For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவை மட்டும் திட்டவே இல்லையே அமீத் ஷா... ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே மறைமலைநகரில் நேற்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் அமீத் ஷா, திராவிடக் கட்சிகளைப் பொதுவாக ஒரு பிடி பிடித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சித்தார். ராகுல் காந்தியை விமர்சித்தார். அதேசமயம், அதிமுக ஆட்சியையும், அதன் குறைபாடுகளையும் ஒரு குறிப்பிட்டுப் பேசவே இல்லை. அதிமுக ஆட்சியைக் குறை கூறிப் பேசவில்லை. அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்து வரும் குற்றச்சாட்டுக்கள், ஏன் தமிழக பாஜகவினர் கூறி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கூட அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

அதிமுக மீதான குற்றச்சாட்டை முன்வைக்காமல் அமீத் ஷா பேசியது யோசிக்க வைப்பதாக உள்ளது.

ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக ரகசியமாக உறவு கொண்டிருப்பதாக ஒரு செய்தி உலா வரும் நிலையில் அமீத் ஷாவின் மேலோட்டமான பேச்சு பல வித சிந்தனைகளையும் தட்டி எழுப்புவதாக உள்ளது.

அமீத் ஷாவின் பேச்சிலிருந்து...

தமிழக மக்களுக்கு நன்றி

தமிழக மக்களுக்கு நன்றி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழகத்தில் 2 பேர் வெற்றி பெற்றனர். வாக்குசதவீதம் 19 சதவீதமாக உயர்ந்தது. வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

காங்கிரஸுக்கு வெறும் 44 இடங்களே

காங்கிரஸுக்கு வெறும் 44 இடங்களே

30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சி தனி பெரும்பான்மையோடு, இப்போது ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தது. கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளுக்கு ஒரு சில இடங்களில் தான் வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் நமது தேசம் நிலையான அமைப்பை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார் ராகுல்

எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார் ராகுல்

இந்த நிலையில், ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடந்து வருகிறது. ஜார்கண்ட் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும்போது, ஆறு மாத நரேந்திரமோடி ஆட்சி என்ன செய்தது என்று கூறியுள்ளார். என்னென்ன செய்தோம் என்பதை நான் சொல்கிறேன். ஆனால் 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நீங்கள் என்ன செய்தீர்கள்.

வறுமை வாட்டி வதைக்கிறது

வறுமை வாட்டி வதைக்கிறது

வறுமை வாட்டி வதைக்கிறது. ஏழை மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பின், முதல் நடவடிக்கையாக விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளி ஸ்பூனில் பால் குடித்த ராகுல்

வெள்ளி ஸ்பூனில் பால் குடித்த ராகுல்

ராகுல்காந்தி பிறந்தது முதல் வெள்ளி ஸ்பூனில் பால் குடித்து இருப்பார். ஆனால் டீக்கடையில் வேலை பார்த்து உயர்ந்தவர் நரேந்திரமோடி. விலைவாசி உயர்வால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பது அவருக்கு நன்கு தெரியும்.

டீசல் விலையைக் குறைத்தீர்களா

டீசல் விலையைக் குறைத்தீர்களா

கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை குறைந்ததா? இல்லை. ஆனால் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் 10 முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தில் மாதம் ரூ.ஆயிரம் மிச்சமாகும்.

விலைவாசி குறையவே இல்லை

விலைவாசி குறையவே இல்லை

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு குறியீட்டு எண் குறைந்ததே இல்லை. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் குறைந்துள்ளது. நவம்பர் மாதம் விலைவாசி உயர்வு குறியீடு பூஜ்யத்திற்கு வந்தது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

முன்பு நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருந்தது. படித்த இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். ஆனால் பா.ஜ.க. ஆட்சி அமைத்தபோது, ஆகஸ்டு 15-ந்தேதி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்காக ‘மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தை அறிவித்தார். அறிவித்த ஒரு மாதத்திலேயே அந்த திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளும், இந்திய உற்பத்தியில் மூலதனம் செய்ய தயாராக உள்ளனர். இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் 6 மாத பா.ஜ.க. ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று ராகுல்காந்தி கேட்கிறார்.

எத்தனை எத்தனை ஊழல்கள்

எத்தனை எத்தனை ஊழல்கள்

அவர்களது 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக் கற்றை ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு கட்டி கொடுத்த ஆதர்ஷ் வீட்டு திட்டத்திலும் ஊழல் என பல்வேறு ஊழல்கள் நடந்தன.

திமுக மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்

திமுக மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்

10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் பாரத மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். ராகுல்காந்திக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், 5 ஆண்டுகால எங்களது ஆட்சிக்கு பிறகு மீண்டும் மக்களை சந்தித்து வாக்கு கேட்கும்போது, எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இருக்காது.

அரசியல் பேச வரவில்லை

அரசியல் பேச வரவில்லை

நான் இங்கு அரசியல் பேச வேண்டும் என்று வரவில்லை. எனது மனதில் உள்ளதை சொல்ல வந்துள்ளேன். பா.ஜ.க. நாட்டில் உள்ள மிகப்பெரிய கட்சி. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சி. வாரிசுகளை உருவாக்கும் கட்சி அல்ல.

கடலோரம் பலவீனம்

கடலோரம் பலவீனம்

இந்த நேரத்தில் நாம் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதாவது, இந்திய கடற்கரையோர மாநிலங்களில் பா.ஜ.க. பலவீனமாக உள்ளது. நான் பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது.

உங்களுக்கு என்ன வேண்டும்

உங்களுக்கு என்ன வேண்டும்

இதை செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? குடும்ப அரசியல் முடிவுக்கு வரவேண்டும் என்று எண்ணுகிறீர்களா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உலகத்தில் வாழும் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் கவுரவமாக வாழ வேண்டுமென எண்ணுகிறீர்களா? அப்படி என்றால் தமிழகத்தில் பா.ஜ.க.வை பெரிய கட்சியாக மாற்ற வேண்டும். தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டு இருக்கிறது. உங்களிடம் நான் வேண்டுவது எல்லாம் தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் பூத்துகளுக்கு சென்று பூத்துக்கு 100 பேர் வீதம் 60 லட்சம் உறுப்பினர்களை பா.ஜ.க.வில் சேர்க்க வேண்டும்.

திமுக, அதிமுக மாறி

திமுக, அதிமுக மாறி

இதை நீங்கள் செய்தால் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி என்ற நிலைமாறி தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி நீண்டகாலம் இருக்கும். நான் மனம் திறந்த ஒன்றை கூற விரும்புகிறேன். தமிழகத்தில் மரியாதை, கவுரவம் ஏற்பட நீண்ட நாள் நரேந்திரமோடி ஆட்சி மத்தியில் இருக்க வேண்டும். 7 கடலோர மாநிலங்களிலும் பா.ஜ.க.வை வலிமை மிக்க கட்சியாக மாற்ற வேண்டும். இல்லையென்றால், நீண்டநாள் மத்தியில் பா.ஜ.க.வால் ஆட்சி செய்ய இயலாது.

மோடியின் தூதராக மாறுங்கள்

மோடியின் தூதராக மாறுங்கள்

பா.ஜ.க. தொண்டர்கள் விரும்புவது, தமிழகம் வலுவாக மாற வேண்டும் என்பது தான். நீங்கள் அனைவரும் நரேந்திரமோடியின் தூதராக, பா.ஜ.க.வின் தூதராக தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் சென்று உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தமிழகத்தின் கவுரவத்தை, தமிழனின் கவுரவத்தை காப்பாற்ற தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்றார் ஷா.

இவருக்குப் பதில் அவர்கள்

இவருக்குப் பதில் அவர்கள்

ஷாதான் அதிமுக அரசைக் குறை கூறவில்லையே தவிர தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜவும், பொதுச் செயலாளர் முரளிதர ராவும் அதிமுக அரசைக் குறை கூறிப் பேசினர்.

English summary
CHENNAI: In a speech that largely spared the ruling AIADMK in Tamil Nadu, BJP president Amit Shah chose to train his guns on DMK and Congress over their alleged complicity in scams during the erstwhile UPA regime. It was left to BJP general secretary Muralidhar Rao and state BJP chief Thamizhisai Soundararajan to make specific attacks on the Dravidian parties. Shah admitted that the party had much to do in TN after winning polls in various states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X