For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அம்மா" இருக்கும் இடமே தலைமைக் கழகம்... நடு ரோட்டில் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : ராமர் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி என்பது போல... முதல்வர் ஜெயலலிதா இருக்கும் இடம்தான் அதிமுகவினருக்கு தலைமைக் கழகம், அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலகம் என்பதாக மாறிவிட்டது சென்னை அப்பல்லோ மருத்துவமனை.

கடந்த 22ஆம் தேதி இரவு 11 மணிக்கு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. இன்றோடு 9 நாட்கள் ஆகிவிட்டன. முதல்வரை தினசரி தலைமைச் செயலகத்தில் பார்க்கும் அதிகாரிகளும் சரி, போட்டோ மூலமாக பார்க்கும் அதிமுக தொண்டர்களும் சரி கடந்த 9 நாட்களாக பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு அப்பல்லோ மருத்துவமனை ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், காய்ச்சல் காரணமாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்பட்டு இருந்தது. தமிழகம் முழுக்க உள்ள அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த ஆரம்பித்தார்கள்.

குவிந்த தொண்டர்கள்

குவிந்த தொண்டர்கள்

அப்பல்லோ மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கிரீம்ஸ் ரோடு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 23ஆம் தேதி மதியமே முதல்வர் வீடு திரும்புவார் என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள். ‘முதல்வர் அம்மா நலமுடன் இருக்கிறார்' என மருத்துவமனை வளாகத்துக்குள் போய்விட்டு வந்த பொன்னையனும், பண்ருட்டி ராமச்சந்திரனும் பேட்டி கொடுத்தார்கள்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

ஜெயலலிதா பரிபூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி உட்பட அரசியல்கட்சி தலைவர்கள் அனைவருமே வாழ்த்து அறிக்கை வெளியிட்டனர். ஆனால், 23ஆம் தேதி மாலை வரையில் சசிகலா, இளவரசி தவிர வேறு யாரும் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. பார்க்க அனுமதிக்கவும் இல்லை.

பரவும் வதந்திகள்

பரவும் வதந்திகள்

ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் என்ற தகவல் பரவியது. ஆனால், ‘அப்படி எதுவும் இல்லை' என அதிமுகவினர் மறுத்தனர். 25ஆம் தேதி இரவு 7 மணிக்கு செய்தியாளர்கள் யாரும் இல்லாத பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை அப்பல்லோ மருத்துவமனை நடத்தியது. அதில், ‘காய்ச்சல் குணமடைந்து முதல்வர் வழக்கமான உணவுகளை உட்கொண்டு வருகிறார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போகிறார் என்ற தகவலில் உண்மை இல்லை என்று சொன்னார்கள் அப்பல்லோ மருத்துவர்கள்.

ஓய்வு எடுப்பார் முதல்வர்

ஓய்வு எடுப்பார் முதல்வர்

முதல்வரைப் பற்றி வதந்தி பரவுவது அதிகரிக்கவே நேற்று இரவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கமான அறிக்கையை வெளியிட்டது. அதில் முதல்வர் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நன்கு உடல்நலம் தேறி வருகிறார். அவருக்கு தேவையான அனைத்துவிதமான மருத்துவப் பரிசோதனைகளும் முடிந்து விட்டது. அவருக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுவதாலும், உடல்நலம் முழுமையாக சரியாகவும் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்று அந்த தெரிவிக்கிறது.

எப்போது வீடு திரும்புவார்

எப்போது வீடு திரும்புவார்

கடந்த 8 நாட்களாக இதே தகவலைத்தான் கூறி வருகிறது அப்பல்லோ மருத்துவமனை. சென்னையில் உள்ள எல்லா சாலைகளும் அப்பல்லோவை நோக்கியே இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது பற்றி அப்பல்லோ மருத்துவமனை இதுவரை தகவல் எதுவும் வெளியிடவில்லை.
முதல்வரைக் காண அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்தாலும் இதுவரை யாரும் முதல்வரைச் சந்திக்கவில்லை என்றே தெரிகிறது. சந்திக்க அனுமதியும் இல்லை. எல்லோருமே தரைத்தளம், முதல்தளம் வரை போகிறார்கள். வருகிறார்கள். தேவைப்படும்பட்சத்தில் சசிகலா மட்டுமே வந்திருப்பவர்களை பார்க்கிறார். சில தகவல்களைச் சொல்லி அனுப்புகிறாராம்.

பரவும் வதந்திகள்

பரவும் வதந்திகள்

முதல்வர் உடல்நிலை பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவுவதால் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. தனது உடல்நிலை குறித்து அவ்வப்போது பரவும் வதந்திகள் பற்றி முதல்வரின் கவனத்துக்கும் போயிருக்கிறது. அதற்கு எதுவும் சொல்லாமல் சிரிக்கிறாராம். முதல்வர் ஜெயா டி.வி.யில் பேசப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவரது அறைக்குள் சின்ன பேப்பரை கொண்டு செல்லவே அனுமதி இல்லாத போது கேமரா சகிதமாக யாரையும் அனுமதிக்க மறுத்து விட்டார்களாம் மருத்துவர்கள்.

அப்பல்லோவில் அதிமுகவினர்

அப்பல்லோவில் அதிமுகவினர்

டெல்லியில் 29ம் தேதி உமாபாரதி தலைமையிலான கூட்டம் தொடர்பாக மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக 28ம் தேதி மாலை தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. இது அவ்வப்போது அதிமுகவினரை ஆறுதல்படுத்துவதற்காகத்தான் என்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிமுகவினர் வேலையைத் தொடங்கிவிட்டாலும், தேர்தல் கிடக்குதுங்க... அம்மா நல்லா வந்தாலே போதும் என்பதும் பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் மனநிலையாக இருக்கிறது.

தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி

அப்பல்லோ மருத்துவமனை முன்பு கூட்டுப் பிரார்த்தனையிலும் அதிமுகவினர் ஈடுபட்டனர். வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும், தொண்டர்களும் இணைந்து இதில் கலந்து கொண்டனர். அப்போது பூசாரி ஒருவர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி நடுரோட்டிலேயே சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து அபிஷேகம் செய்த காட்சியைப் பார்த்து அதிமுகவினர் உணர்ச்சிவசப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் போல பேசுவாரா?

எம்.ஜி.ஆர் போல பேசுவாரா?

அமெரிக்காவில் இக்கட்டான சூழ்நிலையில் சிகிச்சை பெற்ற அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் பேசியது போல இப்போது ஜெயலலிதா தனது முகத்தைக் காட்ட வேண்டும். ஏதாவது ஒரு சில வார்த்தைகள் பேசவேண்டும் என்பதே அப்பல்லோ மருத்துவமனை வாசலில் ஏக்கத்துடனும் கண்களில் கண்ணீருடனும் காத்திருக்கும் அதிமுகவினரின் ஆதங்கமாக உள்ளது. முதல்வர் முகம் காட்டுவாரா?

English summary
A bunch of AIADMK supporters sat all day outside Chennai's Apollo hospital where chief minister J Jayalalithaa is being treated after she was admitted last Thursday on 22nd September. The hospital had said she was being treated for fever and dehydration. Days after that, as the supporters await news; the state bureaucracy is functioning as usual' with instructions said to be coming from the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X