ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.. முதல் ஆளாக மனு செய்த தேமுதிக!

ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. முதல்நாளே தேமுதிக வேட்பாளர் மதிவாணன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்த தேமுதிக வேட்புமனு தாக்கல் செய்வதிலும் முந்திக்கொண்டது. தேமுதிக வேட்பாளர் மதிவாணன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். சில சுயேட்சைகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இடைத்தேர்தலில் பல முனைப்போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி அடங்கியுள்ள சென்னை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தும் அலுவலராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநர் தி.நா.பத்மஜாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் செயல்படுகிறது.

வேட்புமனு தாக்கல்

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய 23ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் தினமும் காலை 11 முதல் மாலை 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம்.

பிரமாணப்பத்திரம்

வேட்புமனு படிவத்தை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். மனுவுடன், பொது வேட்பாளராக இருப்பின் ரூ.10 ஆயிரமும், எஸ்சி, எஸ்டி வேட்பாளராக இருப்பின் ரூ.5 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

வேட்புமனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்கள், தங்கள் கட்சியின் பரிந்துரை படிவத்தை இணைக்க வேண்டும். வேட்பாளரின் அஞ்சல் தலை அளவு புகைப்படத்தை தனியாக அளிக்க வேண்டும்.

 

டிடிவி தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தநிலையில், சசிகலா அணி சார்பாக டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் வேட்பாளராக அவைத்தலைவர் மதுசூதனன் நிறுத்தப்படலாம் என்று தெரியவருகிறது.

பலமுனைப் போட்டி

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். திமுக சார்பில் மருதுகணேஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக வேட்பாளராக மதிவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேமுதிக வேட்பாளர்

தேமுதிக வேட்பாளர் மதிவாணன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முதல் ஆளாக தனித்து போட்டி என்று அறிவித்து வேட்பாளரையும் அறிவித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதேபோல வேட்புமனுவையும் முதல் ஆளாக தாக்கல் செய்ய வைத்துள்ளார். இதேபோல இன்று சில சுயேட்சைகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

English summary
The much expected by-election to RK Nagar Assembly constituency will be held on April 12. Filing of nominations will begin today with the last date for the process set on March 23.
Please Wait while comments are loading...