For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் அதிருப்தி... வெடிக்கும் போராட்டங்கள் - கவுன்சிலர் வேட்பாளர்கள் மாற வாய்ப்பு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக அதிமுகவில் அதிருப்தி அதிகரித்துள்ளது. பல வார்டுகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றக்கோரி ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருவதால், அதிருப்தி வேட்பாளர்கள் பலர் மாற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ஆம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று, கடந்த 25ஆம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார். மேலும் வேட்புமனு தாக்கல் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Agitations galore in ADMK against Councillor candidates

தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே திங்கட்கிழமையன்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, 12 மாநகராட்சிகளில் 919 வார்டுகளுக்கும் 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார்.

வேட்புமனு தாக்கல்

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் 27ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் வேட்புமனு தாக்கலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்கிழமையன்று அவசர அவசரமாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வேலைகளில் வேட்பாளர்கள் ஒருபுறம் ஈடுபட்டிருக்க, மற்றொரு புறம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை, காசுக்காக சீட்டு கொடுத்துள்ளார்கள் எனக்கூறி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

தீக்குளிப்பு, உண்ணாவிரதம்

திருவள்ளூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வராணி சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படாததால் அவர் மனமுடைந்து இரவு 10 மணியளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மண்ணெணெய் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்டார். அதேபோல தேனியில் அதிமுக பிரமுகர் ஒருவர் போட்டியிட சீட் கிடைக்காததைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

அதிருப்தி போராட்டங்கள்

கோவையில் அமைச்சர் வேலுமணி, தனக்கு வேண்டியவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு சீட் கொடுத்துள்ளார் என்று அதிமுகவினர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் திருச்சி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு என தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

கவலைப்பட வேண்டாம்

சென்னை மேற்கு மாம்பலத்தில் தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் கலைராஜன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் மகளிர் அணியினர் நடத்தினர். போராட்டம் பற்றி சசிகலாவிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதற்கு சசிகலா, அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அறிவிச்சது அறிவிச்சதுதான். கட்சி அறிவிச்ச வேட்பாளருக்கு வேலை பார்க்கிறதுதான் கட்சிக்காரங்களோட வேலை. அதனால அதையெல்லாம் யோசிக்க வேண்டாம் என்று கூறினாராம்.

நீடிக்கும் போராட்டம்

வேட்புமனு தாக்கல் செய்த பின்னரும் வேட்பாளர்களுக்கு எதிராக புகார்கள் வரிசைகட்டி வருகின்றன. போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

திருச்சி மாநகராட்சி அதிமுக வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கோரி மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி நடராஜன் அலுவலகத்தை முற்றுகை இட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 8 மற்றும் 55-வது வார்டு வேட்பாளர்களை மாற்றக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஈரோட்டில் போராட்டம்

ஈரோடு மாநகராட்சி 30 வட்ட அதிமுக வேட்பாளர் மாற்றக்கோரி மேற்கு உறுப்பினரும் மாவட்ட செயலாளர் கே.வி. ராமலிங்கத்தின் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அதிமுக வேட்பாளர் செல்வியை மாற்றக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களை மாற்றக்கோரி பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்களே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேட்பாளர்கள் மாற வாய்ப்பு

அதிருப்தி வேட்பாளர்கள் யார் யார் என்று கணக்கெடுத்துள்ள அமைச்சர் வேலுமணி நேற்று மாலையில் அந்த பட்டியலை சசிகலாவிடம் கொடுத்தாராம். சர்ச்சைக்குரியவர்களை யார் பரிந்துரை செய்தார்கள் என்ற விபரங்களையும் சசிகலா கேட்டுக்கொண்டாராம். வேட்பாளர்களும் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டாலும் அதிமுகவில் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் அதிருப்தி வேட்பாளர்கள் மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. இதனால் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

English summary
Agitations are being increased in ADMK against councillor candidates for the local body election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X