காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால், தமிழக அணைகளின் கட்டுப்பாடு யாரிடம்?

By:

-ஆர் மணி

நான்கு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுவிட்டது.

தமிழ் நாட்டுக்கு செப்டம்பர் 21 ம் தேதியிலிருந்து 30 ம் தேதி வரையில் தினமும் 3,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி சூப்ரவைசரி கமிட்டி செப்டம்பர் 19 ம் தேதி உத்திரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யூ.யூ. லலித் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 3,000 கன அடிக்குப் பதிலாக தினமும் 6,000 கன அடி திறந்து விட வேண்டும் என்று உத்திரவிட்டது.

இந்த உத்திரவுடன் உச்ச நீதிமன்றம் நிற்கவில்லை. அதற்கு ஒரு படி மேலே போய் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வாக 'காவிரி மேலாண்மை வாரியத்தை' (Cauvery Management Board) நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்திரவிட்டுவிட்டது.

Cauvery Management Board and its plus minuses

இதில் சுவாரஸ்யமான விஷயம், 'காவிரி மேலாண்மை வாரியத்தை' அமைக்க உத்திரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அன்றைய விசாரணையின் போது தமிழக அரசு எதுவும் சொல்லாமலேயே இரண்டு நீதிபதிகளும் இந்த உத்திரவை பிறப்பித்ததுதான். 2007 ம் ஆண்டு வெளியான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகச் சொல்லி கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தங்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் போதாது என்று சொல்லி, தமிழகமும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் 2007 முதல் நிலுவையில் இருந்து வருகின்றன.

2013 ல் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர் வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தத் துவங்கியது. ஆனால் கர்நாடகம் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிராக தாங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களின் மீதான தீர்ப்பு வரும் வரையில் மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாதென்று வலியுறுத்தியது. இந்த கட்டத்தில்தான் டிசம்பர் 2, 2013 ல் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா மற்றும் நீதிபதி குரியன் ஜோசஃப் அடங்கிய அமர்வு கர்நாடகத்தின் மேல் முறையீட்டு மனுக்கள் மீது இறுதி தீர்ப்பு வரும் வரையில் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியது அதற்கு மாறாக ஒரு இடைக்கால ஏற்பாடாக காவிரி சூப்ரவைசரி கமிட்டி என்ற ஒன்றினை ஏற்படுத்த உத்திரவிட்டது.

ஆகவே தங்களுடைய மூல மனு, அதாவது நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு நிலுவையில் இருக்கையில் எவ்வாறு 'காவிரி மேலாண்மை வாரியத்தை' ஏற்படுத்த முடியும் என்பதுதான் கர்நாடகத்தின் கோபம். தன்னுடைய வரம்பை மீறி, யாரும் கேட்காமலேயே உச்ச நீதிமன்றம் இதில் செயற்பட்டிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் தேவே கவுடா கூறியது இந்த ஒரு குறிப்பிட்ட அம்சத்தை பற்றியதுதான்.

'காவிரி மேலாண்மை வாரியம்' அமைப்பது என்பதும் சுலபமான காரியமல்ல என்று சொல்லப் படுகிறது. முதலில் வாரியத்தை அமைத்த பின்னர் அதற்கான அதிகார வரம்புகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டு தெளிவாக யாருக்கு என்ன அதிகாரம் என்பது வரையறுக்கப்பட வேண்டும். வாரியத்தின் தலைவரும் இரண்டு உறுப்பினர்களும் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரியின் சார்பில் தலா ஒரு உறுப்பினர் இருப்பர். வாரியத்தின் செயலராக மத்திய அரசால் ஒருவர் நியமிக்கப் படுவார். செயலருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.

இந்த வாரியத்தின் கீழ் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை கமிட்டி (Cauvery Water Regulation Committee) என்ற அமைப்பு அமைக்கப்படும். இதில் ஒரு தலைவர், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள், மத்திய நீர்வள ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர் என்று உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வோர் நாளும் பெய்யும் மழையின் அளவு, நீர் வெளியேற்றம் மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றை இந்த மையம்தான் பதிவு செய்யும். இதற்காக பிரத்தியேகமான ஊழியர்களும், நிபுணர்களும் இந்த அமைப்பிடம் இருப்பர். சம்மந்தப்பட்ட மாநிலங்களில் பெய்யும் மழையின் அளவு, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் துல்லியமாக இதனால் பதிவு செய்யப்பட்டுவிடும்.
ஆனால் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கப்பட்டவுடனேயே சம்மந்தப்பட்ட அனைத்து மாநிலங்களின் - கர்நாடகம், தமிழ் நாடு மற்றும் கேரளா - காவிரி நீரைத் தேக்கும் அனைத்து அணைகளுமே இந்த வாரியத்தின் கட்டுப்பாட்டில் போய்விடும் என்பதுதான்.

2007 ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகாவின் ஹேமாவதி, ஹராங்கி, கபினி, கிருஷ்ணசாகர் அணைகளும், தமிழ் நாட்டின் லோயர் பவானி, அமராவதி, மேட்டூர் அணைகளும், கேரளத்தின் பனசுரா சாகர் அணையும் 'காவிரி மேலாண்மை வாரியத்தின்' கட்டுப் பாட்டிற்குள் போய் விடும். வாரியத்தின் ஒட்டு மொத்த வழிகாட்டுதலின்படிதான் சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களது அணைகளைத் திறக்க முடியும். வாரியத்தின் ஊழியர்கள் அந்தந்த மாநில ஊழியர்கள் தங்களது உத்திரவுகளை செயற்படுத்துகிறார்களா என்பதை கறாராக கண்காணிப்பார்கள்.

தமிழ் நாட்டின் மூன்று அணைகள் லோயர் பவானி, மேட்டூர் மற்றும் அமராவதி அணைகள் முற்றிலுமாக 'காவிரி மேலாண்மை வாரியத்தின்' கட்டுப்பாட்டின் கீழ் போவதை மாநில அரசும், அரசியல் கட்சிகளும் எப்படி ரசிக்கும் என்று தெரியவில்லை. 'பிரச்சனை பற்றாக்குறை காலத்தில்தான் வருகிறது. தண்ணீர் இல்லாத நேரத்தில், கடை நிலை மாநிலமான தமிழகத்துக்கு வரும் நீரை நாம் விரும்பிய வண்ணம் திறந்து விட வாரியம் சம்மதிக்கும். ஆனால் இரண்டுங் கெட்டனான நேரத்தில் அதாவது நீர் வரத்து நிச்சயமற்று இருக்கும்போது, எவ்வளவு நீரை விடுவிப்பது, எவ்வளவு நீரை அணைகளில் இருப்பு வைத்துக் கொள்ளுவது என்பது தமிழகத்தைப் பொறுத்த வரையில் மாநில அரசு எடுக்கும் முடிவென்பது நிர்வாகரீதியிலான முடிவு மட்டுமல்ல, அது ஓர் அரசியல்ரீதியிலான முடிவும் தான். இங்குதான் சிக்கல் வரும். அத்தகைய கட்டங்களில் வாரியத்தின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக அரசுக்கு வரும், அதனை மாநில அரசு எப்படி ரசிக்கும், கையாளும் என்பதுதான் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது,'' என்கிறார் பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர்.

இன்னும் சொல்லப் போனால் காவிரி நீர் பங்கீட்டில் 1998 ல் வாஜ்பாய் அரசு கொண்டு வந்த அமைப்புக்கு மாற்றாக வேறோர் அமைப்பைக் கொண்டு வர வேண்டும் என்று 2002 ல் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த முன் முயற்சியில் இந்த விவகாரம் பேசப்பட்டது.

"ஆம். 2002 ல் ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான ஓர் அமைப்பு வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரிடம் அனைத்து கட்சி குழுவினரை அழைத்துச் சென்று மனுவும் கொடுத்தார். அதில் கர்நாடகத்தில் உள்ள காவிரி பாயும் அணைகளின் மொத்த கட்டுப்பாட்டையும் அந்த அமைப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போதே, இது தமிழக அணைகளையும் மத்திய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு போய் சேர்ப்பதில் முடிந்து விடும் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் தமிழக அணை யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கும் என்பது பற்றி அப்போது ஜெயலலிதா வாயே திறக்கவில்லை. பின்னர் இந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது,'' என்கிறார் விவசாயிகள் சங்கத் தலைவரும், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ வுமான எஸ்.பாலகிருஷ்ணன்.

"இந்த விவகாரம் எல்லாமே எத்தகைய விதிமுறைகள் வகுக்கப்படப் போகின்றன என்பதைப் பொறுத்தது தான் இருக்கிறது. அரசியல் சாசனத்தின் படி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப் பட்டவுடன் கூடும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் அதற்கான விதிகள் (framing of rules) வகுக்கப் படும். அவ்வாறு விதிகள் வகுக்கப் பட்டவுடனேயே குறிப்பிட்ட நதி பாயும் அனைத்து அணைகளின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும் வாரியத்திடம் போய் விடும். ஆனால் தமிழகத்திற்கு இதில் பாதிப்பு இருக்காது என்றுதான் நினைக்கிறேன். காரணம் நாம் கடைநிலை மாநிலம் மட்டுமல்ல, நாம் நீரை எப்போதுமே பார்த்துப் பார்த்துத்தான் செலவு செய்கிறோம்,'' என்கிறார் பாலகிருஷ்ணன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று கிளிப்பிள்ளை போல தமிழகத்தில் பேசும் பெரும்பாலானோருக்கு அந்த வாரியம் கர்நாடகத்தின் அணைகளை மட்டுமல்ல, தமிழகத்தின் அணைகளையும் சேர்த்துத்தான் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்பது தெரியாததுதான் வேடிக்கையான விவகாரம். இது விவசாயகளுக்கு நன்மை பயக்கும் என்பதை கூறும் விவசாயிகளே கூட இது அரசியல் ரீதியில் கட்சிகளுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்பை மறுப்பதிற்கில்லை என்கின்றனர்.

"நாம் கடைநிலை மாநிலம். தமிழகம் தண்ணீர் திறந்து விட்டுத்தான் மற்ற மாநிலத்துக்கு போக வேண்டும் என்பதில்லை. அதனால் இந்த மூன்று அணைகளின் கட்டுப்பாடு வாரியத்திடம் போவதில் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. ஆனால். அரசியில் கட்சிகள் இதில் தங்களது குறுகிய அரசியல் நலன்களுக்காக பிரச்சனைகளை உருவாக்குவதில் வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுப்பதிற்கில்லை,'' என்கிறார் வீராணம் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் இளங்கீரன்.

ஆகவே மேலாண்மை வாரியத்தின் உண்மையான செயற்பாடு என்பது எத்தகைய சட்ட விதிமுறைகள் வகுக்கப் படப் போகின்றன இந்த விவகாரத்தில் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கின்றது. தன்னுடைய இறுதித் தீர்ப்பில் நடுவர் மன்றம் இவ்வாறு சொல்லுகிறது: "இந்த தீர்ப்பை உறுதியாக அமல்படுத்த முறையான மேலாண்மை வாரியம் அமைக்கப் பட வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த தீர்ப்பு வெறும் காகிதப் புலியாகத் தான் இருக்கும்,'' என்கிறது.

தமிழகத்தில் காவிரி பாயும் மூன்று அணைகளின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும் அமைக்கப் படவிருக்கும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் போகப் போகிறது. இது என்ன மாதிரியான புதிய பிரச்சனைகளை உருவாக்கப் போகிறது என்பதை தற்போது யூகிக்க முடியவில்லை. நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனை அல்லது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதைத் தாண்டி காவிரிப் பிரச்சனை என்பது அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சனையாகவும் மாறிப் போய் விட்ட மாநிலம் தான் தமிழகம். ஆகவே தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைவது என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கப் போகிறது என்பதைக் காண சற்று பொறுத்திருக்கத் தான் வேண்டும்.

English summary
Columnist R Mani's article on Cauvery Management Board and its plus minuses.
Please Wait while comments are loading...

Videos