மண்ணின் மகன் vs சசிகலா அக்கா மகன்! மதுசூதனன் களமிறங்கியதால் அனல் பறக்கும் ஆர்.கே.நகர்

மண்ணின் மகனா, அல்லது சசிகலா அக்கா மகனா? என்ற மோதல் ஆர்.கே.நகரில் உருவாகியுள்ளது. இது முழுக்க மதுசூதனனுக்கு சாதகமான அம்சம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக வேட்பாளராக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவரான மதுசூதனன் களமிறக்கப்பட்டுள்ளதால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

திமுகவிலிருந்து பிரிந்து சென்று எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியை ஆரம்பிக்கும்போதில் இருந்தே அவருடன் இருந்தவர் மதுசூதனன்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். கட்சியின் ஏற்ற இறக்கங்களில் எல்லாம் ஜெயலலிதாவுடன் தோள் கொடுத்து பயணித்தவர் மதுசூதனன்.

அமைச்சர்

1991ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றபோது, அமைந்த அமைச்சரவையில் மதுசூதனனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. அப்போது ஆர்.கே.நகர் தொகுதியலிருந்துதான் மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொகுதி மக்களுக்கு அந்த காலகட்டத்தில் முடிந்த அளவுக்கு உதவி செய்துள்ளார்.

செல்வாக்கு அதிகம்

சமீபத்தில் ஒரு ஆன்லைன் மீடியா எடுத்த சர்வேயில், மதுசூதனனுக்கு அந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பது தெரியவந்தது. வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்பே எடுக்கப்பட்ட அந்த சர்வேயிலேயே மதுசூதனன் ஆதரவு அதிகம் இருந்தது என்றால் இனிமேல் அவருக்கு ஆதரவு அதிகரிக்கவே செய்யும்.

நம்பிக்கையாளர்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரியவராக அறியப்படுபவர் மதுசூதனன். எனவேதான் அவைத் தலைவர் போன்ற முக்கிய பதவியை மதுசூதனனிடமே தொடர்ந்து அளித்து வைத்திருந்தார் ஜெயலலிதா. எதையும் அதிரடி மாற்றத்திற்கு உள்ளாக்கும் ஜெயலலிதாவே, ஒருவரை நம்பி தொடர்ச்சியாக ஒரு பதவியை கொடுத்து வைத்திருந்தார் என்றால் அது மதுசூதனன்தான்.

மண்ணின் மகன்

இந்த நிலையில்தான் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியில் மதுசூதனன் போட்டியிடுவதே சரியானதாக இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு செய்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி பின்தங்கிய பகுதி. இதே பகுதியில் 50 வருடங்களுக்கும் மேலாக வாழ்பவர் மதுசூதனன். ஒவ்வொரு வீட்டுக்கும் நெருக்கமானவர் அவர்.

சசிகலா அக்கா மகன்

இன்னொருபுறம், சசிகலாவின் அக்கா மகன் என்ற முத்திரையோடு தினகரன் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே மண்ணின் மகனா, அல்லது சசிகலா அக்கா மகனா? என்ற மோதல் ஆர்.கே.நகரில் உருவாகியுள்ளது. இது முழுக்க மதுசூதனனுக்கு சாதகமான அம்சம். மதுசூதனன் எம்.எல்.ஏவாக இருந்தபோதுதான் ஆர்.கே.நகரில் ஓரளவுக்காவது நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என கூறிவரும் ஆர்.கே.நகர் மக்கள், தேர்தல் முறையாக நடந்தால் அவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்பது நிச்சயம்தானே.

English summary
After the entry of E. Madhusudan, R.K.Nagar by election become more interesting and competitive.
Please Wait while comments are loading...