For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிபெருமாள் மறைவுக்கு அஞ்சலி- ஆக.4-ல் தமிழகம் தழுவிய முழு அடைப்பு: வைகோ, திருமா, ஜவாஹிருல்லா அழைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மதுக் கடைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆகஸ்ட் 4-ந் தேதியன்று தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்த மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி அருகே உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் மது கடையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தின் போது காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய நிலையில் சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

All party calls for bandh on Aug.4 in Kanyakumari

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை அகற்றும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஆயிரக்கணக்கான பெண்கள் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றும் போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சசிபெருமாள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் 4-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டை அடியோடு நாசப்படுத்தி வருகின்ற மது அரக்கனின் பிடியில் இருந்து விடிவிக்க, தனது 16 வயதில் இருந்து இடைவிடாது போராடிய மது ஒழிப்புப் போராளி உத்தமத் தியாகி சசிபெருமாள், அந்த இலட்சத்திற்காக அறப்போர் நடத்தி உயிர் பலி ஆகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் ஊர்மக்களோடு சேர்ந்து சசிபெருமாளும் ஜூன் 30 ஆம் தேதி போராடியபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

உண்ணாவிரதப் பந்தல் உடனே அகற்றப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த ஊர் மதுக்கடையை மூட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆணை பிறப்பித்தும், தமிழக அரசு அதனைத் துட்சமாகக் கருதி டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்தியது. ஜூலை 31 ஆம் தேதி டாஸ்மாக் கடையை அகற்ற தீப்பந்த போராட்டம் ஊர்மக்கள் அறிவித்தனர். தமிழக அரசு அதனை பொருட்படுத்தவில்லை. இதனால் தியாகி சசிபெருமாள் 200 அடி உயர் அலைபேசி கோபுரத்தின் உச்சிக்கே சென்று கையில் தீப்பந்தத்தை வைத்துக் கொண்டு, அதற்கு உடனே தீ வைக்காமல் டாஸ்மாக் கடையை மூடுமாறு கோரிக்கை வைத்தார்.

ஐந்து மணி நேரம் இந்த போரட்டம் நடந்தது. தமிழக அரசு வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் அலட்சியம் காட்டினர். பின்னர் சசிபெருமாளை கயிறுகளைக் கட்டி கீழே கொண்டு வந்து இறந்துவிட்டார் என அறிவித்தனர். அவரது உடல் எங்கும் இரத்தம் படிந்திருந்தது. மூக்கிலும் இரத்தம். உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அவரது உடலை பார்த்துவிட்டு இது இயற்கை மரணம் அல்ல, தமிழக அரசால் சாகடிக்கப்பட்டார் என்று வைகோ குற்றம் சாட்டினார். நேற்று இரவிலேயே பிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசு முயற்சி செய்தது. வைகோ கடுமையாக எச்சரித்ததன் பின்னரே அந்த முயற்சி கைவிடப்பட்டது.

தியாகி சசிபெருமாளின் கோரிக்கையை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். கோடிக்கணக்கான தாய்மார்களின் கண்ணீருக்கும், இளைய சமுதாயத்தினருடைய சீரழிவிற்கும் காரணமான மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். இதனை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆளுங்கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சியினர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு என அறிவித்துள்ளனர்.

எனவே அதே ஆகஸ்ட் 4 இல் தமிழகம் முழுவதிலும் முழு அடைப்பு நடைபெற வேண்டுகிறோம். அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள், தாய்மார்கள், மாணவர்கள், குறிப்பாக வணிகப் பெருமக்கள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்.

மாமனிதர் அப்துல் கலாம் மறைவுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களும், சிறு அங்காடி முதல் பெரிய நிறுவனம் வரை வணிகப் பெருமக்கள் தாங்களாக முன்வந்து முழு கடை அடைப்பு நடத்தினர்.

ஐந்து நாட்களுக்குள் மீண்டும் கடை அடைப்பு செய்வது பொருளாதார சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தாலும், தெலுங்கானா போராட்டம் போன்ற போராட்டங்களில் சில மாநிலங்களில் தொடர்ந்து இடைவிடாத முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதையும் எண்ணி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், தியாகி சசிபெருமாளினுடைய விருப்பத்தை நிறைவேற்றவும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என பணிவுடன் இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.

இவ்வாறு மூவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த முழுஅடைப்புப் போராட்டத்திற்கு இடதுசாரிகள் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தருவோம் என்று தெரிவித்துள்ளனர்.

English summary
All Party meeting called bandh on August 4 as the mark of last respect to Gandhian Sasiperumal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X