For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடகு மலையிலிருந்து கர்நாடக சட்டசபை தீர்மானம் வரை... தகிக்கும் காவிரி!#cauvery

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று ஒற்றை வரியில் கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் போட்ட கர்நாடகா அரசு சார்பில் இன்று மீண்டும் ஒரு புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரி உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் வருகிற டிசம்பர் மாதம் கொடுக்கப்படும் என்றும் அந்த மனுவில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கு இடையிலான காவிரி நதிநீர் பிரச்சினை நேற்று தொடங்கிய பிரச்சினையல்ல, இது ஒரு நூற்றாண்டு கால பிரச்சனை. 30 ஆண்டு காலமாக தகிக்கத் தொடங்கியுள்ளது.

Cauvery Waters Dispute- A timeline:

•காவிரி நீரை பங்கிடுவதில் 1800ம் ஆண்டு முதலே பிரச்னை இருந்து வந்துள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1892ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

•இதுதான் காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் படி மைசூர் அரசு காவிரியின் குறுக்கே ஏதேனும் அணை கட்டத் திட்டமிட்டால், அதற்கு மெட்ராஸ் மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும். பாசனப் பரப்பை பெருக்குவதற்கும் மெட்ராஸ் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படுகிறது.

•அதைத் தொடர்ந்து 1924ம் ஆண்டு மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம், இருவரும் அணையை கட்டிக் கொள்ள அனுமதி வழங்குகிறது. அது மட்டுமல்லாமல், இரு மாகாணங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்குகிறது. அதே நேரம், இந்த ஒப்பந்தத்துக்கான ஆயுள் 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படுகிறது.

•மொழிவாரி மாநிலங்களாக தமிழகமும், கர்நாடகாவும் உருவான பின்னர் பிரச்னை தீவிரமடைந்தது. 1960 களில், கர்நாடக அரசு மேலும் இரண்டு அணைகள் கட்டும் பணிகளைத் துவங்கியது. அதற்குத் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. ஒப்பந்தத்தின்படி, புதிதாக அணைகளை ஏற்படுத்த தமிழகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், கர்நாடகம் இதைப் பொருட்படுத்தாமல் பணிகளைத் துவங்கியது. ஒப்பந்தம் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு தலைபட்சமாகப் போடப்பட்டது. அதற்கு கீழ்படிய முடியாது என்பதுதான் கர்நாடகத்தின் வாதம். இதற்குள் 1924ம் ஆண்டு ஒப்பந்தமும் காலாவதி ஆனது.

•1976ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு மாநில அரசுகளும் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. எனினும் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில் 1983ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

•தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 1990ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரிப் பிரச்னையை விசாரித்த நடுவர் மன்றம், 1991ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.

•கர்நாடக மாநிலம் ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், கர்நாடகா தனது பாசனப் பரப்பை 11 புள்ளி 2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டது.

•இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் பெரும் வன்முறை வெடிக்கிறது. ஏறத்தாழ 12 தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடாகாவிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். இடைக்கால தீர்ப்புக்கு தடைவிதித்து ஒரு அவசர சட்டத்தை கர்நாடகா கொண்டு வந்தது. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, அவசர சட்டத்தை ரத்து செய்கிறது.

•டிசம்பர் 11, 1991-ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு அந்த ஆணைக்கு கீழ்ப்படிந்து, உரிய அளவு தண்ணீரைத் தர மறுத்தது.

•ஜூலை 1993, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதி அருகே , தண்ணீர் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

•1995ம் ஆண்டு, போதிய மழையின்மையால் காவிரிப் பிரச்னை பூதகரமாகிறது. தமிழ்நாடு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது. உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் திறந்துவிட கோரிக்கை வைத்தது. உச்சநீதிமன்றம் 11 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. கர்நாடகா அரசு இதை நிராகரித்தது.

•1998ம் ஆண்டு, பிரதமரின் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்படுகிறது. இதில் புதுச்சேரி, தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகத்தின் முதல்வர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், இந்த அமைப்புக்கு அதிகாரம் இல்லாததால் கர்நாடக அரசு, நீர் திறக்க மறுப்பது தொடர்ந்தது.

•நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாக 2007ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி காவிரி நடுவர் மன்றம் தமது இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. ஒரு சராசரி ஆண்டில் தமிழகத்திற்கு கர்நாடகா 419 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

•இந்தத் தீர்ப்பையும் கர்நாடகா முழுமையாக அமல்படுத்தவில்லை. மாறாக தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாக 2007ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, 2013ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது.

•அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் உச்சநீதிமன்றத்தில் 2013 மார்ச் மாதத்தில் வழக்கு தொடர்ந்தது.

•2013 மே மாதத்தில் காவிரி நீர் திறப்பை உறுதி செய்வதற்கான காவிரி கண்காணிப்பு குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் தற்காலிக உத்தரவை மத்திய அரசு 2013 மே 24ம் தேதி வெளியிட்டது. எனினும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்து விட்டது.

•இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் 2013 ஜூன் 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

•ஜூன் 28ம் தேதி கர்நாடக முதல்வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வ‌ழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மே 13ம் தேதி நீதிபதி பி.எஸ் சவுஹான் காவிரி நடுவர் மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் நடுவர்‌ மன்றத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலவில்லை.

•2016ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதத்தில் சட்ட ஆணைய தலைவராக நியமனம் பெற்ற சவுஹான் காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஆண்டும் போதிய தண்ணீர் கையிருப்பு இல்லை எனக் கூறி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து விட்டது.

•50 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை கடந்த மாதம் மீண்டும் அணுகியது.

•உச்சநீதிமன்ற நீதிபதியே... 'வாழுங்கள்... வாழவிடுங்கள்...' என்று கருணை அடிப்படையில் தமிழகத்துக்கு நீரை ஒதுக்குங்கள் என்று கூறி விநாடிக்கு 15000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

•இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அப்போது உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20ம் தேதிவரை விநாடிக்கு 12000 கனஅடி தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் வன்முறை வெடித்தது.

• டெல்லியில் செப்டம்பர் 19ம் தேதி கூடிய காவிரி மேற்பார்வைக்குழு, செப்டம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு முறையிட்டது.

•தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேற்பார்வைக்குழுவின் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

•மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

•கடந்த 20ஆம் தேதி விசாரணையில், விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர், வரும் 27ஆம் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், மத்திய அரசு, நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அடுத்த விசாரணையை வரும் 27ஆம் தேதி மாலை நடைபெறும் என்று தெரிவித்து ஒத்திவைத்தது.

•உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடகா கடந்த 24ம் தேதி சிறப்பு சட்டசபையை கூட்டியதோடு கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் கர்நாடகாவிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று தீர்மானம் போட்டது.

•கர்நாடக அரசு சார்பில் இன்று மீண்டும் ஒரு புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரி உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் வருகிற டிசம்பர் மாதம் கொடுக்கப்படும் என்றும் அந்த மனுவில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

• குடகுமலையில் தொட்ங்கிய காவிரியின் பயணம் கர்நாடகா சட்டசபை வரை தகித்து வருகிறது என்பதே உண்மை.

English summary
This is the timeline of the case The sharing of waters of the cauvery river has been the source of a serious conflict between the two Indian states of Tamil Nadu and Karnataka. From 1892 to 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X