம்மா உருவாக்கிய தொழில் கொள்கைக் காரணமாகத்தான் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மிகப்பெரும் அளவில் தமிழகத்தில் அமைய வழிவகை ஏற்பட்டது. சாம்சங், பிளக்ஸ்டிரான்க்ஸ், சான்மினா போன்ற உலக பெரும் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்கின. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பெறுவதற்குக் காரணம், இந்தத் தொழில் கொள்கையும் அதன் பயனாக புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டதுமேயாகும்.

புதிய தொழில் கொள்கை

புதிய தொழில் கொள்கை

2014ம் ஆண்டு முதலமைச்சர் அம்மா புதிய தொழில் கொள்கை ஒன்றை வெளியிட்டார். தொழில் வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக அமையும் வண்ணம் தென் மாவட்டங்களுக்கென சிறப்புச் சலுகைகளையும் அறிவித்தார். மேலும், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் கொள்கை மற்றும் உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவற்றையும் வெளியிட்டார். தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் அதிகளவிலான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதனால் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

3 மடங்கு வேலைவாய்ப்பு

3 மடங்கு வேலைவாய்ப்பு

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் விவரப்படி 31.-3.-2011-ல் தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 21 ஆயிரத்து 904 ஆகும். 31.-3.-2015-ல் தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 87 லட்சத்து 57 ஆயிரத்து 717 ஆக உள்ளது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 3 லட்சத்து 36 ஆயிரத்து 813 ஆகும்.

புள்ளி விபரங்கள்

புள்ளி விபரங்கள்

இது கடந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இ.பி.எப். பயனுடன் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பினைவிட 3 மடங்கிற்கும் அதிகமாகும். இதுவன்றி இ.பி.எப். தகுதியில்லாத வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதுபற்றிய புள்ளிவிவரங்கள் எந்த நிறுவனத்தாலும் சேகரிக்கப்படுவதில்லை. அம்மாவின் அறிவுரையின்படி, 2014 ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

9 நாடுகள் பங்கேற்பு

9 நாடுகள் பங்கேற்பு

செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, கனடா, இத்தாலி, சிங்கப்பூர், ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய 9 நாடுகள் பங்கேற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பங்கேற்றனர். இதுதவிர வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சார்ந்த 23 அமைப்புகள் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

புதிய ஒப்பந்தங்கள்

புதிய ஒப்பந்தங்கள்

செப்டம்பர் 10 ம் தேதி 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றின்மூலம் தமிழகம் பெறக்கூடிய முதலீடு 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாயாகும். இவற்றின்மூலம் ஏறத்தாழ 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திடும். 10,073 குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தனித் தனியே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாவட்ட தொழில் மையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின் உற்பத்தி

மின் உற்பத்தி

இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஒரு சிலர், இந்த மாநாடு 2011ம் ஆண்டே நடத்தப்பட்டிருக்க வேண்டுமென்ற ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் அம்மா, 2011ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றபோது தமிழகத்தில் எத்தகைய கடுமையான மின்வெட்டு நிலவி வந்தது என்பதை உறுப்பினர்கள் அனைவரும் நன்கு அறிவர். வீடுகளுக்கே பல மணி நேரம் மின்வெட்டு நிலவி வந்த சூழ்நிலையில், எவரேனும் இங்கே தொழில் துவங்க முன்வருவார்களா? அல்லது அவ்வாறு முன்வந்தால்கூட அவர்களுக்கு போதிய மின்சாரம் வழங்கிட இயலுமா? அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருந்தால்தானே தொழில்முனைவோரை தொழில் தொடங்க நாம் அழைக்க இயலும்.

அடிப்படை கட்டமைப்பு

அடிப்படை கட்டமைப்பு

அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் முக்கியமாகத் திகழ்வது மின்சாரம்தானே. கடந்த 4 ஆண்டுகளில் 6,240 மெகாவாட் அளவு மின் உற்பத்தித் திறன் கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவேதான் தற்போது கடுமையான மின் பற்றாக்குறை மாநிலம் என்ற நிலையிலிருந்து, தேவையான மின்சாரம் கிடைக்கப்பெறும் மாநிலம் என்ற நிலையை தமிழகம் எய்தியுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் முதலமைச்சர் அம்மாவையே சாரும்.

வளர்ச்சி விகிதம் உயர்வு

வளர்ச்சி விகிதம் உயர்வு

2010--2011 ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு 200 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே வழங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 260 மில்லியன் யூனிட் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது 30 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் மின்சாரம் வழங்கப்படுகிறது. எனவேதான், 2013--2014ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.74 சதவிகிதம் என்று உள்ள நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.24 சதவிகிதம் என்ற உயர் அளவாக இருந்தது.

தொழில் மறுமலர்ச்சி

தொழில் மறுமலர்ச்சி

பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2013--2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட சிறு மற்றும் குறு நிறுவனங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 393 ஆக இருந்தது. அது 2014--2015-ல் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்பதுதான் மறுக்க இயலாத உண்மை. மேலும் ரிசர்வ் வங்கி அந்நிய நேரடி முதலீடுகள் குறித்த புள்ளிவிவரங்களை அவ்வப்போது வெளியிடுகிறது. 2000ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தமிழகத்திற்கு இவ்வாறு கிடைக்கப்பெற்ற அந்நிய நேரடி முதலீடு ரூ.93,725 கோடி ஆகும். இத்தொகை 2000ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2011 வரை ரூ.33,105 கோடியாக மட்டுமே இருந்தது.

அதிக முதலீடு பெற்றுசாதனை

அதிக முதலீடு பெற்றுசாதனை

மே 2011 முதல் மே 2015 வரையில் வரப்பெற்ற அந்நிய நேரடி முதலீடு சுமார் ரூ.60,620 கோடி ஆகும். அதாவது 10 ஆண்டுகளில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகளைவிட ஏறத்தாழ 2 மடங்கு அதிகமான முதலீடுகளை நான்கே ஆண்டுகளில் பெறச் செய்து சாதனை படைத்தவர் முதலமைச்சர் அம்மா. தற்போது அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலமைச்சர் அம்மாவை பொறுத்தவரை எந்த நேரத்தில், எதைச் செய்யவேண்டும் என்பதை மிகவும் ஆழ்ந்து, சிந்தித்து, அறிவித்து, செயல்படுத்தக்கூடியவர் என்பது நாடு நன்றாகவே அறியும்.

தொழிற்கொள்கை

தொழிற்கொள்கை

2012ம் ஆண்டில் விஷன் தமிழ்நாடு 2023 என்ற தொலைநோக்குத் திட்டத்தை முதலமைச்சர் அம்மா அறிவித்தார். முந்தைய ஆட்சி விட்டுச்சென்ற கடுமையான மின் பற்றாக்குறையை நீக்கியும், நிதி நிலையைச் சரிசெய்தும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும் தமிழகத்தை முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றியபின்னர், முதலீட்டாளர்களை அழைத்து சந்திப்பு நடத்துவதுதான் உகந்ததாக இருக்கும் என்பது எவருக்கும் எளிதில் புரியக்கூடியதுதான்.

வரலாறு காணத வெற்றி

வரலாறு காணத வெற்றி

புதிய தொழில் கொள்கைகளாலும், தொலைநோக்குத் திட்டங்களாலும், மின்சார உற்பத்தியைப் பெருக்கியதாலும், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்குச் சரியான நிதி ஆதாரங்களை வழங்கி துவக்கியதாலும் இன்று வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடையே பெரும் நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு இன்று வரலாறு காணாத தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக

தமிழ்நாட்டில் முதன்முறையாக

மேலும் இதுபோன்ற உலகளவிலான சந்திப்பு தமிழ்நாட்டில் முதல் முறையாக நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளுக்குச் சென்று இதற்காக தொழில் முனைவோர் முன் ஆயத்தக் கூட்டங்களை நடத்தி தமிழகத்தைப் பற்றி உலகளவில் அறியச் செய்வதற்கும், ஏனைய ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தன. அதன் பயனாகத்தான் 9 நாடுகள் இச்சந்திப்பில் தங்களையும் இணைத்துக் கொண்டனர். இவைத் தவிர அமெரிக்கா, தைவான், ஜெர்மனி, சீனா, மலேசியா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்தும் வர்த்தக அமைப்பின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு முதலீடுகளுக்கு உறுதியளித்துள்ளார்கள். தைவான் நாட்டிலிருந்து வந்துள்ள பெரும் மின்னணு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.

சூரிய மின் சக்திஒப்பந்தம்

சூரிய மின் சக்திஒப்பந்தம்

ஏற்கெனவே தமிழ்நாட்டில் இயங்கிவரும் MRF, TVS, JSW, Apollo Tyres, Saint Gobain, Amway தைவான் நாட்டைச் சேர்ந்த காலணி நிறுவனம், டாபே, ஸ்பிக், சாம்சங் போன்ற பல நிறுவனங்கள் தங்களது விரிவாக்கத் திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. முதலமைச்சர் அம்மா 2012 ஆம் ஆண்டில் வெளியிட்ட சூரிய மின் உற்பத்தி கொள்கை காரணமாக- சோலார் எனர்ஜி 5,345 மெகா வாட் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

பாராட்டுவது கடமை

பாராட்டுவது கடமை

5,345 மெகா வாட் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 35,356 கோடி ரூபாயாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க உலகத் தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றதற்கும், 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டதற்கும் முழுமுதற் காரணமான முதலமைச்சர் அம்மாவைப் பாராட்டுவது நம் கடமை என்பதால், தமிழ்நாடு அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

சிறப்பு தீர்மானம்

சிறப்பு தீர்மானம்

தொழில்கள் வளர வேண்டும்; தொழிலாளர்கள் வாழ வேண்டும்; அதன்மூலம் பொருளாதாரத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டுமென்ற லட்சியத்தை அடையும் வகையில், "மோரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல" "அறிவை வளர்த்துக் கொண்டு பலன் தர வேண்டுமென்ற அண்ணாவின் சிந்தனையை" மனதில் நிறுத்தி, மக்கள் பலன்பெறும் வண்ணம் தனது தொலைநோக்குப் பார்வை நுன்மான் நுழைபுலம், இயற்கையான மதிநுட்பம், சீரான திட்டமிடல், அறிவாற்றல் மற்றும் ஆற்றல்மிகு செயல்பாடு ஆகியவற்றின் மூலம் உலகமே வியக்கும் வண்ணம், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டினை இம்மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தி, அதன்மூலம் தொழில் துறை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க சாதனையைப் புரிந்தவர்.

சரித்திரத்தாய்

சரித்திரத்தாய்

சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பின் மூலம், 15-க்கும் மேற்பட்ட அயல் நாடுகளிலிருந்தும், ஏனைய மாநிலங்களிலிருந்தும் 5,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களைப் பங்குபெறச் செய்து, ரூ.1 லட்சம் கோடி என்று நிர்ணயிக்கப்பட் இலக்கினையும் மிஞ்சி, தமிழகத்திற்கு தமிழகத்திற்கு 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டினை ஈர்த்து, அதன் வாயிலாக, 4 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்த, வலிமையான; வளமான தமிழகத்தை உருவாக்கிடும் வகையில் தொழிற்புரட்சி மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்விலும்; தமிழக பொருளாதாரத்திலும்; அதன்மூலம் இந்தியப் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை; மறுமலர்சியை ஏற்படுத்தி; ஏற்றத்தை ஏற்படுத்த வழிவகுத்த முதலமைச்சர், சரித்திரத் தாய்; ஏழைகளின் ஏந்தல்; பொருளாதார மேதை; சிந்தனைச் சிற்பி, ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சட்டமன்ப் பேரவை தனது நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்து பெருமிதம் கொள்வதோடு, இதுபோன்ற சாதனைகள் தொடர வேண்டுமென்று மனதார வாழ்த்தி மகிழ்கிறது என்று தீர்மானத்தை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன் மொழிந்தார்.

ஏகமனதாக நிறைவேற்றம்

ஏகமனதாக நிறைவேற்றம்

இந்த தீர்மானத்தை ஆதரித்து தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, டாக்டர் செ.கு. தமிழரசன் (குடியரசு கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), ஜாவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் பேசினார்கள்.இதன் பின் இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

English summary
ADMK Ministers and members praised CM Jayalalitha for the successful GIM met held in Chennai recently
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X