For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா.. காவிரிக்காக உண்ணாவிரதம் இருப்பாரா ஜெ?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று பெங்களூருவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரிக்காக 1993, 2007ம் ஆண்டுகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது போல முதல்வர் ஜெயலலிதா இப்போதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

50 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களும் காவிரி மேற்பார்வை குழுவை அணுகலாம் என்றும் கூறியது.

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இதனையடுத்து 20ம் தேதி உச்சநீதிமன்றம், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பான வழக்கில் 21ம் முதல் வரும் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்தில் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் கர்நாடகாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் விட முடியாது

தண்ணீர் விட முடியாது

புதன்கிழமை மாலை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியது. அதனையடுத்து கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை சட்டசபைக் கூட்டம்

சனிக்கிழமை சட்டசபைக் கூட்டம்

முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம், 2து முறையாக மீண்டும் கூடியது. அதில், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு விவகாரம் தொடர்பாக சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை நாளை மறுநாள் கூட்டவும், அது வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை ஒத்திவைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவிரி வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது கர்நாடக அரசு இப்படி முடிவு எடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் ஆணையம்

காவிரி நதிநீர் ஆணையம்

1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவை மதிக்காத கர்நாடகா தண்ணீர் விட மறுத்தது. சித்துதோஷ் முகர்ஜி தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் 1992ல் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இடைக்கால தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை மத்திய அரசின் 'கெஜட்'டில் வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. பல முறை கோரிக்கை வைத்தும் இடைக்கால தீர்ப்பை வெளியிடாமல் அப்போதைய பிரதமர்நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசு இழுத்தடித்தது.

ஜெயலலிதா உண்ணாவிரதம்

ஜெயலலிதா உண்ணாவிரதம்

இதை கண்டித்து 1993ல், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவரே போராட்டத்தில் ஈடுபட்டது அப்போது நாட்டிலேயே முதல்முறையாகும். எனவே ஜெயலலிதா உண்ணாவிரதம் நாடு முழுவதும், பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர்

ஜெயலலிதாவின் உண்ணாவிரதம், 4 நாட்கள் நீடித்த நிலையில் மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்தது. அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் வி.சி.சுக்லா உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து இடைக்கால தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட உறுதியளித்ததோடு முதல்வருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்தும் வைத்தார்.

2007ல் ஒருநாள் உண்ணாவிரதம்

2007ல் ஒருநாள் உண்ணாவிரதம்

2007 ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா கோரிக்கை விடுத்து வந்ததோடு மத்திய அரசை எதிர்த்து அதே ஆண்டு மார்ச் மாதம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை வள்ளுவர் கோட்டம் முன்பு ஜெயலலிதா மேற்கொண்டார்.

வரலாறு திரும்புமா?

வரலாறு திரும்புமா?

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உரிமையான தண்ணீரை வழங்க கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் 1993ம் ஆண்டு, 2007ம் ஆண்டு அறப்போராட்டம் நடத்தியது போல உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த கர்நாடகாவைக் கண்டித்து காவிரி தண்ணீருக்காக இப்போதும் முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

English summary
Jayalalithaa observed fast for three days on the Marina beach during her first tenure as Chief Minister in July 1993, demanding monitoring and implementation committees on the interim award of the Tribunal. Special legislative session of Karnataka to be held on Saturday to take final call on release of water to TamilNadu. Will Jayalalithaa to decide hunger strike against Karnataka?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X