For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலையில் பயங்கர வெள்ளம்: தென்மாவட்டங்களில் இருந்து சென்னை துண்டிப்பு!!

By Madhivanan
Google Oneindia Tamil News

சென்னை: வரலாறு காணாத பெரும் மழை மற்றும் ஏரிகள் உடைந்து வெள்ளம் கரைபுரண்டோடுவதால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு வந்து சேருகின்றன. நீண்டதொலைவு இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை மாநகரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகலும் இடைவிடாத பேய்மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை- செங்கல்பாட்டு தேசிய நெடுஞ்சாலையையொட்டிய வண்டலூர், கிளாம்பாக்கம், நந்திவரம், கூடுவாஞ்சேரி, ஆதனூர். பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தோடுகின்றன.

gstflood

பெருமாட்டுநல்லூர் தர்காஸ் பகுதியில் தாங்கல் கரை உடைந்தது. இதனால் சாலையில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் ஓடுகிறது. நந்திவரம் பெரிய ஏரிக்கரை உடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காட்டாங்குளத்தூர் ஏரியும் உடைந்தது.

இந்த மழை வெள்ளம் மற்றும் ஏரிகளில் இருந்து வெளியேறிய தண்ணீர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் காட்டாறு போல் கரைபுரண்டோடியது. இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்திலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பகல் முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து சென்னை வரும் வாகனங்கள் உளுந்தூர்பேட்டையில் நிறுத்தப்பட்டு மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டது. இந்த வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர் வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.

இதேபோல் சேலத்தில் இருந்து வந்த வாகனங்களும் எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை முன்பு நிறுத்தப்பட்டு திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர் வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.

திண்டிவனம் பகுதியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து சலவாதி, வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி, காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.

இதன் காரணமாக சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பல மணி நேரம் தாமதமாக வந்தன.

வெளியூர் பேருந்துகள் ரத்து

சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகபாலிபுரம் சாலை, தாம்பரம் ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலை ஆகிய வழித்தடங்களில் பயணங்கள் மேற்கொள்ள தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம் அருகே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சட்ராஸ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை கோயம்பேடுக்கு பேருந்துகள் திருப்பிவிடப்பட்டன. இதனால் கூடுதலாக பயணிகள் 6 மணிநேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

English summary
Chennai remained inaccessible from the south Tamilnadu since Tuesday morning after GST Road was flooded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X