For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழை நோயாளிகளைப் புரிஞ்சுக்கோங்க, போராட்டத்தை விடுங்க.. அரசு டாக்டர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்!

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழை எளிய நோயாளிகள் நலன் கருதி டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் நடத்திவரும் போராட்டத்தை, நோயாளிகள் நலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீதம் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் மோசமான நிலையை அடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளாததால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Anbumani ramadoss urges govt doctors to get back to their work

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் ஒதுக்கீடு காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒருவகையில் பார்த்தால் அது அவர்களின் உரிமையும் கூட. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தின் காரணம் காட்டியே அந்த உரிமையை உயர்நீதிமன்றம் பறித்திருக்கிறது.

இப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுத்திருக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால், பதவிகளை தக்கவைத்துக் கொள்வதிலும், ஊழல் செய்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தமிழக ஆட்சியாளர்கள், இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் படுதோல்வி அடைந்துவிட்டனர். ஆட்சியாளர்களின் இந்தத் தோல்வியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஏழை நோயாளிகளே.

கடந்த 3 நாட்களில் 6000 அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருப்பதால் நோயாளிகள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். உயிர்காக்கும் கடவுள்களாக போற்றப்படும் மருத்துவர்கள் அவசரமான அறுவை சிகிச்சைகள், அவசரமற்ற சிகிச்சைகள் என வகை பிரித்துப் பார்க்காமல் அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி நோயாளிகள் மீது கருணை காட்ட வேண்டும்.

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் அனைவருமே தனியாரிடம் சிகிச்சை செய்து கொள்வதற்கு வசதியில்லாத ஏழைகள் தான். அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் சேருவதால் சிகிச்சைக்கு அதிக காலம் ஆகிறது. நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி என்ற முன்னாள் படைவீரர் மருத்துவம் கிடைக்காததால் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் தொடரக்கூடாது. 50 சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் மருத்துவர்கள் பின்னால் தான் உள்ளது; அவர்கள் தரப்பு நியாயங்களை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

தேவைப்பட்டால் அவர்களுடன் இணைந்து அறவழியில் போராட பல தரப்பினரும் தயாராகவே உள்ளனர். அதேநேரத்தில் அவர்களின் போராட்டம் ஏழை நோயாளிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. 50 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான வி‌ஷயத்தில் இத்தகைய போராட்டங்களின் முலம் தங்களின் குரலை ஓங்கி ஒலித்தால் மட்டும் தான் நியாயம் கிடைக்கும் என்ற எண்ணம் தான் மருத்துவர்களை போராட்டத்தில் இறங்க வைத்திருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாகத் தான் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

எனவே, மருத்துவர்களை அழைத்துப் பேசி அவர்களிடையே நம்பிக்கையை ஊட்டி போராட்டத்தை திரும்பப் பெற வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களும் ஏழை நோயாளிகளின் நலன் கருதி, அறவழியில் போராட்டத்தை தொடர்ந்து கொண்டாவது, நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்." என்று கூறியுள்ளார்.

English summary
PMK leader Dr Anbumani Ramadoss has urged the agitating govt doctors to go back to their work for the sake of poor patient.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X