For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.பி.எஸ் படிக்க உதவி கேட்ட ஏழை மாணவி... எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் உதவி செய்த ஜெ.,

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எம்.பி.பி.எஸ் படிப்பதற்காக பண உதவி கோரிய ஏழை மாணவி பிரியதர்ஷினியின் கோரிக்கையை ஏற்று மாணவியின் மருத்துவப் படிப்பு செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டதுடன், முதலாம் ஆண்டு கட்டணமாக, 1.10 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு கடந்த 20ம்தேதி முதல் சென்னை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. நேற்று 3வது நாளாக கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று முன்தினம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான இடங்கள் காலியாகிவிட்டன. அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரிகளில் நேற்று பிற்பட்டோருக்கான இடங்கள் முடிந்துவிட்டன. முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பிற்பட்டோருக்கான பிரிவில் கூலித்தொழிலாளியின் மகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

AIADMK to fund poor girl’s medical education

அந்த மாணவியின் பெயர் பிரியதர்ஷினி. இவர் தந்தை ரெங்கநாதனுடன் கலந்தாய்வுக்கு வந்திருந்தார். இவருக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது. மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்ததில் தந்தையும், மகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் மருத்துவம் படிக்க பணம் வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியதர்ஷினி, நான் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவள். எனது தந்தைக்கு 3 மகள்கள். நான் தான் மூத்தவள். நான் எனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தேன்.

அதன்பின்னர் தர்மபுரியில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தேன். எனக்கு 10ம் வகுப்பு படித்து முடித்ததுமே டாக்டராக வேண்டும் என்ற லட்சியம் உருவானது. அது நிறைவேறும் வகையில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

ஒருபுறம் இது மகிழ்ச்சியாக இருந்தாலும், எனது தந்தையால் இந்த கட்டணத்தை செலுத்த முடியுமா? என்று வருத்தமாக இருக்கிறது. என்னுடைய தந்தை ரெங்கநாதன் கூலித்தொழிலாளி. அவரால் எனது கல்விக் கட்டணத்தை கட்டுவது மிகவும் சிரமம். எனவே என்னுடைய கல்விச்செலவை யாராவது மனமுவந்து ஏற்க முன்வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.

அடுத்த சில நிமிடங்களில் மாணவியின் தந்தை ரங்கநாதனுடனும், மாணவி பிரியதர்ஷனியுடனும் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் தொடர்புகொண்டு பேசினார்கள். மாணவியும், அவரது தந்தையும், அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்து தங்கள் ஏழ்மை நிலையை தெரிவித்து, அம்மா அவர்கள்தான், என் இந்த படிப்புக்கு உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த கடிதம் முதல்வர் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அடுத்த நொடியே மாணவியின் ஏழ்மை நிலையை அறிந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா அவரது எம்.பி.பி.எஸ். படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் அதற்கான தொகை வழங்குவதற்கு உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக்கல்வி பயில்வதற்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று, சென்னை, கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி, தனது குடும்பம் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாகவும்; தந்தை கூலி வேலை செய்து வருவதாகவும் தெரிவித்து, தனது மருத்துவப்படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எந்த ஒரு மாணவ, மாணவியும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடைய முதல்வர் ஜெயலலிதா, பிரியதர்ஷினியின் வேண்டுகோளை தாயுள்ளத்தோடு பரிசீலித்து, அம்மாணவியின் மருத்துவப்படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு மருத்துவப்படிப்புக்கான கல்லூரிக்கட்டணம், விடுதிக்கட்டணம், புத்தகக்கட்டணம் உள்பட மொத்தம் 1,10,000 ரூபாய் 'புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை' யில் இருந்து வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

English summary
As her father was a daily wage worker, the girl requested the Chief Minister to fund her education. Considering her request, the AIADMK leader has come forward to bear the educational expenses.The amount will be given from the Dr. MGR Trust, the release said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X