For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து தி.மு.க. ஒருபோதும் தப்ப முடியாது: அன்புமணி பாய்ச்சல்

கதிராமங்கலத்தில் எண்ணெய் கிணறுகளை வெட்டும் விவகாரத்தில் திமுகவும் அதிமுகவும்தான் பொறுப்பு என அன்புமணிசாடியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கதிராமங்கலம் சீரழிவு பாவத்தில் இருந்து திமுக ஒருபோதும் தப்பவே முடியாது என பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய்க்கிணறுகளை வெட்டுவதற்கான ஆய்வு நடத்த மட்டுமே திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான நிலக்குத்தகை உரிமத்தை வழங்கியது அதிமுக அரசு தான் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கதிராமங்கலம் மக்களுக்கு செய்த துரோகத்தை மூடி மறக்கும் இம்முயற்சி கண்டிக்கத்தக்கது.

கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருவதால் அங்கு சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கதிராமங்கத்தில் மீத்தேன் எடுக்கவும் ஓஎன்ஜிசி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அங்குள்ள மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுகதான் காரணம்

திமுகதான் காரணம்

அந்த மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இரு முறை அப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போது கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்தது திமுக அரசு தான் என்று வெளிப்படையாக குற்றஞ்சாற்றினேன். அது உண்மை என்பதில் உறுதியாக உள்ளேன்.

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

இந்த நிலையில் கதிராமங்கலம் போராட்டம் தொடங்கி 3 மாதங்களுக்குப் பிறகு அந்த ஊருக்குச் நேற்று சென்று மக்களைச் சந்தித்துப் பேசிய ஸ்டாலின், திமுக மீதான புகாருக்கு விளக்கமளித்துள்ளார். ‘‘இந்த கதிராமங்கலம் பிரச்னைக்கு அதிமுக மட்டுமல்ல திமுகவும் காரணம் என்று ஒரு தவறான பிரசாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நான் தெரிவிக்க விரும்புவது, திமுக ஆட்சியின்போது மத்திய அரசு இங்கு ஆய்வு செய்தது. மக்களுடைய கருத்துகளை கேட்டு, விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிக்கான ஆய்வில் ஈடுபடும் நிலைதான் திமுக ஆட்சியில் இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குத்தகை உரிமையை வழங்கியிருக்கிறது என்றால், கதிராமங்கலம் பகுதி மக்களுக்கு யார் துரோகம் செய்தார்கள் என்பதை நான் இதைவிட எப்படி எடுத்துச் சொல்லமுடியும்?'' என்று வினா எழுப்பியுள்ளார்.

சிறுபிள்ளைத்தனம்

சிறுபிள்ளைத்தனம்

அதுமட்டுமின்றி, திமுக கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்ட அதிமுக இந்தத் திட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தியது ஏன்? என்ற அறிவார்ந்த வினாவையும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார். ஸ்டாலினின் இந்த விளக்கம் சிறுபிள்ளைத் தனமானது என்பதை குழந்தைகள் கூட ஒப்புக்கொள்ளும்.

திமுக, அதிமுக பொறுப்பேற்பு

திமுக, அதிமுக பொறுப்பேற்பு

எந்த நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அதற்கு ஓர் தொடக்கப்புள்ளி ஒன்று உண்டு. அதை வைத்தது யாரோ அவர்கள் தான் அத்திட்டத்தின் காரணகர்த்தா என்பது உலகமறிந்த உண்மை. அந்த வகையில் கதிராமங்கலத்தில் எண்ணெய்க்கிணறுகள் தோண்டுவது குறித்து ஆய்வு செய்ய அனுமதி அளித்த திமுக அரசும், எண்ணெய்க் கிணறு தோண்ட குத்தகை உரிமம் வழங்கிய அதிமுக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

கதிராமங்கலம் பாவம்

கதிராமங்கலம் பாவம்

மாறாக, ஆய்வு செய்ய அனுமதி அளித்த திமுக அரசுக்கு கதிராமங்கலம் பாவத்தில் பங்கு கிடையாது என்று செயல் தலைவர் ஸ்டாலின் கூறுவது,‘‘ அரளி விதையை அரைத்துக் கொடுத்தது மட்டும் தான் நான். வாயில் திணித்தது அவன் தான் என்பதால் கொலைக் குற்றத்தில் எனக்கு பங்கு இல்லை, நான் நிரபராதி'' என்று கூறுவதைப் போன்று உள்ளது.

பெட்ரோலிய மண்டல விவகாரம்

பெட்ரோலிய மண்டல விவகாரம்

கதிராமங்கலத்தில் மட்டுமல்ல, நெடுவாசல், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெட்ரோலிய மண்டலம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதுமட்டுமின்றி, தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்ததும் திமுக அரசு தான்.

அப்பாவி போல..

அப்பாவி போல..

இவ்வளவு துரோகங்களையும் செய்து விட்டு, ஒரு பாவமும் செய்யாத அப்பாவி போன்று நடிப்பதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். திமுக கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்ட அதிமுக இத்திட்டத்தைக் கைவிடாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள வினா மிகவும் அபத்தமானது.

கேடுவிளைவிக்கும் திட்டங்கள்

கேடுவிளைவிக்கும் திட்டங்கள்

அதிமுகவும், திமுகவும் எப்போதுமே மற்றவர்களின் நல்ல திட்டங்களை பின்பற்றியதில்லை. அதேநேரத்தில் கேடு விளைவிக்கும் திட்டங்களை அப்படியே பின்பற்றும். அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், ஆற்றுமணல் கொள்ளை ஆகியவற்றை அதன்பின் வந்த திமுக அப்படியே செயல்படுத்தவில்லையா? அதேபோல் தான் திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட கதிராமங்கலம் திட்டத்தையும் அதிமுக அரசு அப்படியே பின்பற்றுகிறது.

அரைவித்தியாசம் கூட இல்லை

அரைவித்தியாசம் கூட இல்லை

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஆறு வித்தியாசங்களல்ல... அரை வித்தியாசம் கூட இல்லாத நிலையில், திமுகவின் பேரழிவுத் திட்டத்தை அதிமுக செயல்படுத்துவதில் வியப்பு எதற்கு? திமுகவின் திட்டத்தை அதிமுக செயல்படுத்தியது ஏன்? என்று நண்பர் மு.க.ஸ்டாலின் வினவுகிறார். திமுக ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட கதிராமங்கலம் திட்டம் 2001-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது.

 செய்யாதது ஏன்?

செய்யாதது ஏன்?

அதன்பின் 2006 ஆம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக 2011 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடித்தது. இந்த காலத்தில் மத்திய அரசிலும் திமுக தான் அங்கம் வகித்தது. அதைப் பயன்படுத்தி கதிராமங்கலம் திட்டத்தை திமுக ரத்து செய்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியது ஏன்? என்பதை செயல் தலைவர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

சட்டசபையில் மசோதா

சட்டசபையில் மசோதா

இப்போதும் கூட ஒன்றும் குறைந்து விடவில்லை. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் அப்பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு செயல் தலைவர் ஸ்டாலின் தயாரா?

 பாவங்களுக்கு விரைவில் தண்டனை

பாவங்களுக்கு விரைவில் தண்டனை

திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதற்காக மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் ஸ்டாலின், திமுக ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு மட்டும் பொறுப்பேற்க மறுப்பது என்ன வகையான நியாயம் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கட்சி திமுக. கதிராமங்கலம், நெடுவாசல், நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படவுள்ள மக்கள் ஆகியோருக்கு செய்த பாவங்களில் இருந்து திமுக ஒருபோதும் விடுபட முடியாது. திமுக செய்த பாவங்களுக்கு மக்கள் விரைவில் தண்டனை அளிப்பர்.

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

English summary
PMK MP Dr Anbumani Ramadoss has slammed that DMK Working President MK Stalin on Kathiramangalam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X